Published:Updated:

சுஜித் கற்றுக் கொடுத்தது என்ன... நாம் செய்வது என்ன..? சுஜித் மறைந்த 100வது நாள்

சுஜித் மறைந்து 100-வது நாள்
சுஜித் மறைந்து 100-வது நாள்

இன்றோடு சுஜித் மறைந்து 100-வது நாள். சுஜித்தின் மரணத்துக்கு முன்னும் பின்னும் ஆழ்துளைக் குழிகளின் விஷயத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன..? செய்தது என்ன என்று களம் இறங்கியது விகடன் ஆர்டிஐ குழு.

கடந்தாண்டு அக்டோபர் 29-ம் தேதி, தமிழகத்தை உலுக்கியது சுஜித்தின் மரணம். வயலில் விளையாடச் சென்ற சுஜித், பயன்படுத்தப்படாத ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து, மீட்க நடந்த கடும் போராட்டத்துக்குப் பிறகு உயிரிழந்தார்.

சுஜித் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்தது முதல் கடைசிவரை நடந்தது என்ன என்பதைப் பின்வரும் படத்தில் காணலாம்...

சுஜித் மரணத்துக்குப் பிறகு, அதுமாதிரியான இன்னொரு மரணம் நடந்துவிடக் கூடாது என்ற குரல்கள் எல்லா பக்கமிருந்தும் ஒலித்தன. அரசும் ஒவ்வொரு மாவட்டத்திலும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட நடவடிக்கை எடுப்பதாக அறிவித்தது. ஆனால் நடந்தது என்ன?

Sujith Time Line
Sujith Time Line

திருச்சி மாவட்டத்தில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?

சுஜித் மரணத்துக்குப் பிறகு கடந்த 1.11.2019 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு திருச்சி மாவட்டத்தில் மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள் பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. கிராமப்புறப் பஞ்சாயத்துகளில் ஆரம்பித்து நகரப் பஞ்சாயத்துகள், மாநகராட்சி, நகராட்சி பகுதிகள், தனியார் மற்றும் அரசு இடங்களில் 9,228 ஆழ்துளைக் கிணறுகள் முறையாக மூடப்படாமல் இருப்பது அந்தக் கணக்கெடுப்பில் தெரியவந்தது.

சுஜித் கற்றுக் கொடுத்தது என்ன... நாம் செய்வது என்ன..? சுஜித் மறைந்த 100வது நாள்
திருச்சி மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் 4,412 ஆழ்துளைக் கிணறுகள் முறையாக மூடாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
RTI தகவல்

துரிதமாகச் செயல்பட்டு 8,213 ஆழ்துளைக் கிணறுகளை வெறும் 7 நாள்களில் மூடியுள்ளனர். இந்த நடவடிக்கையை முன்பே எடுத்திருந்தால் நாம் சுஜித்தை இழந்திருக்க மாட்டோம் என்று ஆதங்கக் குரல்கள் எழுகின்றன.

சுஜித் மீட்புப் பணியில் ஆன செலவு விவரம்
சுஜித் மீட்புப் பணியில் ஆன செலவு விவரம்
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் விவரம்
மீட்புப் பணியில் ஈடுபட்டவர்கள் விவரம்

பிற மாவட்டங்களில் இந்த வேகம் இல்லை. கேட்பாரற்றுக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகளை மூடும் பணி இன்னும் ஆமை வேகத்தில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சுஜித்தின் மரணம் நமக்குச் சொல்லித்தந்தது என்ன..?

2002-ம் ஆண்டு சென்னை மண்ணடியில் சிறுவன் தமிழ்மறை,  35 அடி பள்ளத்தில் விழுந்து பலியானதை அடுத்து, `தமிழ்நாடு நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை சட்டம்’ கொண்டு வரப்பட்டது.

2014-ம் ஆண்டு நடைபெற்ற மூன்று தொடர் சம்பவம் `அனுமதியில்லாமல் ஆழ்துளைக் கிணறு தோண்டினால் 7 ஆண்டு சிறை' என்கிற சட்ட  மசோதாவைக்  கொண்டுவரவைத்தது.

கடந்த, 2010-ம் ஆண்டில் ஆழ்துளைக் கிணறுகள், தரைக் கிணறுகள் ஆகியவற்றில், குழந்தைகள் பலியாவதைத் தடுக்க, 16 விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு அறிக்கையை, உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருந்தது. இதை, அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.

