Published:Updated:

தூத்துக்குடியில் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல்! - தென்னிந்திய கடற்பகுதி பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்?

நீர்மூழ்கிக் கப்பல்
நீர்மூழ்கிக் கப்பல்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலான 'சிந்துஷாஸ்ட்ரா' என்ற நீர்மூழ்கிக் கப்பல் வருகை தந்திருக்கிறது. இந்தக் கப்பலின் வருகை, தென்னிந்திய கடலோரப் பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாகப் பார்க்கப்படுகிறது.

சமீபகாலமாக வங்காள ‌விரிகுடா பெருங்கடலில் இலங்கையையொட்டி சீனா தனது கடற்படை பலத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளது. இலங்கையிலுள்ள துறைமுகங்களை சீன நிறுவனங்கள், குத்தகைக்கு எடுத்துள்ளன. இந்தியாவின் வடக்குப் பகுதியான ’லடாக்’ பகுதியில் சீனா ஆக்கிரமிப்பில் ஈடுபட்டதால், அங்கு ஏற்பட்ட பதற்றம் முழுமையாக நீங்கவில்லை. இரு நாட்டுப் பிரதிநிதிகள் இடையே பேச்சுவார்த்தை பலமுறை நடந்தபோதிலும் முழுமையான அமைதி ஏற்படவில்லை.

தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த நீர்மூழ்கிக் கப்பல்
தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்த நீர்மூழ்கிக் கப்பல்

இந்தநிலையில், தென்பகுதியான தமிழகக் கடலோரம் இலங்கைப் பகுதியில், சீனா தன் கப்பற்படையை வலிமைப் படுத்திவருகிறது. தென்தமிழகத்தில், நெல்லை மாவட்டம் விஜயநாராயணத்திலுள்ள ஐ.என்.எஸ் கட்டபொம்மன், கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிதாக குலசேகரன்பட்டினத்தில் அமையவிருக்கும் ’ராக்கெட் ஏவுதளம்’ என மத்திய அரசின் மிக முக்கிய நிறுவனங்கள் இங்கு உள்ளன.

பதுங்கிப் பாயும் திட்டத்தில் சீனா.. சமாளிக்கத் தயாராகும் இந்தியா! - எல்லையில் நடப்பது என்ன?

இதையொட்டி, இந்தியத் தரப்பிலும் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரையிலான கிழக்குக் கடற்கரை சாலை, ராணுவ தளவாடங்களை எளிதாகக் கொண்டு வரும் வகையில் அமைக்கப்பட்டுவருகிறது.

தூத்துக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம்
தூத்துக்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம்

தேவை ஏற்பட்டால் போர் விமானங்கள் இந்தச் சாலைகளில் இறங்கும் வண்ணம் சாலைகள் அமைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அதற்கான பணிகள் ஒருபுறம் நடைபெற்றுவரும் நிலையில், இதன் ஒரு பகுதியாக, இந்திய கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் `சிந்துஷாஸ்ட்ரா’, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்திலுள்ள ஐ.என்.எஸ்.கட்டபொம்மன் கடற்படைக்கான கப்பல் தளத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

கப்பலில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறைச் சரிசெய்யவும், பெட்ரோல், டீசல் மற்றும் அடிப்படைத் தேவையான தண்ணீர் நிரப்புவதற்காகவும், இந்த நீர்மூழ்கிக் கப்பல் தூத்துக்குடி கப்பல்தளத்தில் நிறுத்தப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், நடுக்கடலில் போர் ஒத்திகைக்காகவும் இந்த 'சிந்துஷாஸ்ட்ரா' நீர்மூழ்கிக் கப்பல் வந்திருக்கலாம் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது. கப்பல் இன்னும் ஒரு வார காலம் தூத்துக்குடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படலாம் என்று கூறப்படுகிறது. தூத்துக்குடி துறைமுகத்தில் நீர்மூழ்கிக் கப்பல் நிலைநிறுத்தப்பட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துறைமுகக் கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்
துறைமுகக் கப்பல் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பல்

எனினும், இந்திய கடற்படை சார்பில் அதிகாரபூர்வ தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஏற்கெனவே இலங்கையில் சீனா கால்பதித்துள்ள நிலையில் நாட்டின் பாதுகாப்பு கருதி கிழக்கு கடற்கரை சாலைப் பகுதி விரிவாக்கப்படவிருக்கிறது. மேலும் தூத்துக்குடி பகுதியில் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு தளம் உருவாக்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது. தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கம், துறைமுகம் வந்த நீர்மூழ்கிக் கப்பல் என பாதுகாப்பை பலப்படுத்தும் வருகையாகவே இது பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்டுரைக்கு