Published:Updated:

அவமதித்த உறவினர்கள்; விடாத தன்னம்பிக்கை; யூடியூப் சேனல் வருவாயில் மருத்துவப்படிப்பை முடித்த இளைஞர்!

மருத்துவர் ஹரிராமன் - விழுப்புரம்

`` `ஃப்ரீ பையர்' விளையாட்டையும் அளவோடுதான் விளையாடுவேன். படிப்பையும் விளையாட்டையும் ஒருபோதும் குழப்பிக்கிட்டதில்ல. நிறைய புக்ஸ் படிப்பேன். அப்படி நான் படிச்ச ஒரு புத்தகத்துல, ஒருவர் தனது பேஷனை வைத்து சம்பாதிக்க முடியும்னு இருந்தது. அது ஸ்ட்ரைக்கிங்கா இருந்தது."

அவமதித்த உறவினர்கள்; விடாத தன்னம்பிக்கை; யூடியூப் சேனல் வருவாயில் மருத்துவப்படிப்பை முடித்த இளைஞர்!

`` `ஃப்ரீ பையர்' விளையாட்டையும் அளவோடுதான் விளையாடுவேன். படிப்பையும் விளையாட்டையும் ஒருபோதும் குழப்பிக்கிட்டதில்ல. நிறைய புக்ஸ் படிப்பேன். அப்படி நான் படிச்ச ஒரு புத்தகத்துல, ஒருவர் தனது பேஷனை வைத்து சம்பாதிக்க முடியும்னு இருந்தது. அது ஸ்ட்ரைக்கிங்கா இருந்தது."

Published:Updated:
மருத்துவர் ஹரிராமன் - விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம், புருஷானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 25 வயதான ஹரிராமன். இவர், தற்போது முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் தற்காலிக மருத்துவ அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். மருத்துவப் படிப்புப் படித்தபோது அவரின் குடும்பத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதனால் கல்லூரிக் கட்டணத்தைக் கட்ட முடியாமல் மிகவும் இன்னலுற்று வந்த இந்த இளைஞர், தனது யூடியூப் சேனல் மூலம் பெற்ற வருவாயைக் கொண்டு மருத்துவப் படிப்பை வெற்றிகரமாக முடித்துள்ளார். ஒரு நாள் மாலைப் பொழுதில் ஹரிராமனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தோம்.

சாதாரண குடும்பம், உதவாத சொந்தம்!

``நான் புருஷானூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவன். அப்பா லக்ஷ்மிநாராயணன், அம்மா விஜயா. அப்பா டி.வி மெக்கானிக்கா வேலை செய்தவர். அம்மா, அப்பா ரெண்டு பேரும் காதல் திருமணம் செஞ்சுக்கிட்டாங்க. அதனால சொந்தக்காரங்ககிட்ட கொஞ்சம் எதிர்ப்பு இருந்தது.

பெற்றோருடன் ஹரிராமன்
பெற்றோருடன் ஹரிராமன்

அம்மா கூலி வேலைக்குப் போவாங்க. வீட்டுல கொஞ்சம் கஷ்டமான சூழ்நிலை. அதனால விருத்தாசலத்தில் இருக்கும் அம்மாவின் அக்கா (பெரியம்மா) வீட்ல தங்கிதான் ஒன்பதாம் வகுப்பு வரை படிச்சேன். நான் பத்தாம் வகுப்பு போனப்போ, என்னை ஒரு நல்ல தனியார் பள்ளியில் படிக்க வைக்கணும்னு எங்க அம்மா ஆசைப்பட்டாங்க. அதனால நெருங்கிய உறவினரிடத்தில் பண உதவி கேட்டாங்க. என்னை ஏளனமா பேசி, `எதுக்கு இவனை எல்லாம் பெரிய பள்ளிக்கூடத்துல படிக்க வைக்க ஆசைப்படுற? இவன் எல்லாம் பாஸ் பண்ண மாட்டான். பணம் எல்லாம் தர முடியாது'னு அவமதித்துப் பேசினாங்க. அப்பதான் முடிவு பண்ணேன், ஒழுங்கா படிச்சு டாக்டர் ஆகணும்னு.

ஒன்பதாம் வகுப்பு வரை படிப்பில் கொஞ்சம் விளையாட்டாதான் இருந்தேன். ஆனா, 10-வது போனதுக்கு அப்புறம்தான் முதன்முதல்ல படிப்புனா என்னனு புரிஞ்சுக்க ஆரம்பிச்சேன். பத்தாவதுல 444 மார்க் எடுத்தேன். `நல்லா படிக்கிறப்பா...'னு ஆசிரியர்களும் நண்பர்களும் ஊக்கப்படுத்தினாங்க.

