Published:Updated:

`சென்னைபோல் மதுரையும் ஆகிவிடும்!' - தமிழக அரசின் புள்ளிவிவரங்களைச் சுட்டிக்காட்டிய சு.வெங்கடேசன்

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன் ( என்.ஜி.மணிகண்டன் )

தினமும் 3,000 சோதனைகள் என்ற அடிப்படையில் மதுரையில் எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வரும் நாள்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவிடும். - சு.வெங்கடேசன்.எம்.பி

''மதுரை மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ள கொரோனா சோதனைகள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மற்ற மாவட்டங்களைவிட மிகக் குறைவாகவே இதுவரை சோதனை நடத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் சென்னையிலிருந்து 10,000 பேர் மதுரை மாவட்டத்துக்கு வந்துள்ளனர். அவர்களிடம் சோதனை நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யவில்லை'' என்று, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் புகார் எழுப்பியுள்ளார்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்

இது சம்பந்தமாக மதுரை கலெக்டரிடம் வலியுத்தியுள்ள நிலையில் அவரிடம் பேசினோம், ``தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ள கொரோனா பரிசோதனை புள்ளி விவரங்களைத் தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில் மதுரை மாவட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஜூன் 7-ம் தேதி வரை மதுரையில் 14,102 பரிசோதனைகள் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை விட இந்த எண்ணிக்கை மிகக் குறைவு.

மக்கள் தொகை அடிப்படையில் ஒரு லட்சம் பேருக்கு செய்யப்பட்ட சோதனையின் அளவு மாநில அளவில் 6,420 ஆக உள்ளது. ஆனால், மதுரையின் அளவு மிகக்குறைவாக உள்ளது. பிற மாவட்டங்களை ஒப்பிடும்போது, மதுரை 30-வது இடத்தில் உள்ளது.

கலெக்டரிடம் வலியுறுத்தல்
கலெக்டரிடம் வலியுறுத்தல்
என்.ஜி.மணிகண்டன்

தென் மாவட்டங்களின் மையமான மதுரையில் மிகக்குறைந்த அளவு சோதனை செய்யப்பட்டிருக்கிறது. வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரையில் ஒவ்வொருமுறை ஆய்வுக் கூட்டங்களை நடத்திவிட்டு அதிகமான பரிசோதனைகள் செய்யப்படுகிறது என்று ஊடகங்களில் கூறினார். அவை உண்மை என்று நாமும் நம்பிக்கொண்டிருந்தோம்.

ஆனால், தமிழக அரசு அறிவித்துள்ள புள்ளிவிவரம் மிகப்பெரும் அதிர்ச்சி அளிக்கின்றது. போதுமான பரிசோதனைகள் மதுரையில் எடுக்கப்படவில்லை. மதுரை மக்களவை உறுப்பினர் என்ற அடிப்படையில் மாவட்ட கலெக்டரிடம் எடுத்துக் கூறியுள்ளேன்.

சு.வெங்கடேசன்
சு.வெங்கடேசன்
என்.ஜி.மணிகண்டன்

கடந்த 10 நாள்களில் சராசரியாக நாளொன்றுக்கு 250 டெஸ்டுகள் மட்டுமே எடுக்கப்பட்டுள்ளது. இதில் உடனடியாக மாற்றம் தேவை. அது மட்டுமல்லாமல் கடந்த 10 நாள்களில் சுமார் 10,000 பேர் சென்னையிலிருந்து இ-பாஸ் பெற்று மதுரைக்கு வந்துள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட வேண்டும். அதுதான் அவர்களுக்கும், மதுரை மக்களுக்கும் நல்லது. ஆனால், அதில் மாவட்ட நிர்வாகம் அலட்சியமாக இருந்துள்ளார்கள். சோதனைகள் அதிகமாக நடத்தப்படவில்லை என்றால் சென்னைபோல் மதுரையும் கொரோனா மையமாக மாறும் அபாயம் உள்ளது.

ஐசிஎம்ஆர் மற்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளபடி தொற்று பரவலாக்கத்தைத் தடுப்பதுதான் மக்களை மீட்பதற்கான ஒரே வழி. இனி தினமும் 3,000 சோதனைகள் என்ற அடிப்படையில் மதுரையில் எடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் வரும் நாள்களில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்துவிடும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு