Published:Updated:

`தாய் மரணம்; கூலி வேலை செய்து 3 மகள்களையும் ஒரே நேரத்தில் போலீஸாக்கிய தந்தை' தன்னம்பிக்கைக் கதை!

போலீஸ் சீருடையில் சகோதரிகள்

‘‘அம்மா இல்லாத பிள்ளைகளை நல்லா வளத்துருக்கேன்னு ஊருக்குள்ள எனக்கு நல்லபேர் வாங்கிக் கொடுத்திருக்கிறாங்க’’ எனப் பெருமை கொள்கிறார், 3 மகள்களையும் ஒரே நேரத்தில் காவலர்களாக்கிய தந்தை வெங்கடேசன்.

`தாய் மரணம்; கூலி வேலை செய்து 3 மகள்களையும் ஒரே நேரத்தில் போலீஸாக்கிய தந்தை' தன்னம்பிக்கைக் கதை!

‘‘அம்மா இல்லாத பிள்ளைகளை நல்லா வளத்துருக்கேன்னு ஊருக்குள்ள எனக்கு நல்லபேர் வாங்கிக் கொடுத்திருக்கிறாங்க’’ எனப் பெருமை கொள்கிறார், 3 மகள்களையும் ஒரே நேரத்தில் காவலர்களாக்கிய தந்தை வெங்கடேசன்.

Published:Updated:
போலீஸ் சீருடையில் சகோதரிகள்

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகிலிருக்கும் கீழ்ஆவதம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், விவசாயக் கூலித்தொழிலாளி. இவர் மனைவி ஷகிலா. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன் இருக்கிறார்கள். மூளையில் ஏற்பட்டிருந்த கட்டியால் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்னரே தாய் ஷகிலா காலமாகிவிட்டார். இதனால், தனி ஆளாக வெங்கடேசன் மிகவும் கஷ்டப்பட்டு நான்கு குழந்தைகளையும் வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். நல்ல கல்வியையும் கிடைக்கச் செய்தார். 27 வயதாகும் மூத்த மகள் பிரீத்திக்கு பிளஸ்-2 முடித்த உடனேயே திருமணமும் செய்து வைத்துவிட்டார். அதன்பின்னரும் அவரின் கனவை நிறைவேற்ற உதவிக்கரம் நீட்டினார். 25 வயதாகும் இரண்டாவது மகள் வைஷ்ணவி பி.ஏ பட்டம் பெற்றிருக்கிறார். 22 வயதாகும் இளைய மகள் நிரஞ்சனி பி.எஸ்.சி முடித்திருக்கிறார்.

சகோதரிகள்
சகோதரிகள்

சகோதரிகள் 3 பேருக்குமே காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற அலாதிப்பிரியம் இருந்ததால், அதற்கான பயிற்சியை தீவிரமாக எடுத்துவந்தனர். இந்த நிலையில், 2019-ல் நடந்த காவலர் தேர்வில் கலந்துகொண்ட 3 பேருமே, தேர்ச்சி பெற்றனர். மூன்று பேரும் ஒரே இடத்தில் தேர்வு எழுதவில்லை. மூத்தவர் வேலூரிலும், இரண்டாவது சகோதரி சென்னையிலும், மூன்றாவது சகோதரி திருவள்ளூர் மையத்திலும் தேர்வு எழுதினர். அதன்பின்னர் கொரோனா பொதுமுடக்கம் வந்துவிட்டதால் உடற்தகுதித் தேர்வு, மருத்துவப் பரிசோதனை தள்ளி தள்ளிப்போய் முடியவே ஒன்றரை ஆண்டு ஆகிவிட்டன. இதையடுத்து, இந்த ஆண்டு மார்ச் 13-ம் தேதியிலிருந்து இந்த மாதம் 19-ம் தேதி வரை மூன்று சகோதரிகளும் திருவள்ளூர் காவலர் பயிற்சி மையத்தில் தங்கியிருந்து பயிற்சி எடுத்தனர்.

பயிற்சி முடிந்த நிலையில், மூன்று பேரும் தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். தற்சமயம், 20 நாள்கள் நடைமுறை பயிற்சிக்காக மூத்த சகோதரி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக பீட் பணியிலும், இரண்டாவது சகோதரி திருவள்ளூர் மாவட்ட நீதிபதி குடியிருப்புப் பாதுகாப்புப் பணியிலும், மூன்றாவது சகோதரி ஊத்துக்கோட்டை காவல் நிலையப் பணியிலும் காவலர் சீருடை அணிந்து பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தனது 3 மகள்களும் காவல்துறையில் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்திருப்பதை நினைத்துப் பெருமைக்கொள்கிறார் அவரின் தந்தை வெங்கடேசன்.

இது பற்றி அவர் கூறுகையில், ‘‘சொந்தமா, மூணு ஏக்கர் நிலம் வெச்சிருக்கிறேன். அதுல சரிவர விளைச்சல் இல்லாததுனால கூலி வேலை செஞ்சிக்கிட்டு வர்றேன். மூத்தப் பொண்ணுக்கு கல்யாணம் ஆகி ரெண்டு பசங்க இருக்கிறாங்க. மத்த ரெண்டுப் பொண்ணுங்களுக்கும் இன்னும் திருமணம் ஆகல.

தந்தையுடன், போலீஸ் சீருடையில் 3 சகோதரிகளும்...
தந்தையுடன், போலீஸ் சீருடையில் 3 சகோதரிகளும்...

எப்படியாவது போலீஸ் வேலையில சேர்ந்திடணும்னு தீவிர முயற்சி எடுத்தாங்க. நீளம் தாண்டுறது, உயரம் தாண்டுறது, ஓட்டப் பயிற்சினு விடாம கத்துக்கிட்டாங்க. அவங்கப் பட்ட கஷ்டம் வீண் போகலை. மூணு பேரையுமே காக்கி உடையில பார்க்கும்போது ரொம்பப் பெருமையாவும், சந்தோஷமாகவும் இருக்குது. அம்மா இல்லாத பிள்ளைகளை நல்லா வளர்த்திருக்கிறேனு ஊருக்குள்ள எனக்கு நல்லப்பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறாங்க. என் பையனும் போலீஸ் வேலைக்குத் தயார்க்கிட்டு வர்றான். நான் காவல்துறையில் பணியாற்றணும் ரொம்ப ஆசைப்பட்டேன். சின்ன வயசுல அதுக்காக எடுத்த முயற்சியில தோல்வி அடைஞ்சிட்டேன். அப்புறம் ராணுவத்துக்கும் முயற்சிப் பண்ணேன். அந்த வாய்ப்பும் நழுவிப் போயிடுச்சி. என்னுடைய கனவை என் பெண் பிள்ளைகள் மூணு பேரும் நிறைவேற்றிட்டாங்க’’ என நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.