சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் ஆசனூர், தலமலை, தாளவாடி உள்ளிட்ட 10 வனச்சரகங்கள் உள்ளன. புலிகள் காப்பகமாக அறிவிப்பதற்கு முன்பு இது யானைகள் சரணாலயமாக இருந்தது. சத்தியமங்கலம் வனப்பகுதியில் கணிசமான அளவில் யானைகள் வசிப்பதால், அவற்றின் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. சத்தியமங்கலம், பண்ணாரி செக்போஸ்ட்டிலிருந்து கர்நாடக வனப்பகுதியின் எல்லை வரையிலுமுள்ள யானைகளின் வழித்தடத்தின் வழியே மைசூர் - திண்டுக்கல் வரையிலான தேசிய நெடுஞ்சாலை-209 குறுக்கிடுகிறது. இந்தச் சாலையில் யானைகளின் முக்கிய வழித்தடமாக ஆசனூர், காரப்பள்ளம், புளிஞ்சூர், தாளவாடி, கோழிப்பாலம் போன்ற பகுதிகள் உள்ளன.

இந்த நெடுஞ்சாலையின் வழியே, ஈரோடு மாவட்டத்தின் மலைக்கிராமங்கள் அடங்கிய தாளவாடி தாலுகாவில் இருந்தும், கர்நாடகத்தின் சாம்ராஜ் நகரம், குண்டல்பேட்டை, நஞ்சன்கூடு, மைசூர் பகுதிகளிலிருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான கரும்பு லாரிகள் சத்தியமங்கலத்திலுள்ள சர்க்கரை ஆலைக்குக் கரும்பு லோடு ஏற்றிச் செல்கின்றன.
ஆரம்பத்திலிருந்தே, கரும்பு பாரம் ஏற்றிவரும் லாரியின் ஓட்டுநர்கள், கிளீனர்கள் இந்த வழியே குறுக்கிடும் காட்டு யானைகளுக்காகத் தனியே கரும்பு பண்டல்களை வைத்திருப்பார்கள். யானைகள் நிற்கும் இடத்தில் அவற்றை வீசிச் செல்வார்கள். இந்த கரும்புச் சுவைக்கு பழகிய காட்டுயானைகள் வழிநெடுகிலும் சாலையோரங்களில் காத்திருக்கும். இதனால், வனத்துறையினர் யானைகளுக்குக் கரும்புகளை வீசிச் செல்லும் லாரி ஓட்டுநர்களை கடுமையாக எச்சரித்துவந்தனர்.

இதன் காரணமாக, அண்மைக்காலமாக கரும்பு லாரி ஓட்டுநர்கள் கரும்பை வீசுவதில்லை. இருப்பினும், கரும்புச் சுவைக்கு பழக்கப்பட்ட காட்டு யானைகள் காரப்பள்ளம், புளிஞ்சூர் செக்போஸ்ட் பகுதிகளில் காத்திருந்து, லாரிகளை வழிமறித்து கரும்பைக் கபளீகரம் செய்கின்றன. இவ்வாறு சாலையை மறிக்கும் யானைகளால் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகளை யானைகள் துரத்துகின்றன. எனவே கரும்பு பண்டல்களை ரோட்டோரம் வீச வேண்டாம் என்று வனத்துறையினர் தொடர்ந்து எச்சரித்துவருகிறார்கள்.
இந்த நிலையில் தாளவாடி அருகே ஆசனூரிலிருந்து காரப்பள்ளம் செல்லும் சாலையில் வனச்சரகர் சிவகுமார் தலைமையிலான வனத்துறையினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது மைசூரிலிருந்து கரும்பு பாரம் ஏற்றிவந்த கர்நாடக லாரி ஓட்டுநர் ஒருவர், லாரி மீது ஏறி கரும்புக் கட்டுகளை எடுத்து ரோட்டோரம் நின்றிருந்த காட்டுயானை நின்றிருந்த திசையில் வீசிக்கொண்டிருந்தார்.
இதைக் கண்ட வனத்துறையினர், அந்த ஓட்டுநரிடம் விசாரணை நடத்திய போது, அவர் கர்நாடக மாநிலம், நஞ்சன்கூடு பகுதியைச் சேர்ந்த சித்தராஜ் என்பதும், அவர் மைசூரிலிருந்து சத்தியமங்கலத்திலுள்ள ஒரு சர்க்கரை ஆலைக்குக் கரும்பு ஏற்றிச் சென்றுகொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வனவிலங்குகளுக்கு முறையற்ற வகையில் உணவு வழங்கியதாக டிரைவர் சித்தராஜுக்கு வனத்துறையினர் ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்தார்கள்.

இதற்கு முன்பு வரை கரும்பை யானைகளுக்கு வீசிச் சென்ற லாரி ஓட்டுநர்களை எச்சரிக்கை மட்டுமே செய்துவந்த வனத்துறையினர், திடீரென ரூ.75 ஆயிரம் அபராதம் விதித்திருப்பது மற்ற ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கைவிடுப்பதாக இருக்கிறது.
தாளவாடியிலிருந்தும், கர்நாடகத்திலிருந்தும் வரும் கரும்பு லாரிகள் எந்தக் காரணத்தைக்கொண்டும் வனப்பகுதியில் நிற்கும் யானைகளுக்காகக் கரும்பு பண்டல்களை வீசக் கூடாது. அவ்வாறு வீசும் வாகன ஓட்டுநர்களுக்கு உடனடி அபராதமும், பல்வேறு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்படும் என வனத்துறையினர் கடுமையாக எச்சரித்துள்ளனர்.