Published:Updated:

`சிறுவன், முதியவர் திடீர் மரணம்; பலர் பாதிப்பு!‘ - வேலூர் அல்லிவரம் கிராமத்தில் நடந்தது என்ன?

கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்
News
கிருமி நாசினி தெளிக்கும் தூய்மைப் பணியாளர்கள்

ஏரி மீன்களைச் சாப்பிட்டதில் இருவர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படும் விவகாரம், வேலூர் மக்களை அச்சமடையச் செய்திருக்கிறது.

கோடை வெப்பத்துக்குப் பேர்போன வேலூர் மாவட்டத்தைத் தன் கரங்களால் கலைத்துப்போட்டிருக்கிறது வடகிழக்குப் பருவமழை. வெள்ளக்காட்டுக்குள் கேட்கும் துயரக்குரலே தணியாத நிலையில், விதவிதமான பாதிப்புகள் வேலூரைப் பற்றிக்கொண்டிருக்கின்றன. ஏரி மீன்களைச் சாப்பிட்டதில், இருவர் உயிரிழந்திருப்பதாகக் கூறப்படும் விவகாரம், வேலூர் மக்களை அச்சமடையச் செய்திருக்கிறது. அதன் விவரம்:

வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அல்லிவரம் கிராமத்தில், பத்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு பாதிப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் அடுக்கம்பாறையிலிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.

ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ நந்தகுமார்
ஆய்வு செய்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்.எல்.ஏ நந்தகுமார்

இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் 70 வயதான அப்பாசாமி உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, மார்கபந்து என்பவரின் நான்கு வயது மகன் நேற்று அதிகாலை மரணமடைந்தார். இருவர் அடுத்தடுத்து உயிரிழந்ததால், அல்லிவரம் கிராமத்தில் நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மக்களிடையே அச்சம் நிலவுகிறது. தகவலறிந்ததும், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ நந்தகுமார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள், அல்லிவரம் கிராமத்துக்குச் சென்று ஆய்வுசெய்தனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உடனடியாக, ஐந்து மருத்துவர்களை உள்ளடக்கிய 30 பேர் கொண்ட மூன்று மருத்துவக்குழுக்களை நியமித்து, சிறப்பு மருத்துவ முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுவருகிறார்கள். `ஒரு கிராமமே பாதிப்படைய காரணம், அங்குள்ள ஏரிகளிலிருந்து பிடித்துச் சாப்பிட்ட மீன்கள்தான்’ என்று முதற்கட்ட ஆய்வில் தெரியவந்திருப்பதாகச் சொல்கிறார்கள் சுகாதாரத்துறை அதிகாரிகள்.

குடிநீர் மாதிரியை சேகரிக்கும் சுகாதாரத்துறையினர்...
குடிநீர் மாதிரியை சேகரிக்கும் சுகாதாரத்துறையினர்...

இது தொடர்பாக, அணைக்கட்டுத் தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமாரிடம் கேட்டபோது, ``தொடர்மழையால், அல்லிவரம் அருகிலிருக்கும் பென்னாத்தூர், சப்தலிபுரம் ஏரிகள் நிரம்பியிருக்கின்றன. இங்கிருந்து மீன்பிடித்து சாப்பிட்டதால்தான் உடல்நிலை பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேசமயம், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து நேரடியாக மருத்துவக்கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் அல்லிவரம் கிராமத்திலுள்ள நீர்நிலைகளுக்கு வருகின்றன. குடிநீர் ஆதாரமாக உள்ள ஏரித் தண்ணீரில் மருத்துவக்கழிவுகள் கலந்திருப்பதாலும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம். மருத்துவக்கழிவுகள் தொடர்பான பிரச்னை குறித்து கடந்த முறை எம்.எல்.ஏ-வாக இருந்தபோதே, சட்டமன்றத்தில் நான்கைந்து முறை பேசியிருக்கிறேன். அப்போது நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தோம். இப்போது ஆளுங்கட்சியாக இருக்கிறோம். மருத்துவமனையில் சுத்திகரிப்பு பிளான்ட் அமைத்து, கழிவுநீர் வெளியேறாமல் தடுக்க விரைந்து நடவடிக்கை எடுப்போம்’’ என்றார்.

வேலூர் மாவட்ட சுகாதாரத்துறைத் துணை இயக்குநர் பானுமதியிடம் பேசினோம். ``ஏரிகளிலிருந்து மீன்களைப் பிடித்து, மிளகாய்த்தூள், மசாலாவைப் போட்டு சரியாக வேக வைக்காமலேயே சாப்பிட்டுள்ளனர். இதனாலும் பாதிப்புகள் இருந்திருக்கலாம். உணவுத் தண்ணீரைச் சேகரித்து வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு அனுப்பியிருக்கிறோம். ஆய்வு முடிவுகள் வந்த பின்னரே பாதிப்புகளுக்கான காரணம் குறித்து உறுதியாகச் சொல்ல முடியும்’’ என்றார்.

இதற்கிடையே, வீடுகளில் குடத்தில்வைக்கப்பட்டிருந்த குடிநீரைக்கூட அல்லிவரம் மக்கள் வெளியே எடுத்து ஊற்றிவிட்டனர். தொடர்ந்து, அந்த கிராமத்தில் காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருக்கின்றனவா என்றும் மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்துவருகிறார்கள். `ஏரி மீன்களைப் பிடித்து உண்ண வேண்டாம்’ என்றும் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தியிருக்கிறார்.