இப்படி ஒவ்வொரு குழந்தைகளின் இறப்பும் ஒரு சட்டத்தைக் கொண்டுவந்துகொண்டேதான் இருக்கின்றன. ஆனால், இந்த சம்பவங்களும் தொடர்கதைகளாக நடந்துகொண்டேதான் இருக்கிறது. சட்டங்களும் உத்தரவுகளும் வெறும் எழுத்து வடிவில் மட்டுமே இருப்பதை இது உணர்த்துகிறது. எப்போது இந்த சட்டங்கள் செயல்வடிவம் பெறுகிறதோ அன்றுதான் நாம் இன்னொரு சுஜித்தை இழக்காமல் இருப்போம்.

நடுக்காட்டுப்பட்டி
நடுக்காட்டுப்பட்டி

சுஜித்தின் மரணத்தை அடுத்து வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வு விசாரணை செய்தது. அப்போது, 2010-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, ஆழ்துளைக் கிணறுகள், தரைக் கிணறுகள் போன்றவற்றில் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்குமாறு, மத்திய - மாநில அரசுகளுக்கு, `நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சுஜித்தின் மரணத்துக்கு யார் காரணம்..?

சுஜித் மரணம் நடைபெற்றபோது அந்தச் சம்பவத்துக்கு அவர்கள் பெற்றோர்கள்தான் காரணம் என்றும் சரியாக  கையாளாத  அரசுதான் காரணம் என்றும் விமர்சித்தவர்களை என்னவென்று சொல்வது...?

80 மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்த மீட்புப் பணியில் அரசின் அனைத்து எந்திரங்களும் முடக்கிவிடப்பட்டிருந்தன. தமிழகம் தாண்டி உலகம் முழுவதும் சுஜித்துக்காக பிரார்த்தனைகள் நடந்துகொண்டிருந்தன. எந்த முயற்சியும் கைகொடுக்கவில்லை.

சுஜித்
சுஜித்

நம் நாட்டில் பேரிடர் மேலாண்மை அமைப்புகள் எந்த அளவுக்கு வலுவாக இருக்கின்றன என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை சோதனை செய்துகொள்ள வேண்டிய தருணம் இது. ஆழ்துளைக்கிணறு விபத்துகள் மட்டுமல்ல, அணு உலைகள் போன்று தொடர்ந்து தமிழகத்தில் தொடங்கப்படும் ஆபத்து நிறைந்த தொழிற்சாலைகளில் ஏதேனும் விபத்து ஏற்பட்டால் எந்த அளவுக்கு நாம் முன்னேற்பாடுகளுடன் இருக்கின்றோம் என்பதை உடனடியாக சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

பேரிடர் மேலாண்மை என்பது, பிரச்னை வந்த பிறகு செயல்படும் அமைப்பாக இருக்கக் கூடாது. அந்த அமைப்பு எந்த நேரத்திலும், எந்தப் பிரச்னை நிகழ்ந்தாலும் துரிதமாய் செயல்படும் திட்டமிடலும், நிபுணத்துவமும் வாய்ந்ததாக இருக்க வேண்டும்.

ஜெஸிகா
ஜெஸிகா

1987-ம் ஆண்டு அமெரிக்காவில் ஜெஸிகா என்ற குழந்தை  ஆழ்துளைக்கிணற்றில் விழுந்தது. அவள் உயிருடன் மீட்கப்பட்டாள். அதன்பிறகு அப்படியொரு சம்பவம் அங்கே நடக்கவேயில்லை. அதற்கு அந்த அரசாங்கம் மட்டுமே காரணம் இல்லை. ஒட்டுமொத்த சமூகத்திலும் ஆழ்துளைக்கிணறு பற்றி ஏற்பட்ட விழிப்புணர்வும் அதற்கு அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளும்தான் முக்கிய காரணம். அப்படியான ஒட்டுமொத்த சமூக அக்கறையால் மட்டுமே இது எளிதில் சாத்தியப்படும்.

மற்றவர்களை மட்டுமே குற்றம் சொல்லி எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது. மாற்றம் ஒவ்வொரு தனிமனிதரிடத்திலும் ஏற்பட வேண்டும். அப்போதுதான் ஒரு மாபெரும் சமூக மாற்றம் நிகழும் என்பதே சுஜித் நமக்கு சொல்லிச் சென்ற பாடம்.

அடுத்த கட்டுரைக்கு