குஜராத்தில் மருத்துவ சீட்!

ப்ளஸ் டூல 94% மார்க்தான் எடுத்தேன். அதனால, எனக்கு அப்போ மருத்துவ சீட் கிடைக்கல. அப்பா உறவு வழியில, என்னை இன்ஜினீயரிங் படிக்கச் சொன்னாங்க. ஆனா படிச்சா டாக்டர் தான்னு அம்மாவும் நானும் உறுதியா இருந்தோம். ஆனாலும், இன்ஜினீயரிங் சீட்டுக்கு அப்ளை பண்ணச் சொன்னாங்க அப்பா. கவுன்சலிங் எல்லாம் கூட போனேன். ஆனாலும் அதில் சேர எனக்கு விருப்பமில்ல.

மெடிக்கல் சீட் வாங்க, ஒரு வருஷம் முழுக்க என்ட்ரன்ஸ் எக்ஸாமுக்காகப் படிச்சேன். குஜராத்ல ஒரு கவர்மென்ட் காலேஜல் சீட் கிடைச்சது. ஆனா ஹாஸ்டல், போக்குவரத்து, புக் ஃபீஸ் என நிறைய காசு தேவைப்பட்டது. வீட்டுலயும் ரொம்பக் கஷ்டப்பட்டாங்க. அங்க, இங்கன்னு கடனை வாங்கிக் கொடுத்தனுப்புவாங்க. அப்பதான், நாம ஏதாவது வருமானத்துக்கு வழி பண்ணணும்னு தோணுச்சு.

ஹரிராமன்
ஹரிராமன்

யூடியூப் சேனல் ஐடியா!

மருத்துவப் படிப்புப் படிக்கும்போது பார்ட் டைம் வேலைக்குப் போவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். குஜராத்ல தமிழ் பேசும் நண்பர்களும் எனக்குக் கிடையாது. அதனால ஆரம்பத்துல கொஞ்சம் கஷ்டப்பட்டேன். அப்பதான், `ஃப்ரீ பையர்' என்ற கேம்ல விளையாடிட்டே பேசலாம்னு தெரியவந்தது. தமிழ் பசங்களோட பேசணும் என்பதற்காகத்தான் அந்த விளையாட்டை விளையாட ஆரம்பிச்சேன். அந்த கேம் பத்தி முழுசா தெரிஞ்சுக்கிட்டேன். அந்த விளையாட்டையும் அளவோடுதான் விளையாடுவேன். படிப்பையும் விளையாட்டையும் ஒருபோதும் குழப்பிக்கிட்டதில்ல. நிறைய புக்ஸ் படிப்பேன். அப்படி நான் படிச்ச ஒரு புத்தகத்துல, ஒருவர் தனது பேஷனை (Passion) வைத்து சம்பாதிக்க முடியும்னு இருந்தது. அது ஸ்ட்ரைக்கிங்கா இருந்தது.

மருத்துவம் சார்ந்து ஏதாவது பண்ணலாமானு யோசிச்சேன். படிக்கும்போதே வேண்டாம்னு தோணுச்சு. அப்புறம்தான், கேம் பற்றி விவரிக்கும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பிச்சேன். அந்த ரூட் பிக் அப் ஆகி, மருத்துவப் படிப்புக் கட்டணச் செலவுக்கு எனக்குக் கைகொடுக்கும்னு அப்போ எனக்குத் தெரியாது.

50,000 சப்ஸ்கிரைபர்கள், 150 டாலர்!

ஆரம்பத்துல பெருசா ரீச் இல்லை. ஒருமுறை வாய்ஸ் கொடுத்து வீடியோ பண்ணினேன், நல்லா ரீச் ஆச்சு. அதிலிருந்து அப்படியே தொடர ஆரம்பிச்சேன். அடுத்த ஒரே மாசத்தில் 50,000 பேர் வரை சப்ஸ்கிரைப் பண்ணி இருந்தாங்க. முதன்முதலா யூடியூப் மூலமா நான் சம்பாதிச்ச காசு, 150 டாலர். ஆனா, அதை எப்படி எடுக்கணும்னுகூட எனக்குத் தெரியாது. அந்நேரம், 3-வது மற்றும் 4-வது வருட மருத்துவப் படிப்புக்கு காலேஜ் ஃபீஸ் கட்டாததால எக்ஸாம் எழுத முடியாதுன்னு சொல்லிட்டாங்க. வீட்ல அதை சொன்னப்போ மனசு உடைஞ்சுபோய் அழுதாங்க. ஹாஸ்டல் ரூம்ல உட்கார்ந்து நான் அழுதேன். ஏன்னா... அடுத்த ரெண்டே நாள்ல எக்ஸாம் வர இருந்தது.

பட்டம் அளிப்பு விழாவில் பெற்றோருடன் ஹரிராமன்
பட்டம் அளிப்பு விழாவில் பெற்றோருடன் ஹரிராமன்

நான் அழுததை என்னோட ஃபிரெண்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு, எங்களோட காலேஜ் குரூப்ல எனக்கு பண உதவி தேவைனு மெசேஜ் போட்டுட்டாங்க. முன், பின் தெரியாத சக மாணவர்கள் எல்லாம் என் பீஸை கட்ட தங்களால முடிஞ்ச உதவியை செஞ்சாங்க. பண உதவி செய்ததோடு மட்டுமல்லாம, அந்தக் காசை நேரடியா பல்கலைக்கழகத்துக்கே எடுத்துட்டுப் போய் கட்டிட்டு வந்தாங்க. அந்த எக்ஸாம்ல நல்லபடியா பாஸ் பண்ணேன்.

பிறகு, என் யூடியூப் சேனல் மூலமா வந்த காசை எடுக்கறதுக்கு எனக்கு ஒரு மாசம் ஆச்சு. அந்தக் காசை எடுத்து, எனக்கு உதவி பண்ணின எல்லாருக்கும் திருப்பிக் கொடுத்துட்டேன். கல்லூரிப் படிப்பும் நல்லபடியா முடிஞ்சது.

என் அப்பா, அம்மா ஃபிளைட்ல எல்லாம் போவோம்னு கூட நினைச்சுப் பார்த்ததில்ல. என் கிராஜுவேஷன் டே-க்கு அப்பா, அம்மா ரெண்டு பேரையும் ஃபிளைட்ல கூட்டிட்டுப் போனேன். அது என் வாழ்நாள்ல மறக்க முடியாத தருணம். ஒரு வருஷம் அதே காலேஜ்ல இன்டர்ன்ஷிப் முறையில ஒர்க் பண்ணினேன். அப்புறம், கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதால வீட்டுக்கு வந்துட்டேன். கேம் பற்றிய வீடியோவை மட்டும் போட்டுக்கிட்டு வந்த நான், மருத்துவம் சார்ந்து கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோக்களையும் பதிவிட்டேன். அதைப் பாராட்டி யூடியூப் நிறுவனம் எனக்குப் பரிசு ஒன்றைக் கொடுத்தாங்க. இப்போ என் யூடியூப் சேனல்ல 20 லட்சத்துக்கும் மேல் சப்ஸ்கிரைபர்கள் இருக்காங்க.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுப் பரவல் அதிகமான நேரத்தில், விழுப்புரம் கலெக்டர் ஆபீஸ்ல இருந்து, `மெடிக்கல் ஆபீஸர்' வேலைக்கு இன்டர்வியூ நடத்தினப்போ நான் கலந்துகிட்டு தேர்வானேன். இப்போ முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில தற்காலிக மருத்துவப்பணி செய்து வர்றேன். எனக்கு குழந்தைகள் நல மருத்துவர் ஆகணும்னு ஆசை. அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டு வர்றேன். மருத்துவம் என் பேஷன். அதே நேரம் இ-ஸ்போர்ட்ஸ் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மருத்துவர் ஹரிராமன் - விழுப்புரம்
மருத்துவர் ஹரிராமன் - விழுப்புரம்

இ-ஸ்போர்ட்ஸை நெக்ஸ்ட் லெவலுக்குக் கொண்டு போக வேண்டும் என்பதும் என் ஆசை. சமீபத்துல, தேசிய அளவில் நடைபெற்ற இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் எங்க குழு 2-ம் இடம் பிடிச்சோம். என் கடைசி வருஷ மருத்துவப் படிப்பை முடிக்கக் கைகொடுத்தது என் யூடியூப் சேனல் வருவாய்தான் என்பதால், தொடர்ந்து விளையாடுவேன்" என்று நெகிழ்ச்சியுடன் சிரிக்கிறார் ஹரிராமன்.