Published:Updated:

`அண்ணன் செந்தில் பாலாஜிக்காக உயிரைக் கொடுப்பேன்!' - தற்கொலை முயற்சியால் கரூரில் பரபரப்பு

செந்தில் பாலாஜியின் அபெக்ஸ் கம்பெனி முன்பு தி.மு.க-வினர்
செந்தில் பாலாஜியின் அபெக்ஸ் கம்பெனி முன்பு தி.மு.க-வினர் ( நா.ராஜமுருகன் )

செந்தில் பாலாஜி மீதான நிலுவையில் உள்ள பணமோசடி வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்க இருப்பதாகத் தெரிகிறது.

கரூரில் செந்தில் பாலாஜியின் வீடு, அவரது தம்பி வீடு மற்றும் டெக்ஸ் கம்பெனியில் நடைபெற்று வரும் மத்திய குற்றப்பிரிவு போலீஸாரின் சோதனை நடவடிக்கையைக் கண்டித்து, தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவர் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தீக்குளிக்க முயன்ற பாவனா
தீக்குளிக்க முயன்ற பாவனா
நா.ராஜமுருகன்
`செந்தில் பாலாஜி வீட்டில் திடீர் ரெய்டு ஏன்?' -கரூரைப் பதறவைத்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ்

கரூர் மாவட்ட தி.மு.க பொறுப்பாளரும் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ-வுமான செந்தில் பாலாஜி மீது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக பலரையும் ஏமாற்றியதாகப் பதியப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை ஜெயலலிதாவின் ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. அப்போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக, 16 பேரிடம் ரூ. 95 லட்சம் வரை பெற்றுக்கொண்டு, வேலை வாங்கித்தராமல், மோசடி செய்ததாக, சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார் என்பவர், மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்திருந்தார்.

செந்தில் பாலாஜி
செந்தில் பாலாஜி
நா.ராஜமுருகன்

இந்தப் புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி உள்ளிட்ட மூன்று பேர் மீது, நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், 'இந்த வழக்கில் அடிப்படை முகாந்திரம் இருப்பதால், செந்தில் பாலாஜி ஏன் இந்த வழக்கை எதிர்கொள்ளக் கூடாது?' என்று கேள்வி எழுப்பினர். அதைத்தொடர்ந்து, இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் நிபந்தனையுடன்கூடிய முன்ஜாமீன் வாங்கினார்.

இந்த நிலையில், இன்று திருச்சியில் நடைபெற்று வரும் தமிழகம் முழுக்க வெற்றிப் பெற்ற தி.மு.க ஊரக உள்ளாட்சி பிரமுகர்களுக்கான பாராட்டு விழா மற்றும் மாநாட்டில் கலந்துகொள்ள அதிகாலையிலேயே திருச்சிக்குச் சென்றுவிட்டார் செந்தில் பாலாஜி. இந்தச் சூழலில்தான், சென்னை மத்திய குற்றப்பிரிவு டி.எஸ்.பி ஒருவர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீஸார், செந்தில் பாலாஜி வீட்டில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

செந்தில் பாலாஜியின் வீடு
செந்தில் பாலாஜியின் வீடு
நா.ராஜமுருகன்

கரூரை அடுத்த மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, கரூர் ராமகிருஷ்ணபுரத்திலுள்ள செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரின் வீடு, செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான அபெக்ஸ் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி மற்றும் சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இந்த நிலையில், ராமேஸ்வரப்பட்டியில் சோதனை மேற்கொண்ட போலீஸாருக்கு எதுவும் சிக்காததால், மதியத்துக்குள் அங்கே தங்கள் சோதனையை முடித்துக்கொண்டனர். ஆனால், கரூரில் உள்ள செந்தில் பாலாஜிக்குச் சொந்தமான அபெக்ஸ் டெக்ஸ்டைல்ஸ் கம்பெனியில் தொடர்ந்து சோதனை மேற்கொண்டனர்.

இதனால், அங்கே ஏராளமான தி.மு.க-வினர் குவிந்ததோடு, காவல்துறையைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கே பதற்றம் எற்படும் சூழல் நிலவ, 50-க்கும் மேற்பட்ட போலீஸாரை பாதுகாப்புக்காக அங்கே நிறுத்தினர். அப்போது கையில் மண்ணெண்ணெய் கேனுடன் வந்த பாவனா என்ற திருநங்கை, கேன் மூடியைத் திறந்து மண்ணெண்ணெயை தனது தலையில் கவிழ்த்துக்கொண்டார். அதோடு, "எங்கள் அண்ணன் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆளும்கட்சியினர் சதி செய்கின்றனர்.

செந்தில் பாலாஜியின் அபெக்ஸ் கம்பெனி முன்பு தி.மு.க-வினர்
செந்தில் பாலாஜியின் அபெக்ஸ் கம்பெனி முன்பு தி.மு.க-வினர்
நா.ராஜமுருகன்

அவரை எனது உயிரைக் கொடுத்து காப்பாற்றுவேன். போலீஸார் இத்தோடு இந்தச் சோதனையை நிறுத்தாவிட்டால், தீக்குச்சியை உரசி என் மேல் போட்டுக்கொண்டு இங்கேயே உயிரை மாய்ச்சுக்குவேன்" என்று கூறி, தீக்குச்சியை உரசப்போனார். அதைப் பார்த்து பதறிய அருகில் நின்ற தி.மு.க-வினர் பாய்ந்து வந்து பாவனாவின் தற்கொலை முயற்சியைத் தடுத்தனர். அவர்மீது தண்ணீரை ஊற்றி, மண்ணெண்ணெயின் வீரியத்தைக் குறைத்தனர்.

ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், தாங்கள் வந்த வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்து, அங்கே தொடர் சோதனையை மேற்கொண்டு வருகிறார்கள். கரூர் ராமகிருஷ்ணபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய சோதனையிலும் எதுவும் கிடைக்கவில்லை என்றும் சொல்கிறார்கள்.

செந்தில் பாலாஜியின் அபெக்ஸ் கம்பெனி முன்பு தி.மு.க-வினர்
செந்தில் பாலாஜியின் அபெக்ஸ் கம்பெனி முன்பு தி.மு.க-வினர்
நா.ராஜமுருகன்

இதனால் குஷியான செந்தில் பாலாஜி தரப்பு, "எந்தவித முகாந்திரமும் இல்லாமல் வந்து இப்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மூக்குடைந்து நிக்கிறாங்க. அணுகுண்டு கிடைக்கும் என்று வந்த போலீஸாருக்கு, புஸ்வாணம்கூட கிடைக்கவில்லை என்று துள்ளிக் குதிக்கிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி மீதான நிலுவையில் உள்ள பணமோசடி வழக்கின் விசாரணை வரும் திங்கள்கிழமை நடக்க இருப்பதாகத் தெரிகிறது.

அடுத்த கட்டுரைக்கு