Published:Updated:

`உங்கள் துணிச்சல் மெய்சிலிர்க்க வைக்கிறது' - நெல்லை வீரத் தம்பதிக்கு டிஜிபி சைலேந்திரபாபு கடிதம்

உங்கள் துணிச்சல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்று கொள்ளையர்களை விரட்டிய நெல்லை வீரத் தம்பதிக்கு டி.ஜி.பி.சைலேந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார்.

கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத் தம்பதி
கொள்ளையர்களை விரட்டியடித்த வீரத் தம்பதி

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகவேலு. இவரின் மனைவி செந்தாமரை. இவர்களின் மகன், மகள் சென்னை, பெங்களூருவில் உள்ள ஐ.டி நிறுவனங்களில் பணியாற்றிவருகின்றனர். இதனால், சண்முகவேலும் செந்தாமரையும் தனியாக வசித்துவருகின்றனர். மேலும் இவர்கள், தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் எலுமிச்சை பயிரிட்டுள்ளனர்.

முதல்வரிடம் விருது பெற்ற வீரத்தம்பதி
முதல்வரிடம் விருது பெற்ற வீரத்தம்பதி
வி.ஶ்ரீனிவாசுலு

சம்பவத்தன்று இரவு, தன் மகனுடன் சண்முகவேலு செல்போனில் பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் அரிவாளுடன் இரண்டு கொள்ளையர்கள் நுழைந்தனர். அவர்களைப் பார்த்ததும் சண்முகவேல், கொள்ளையர்களை விரட்டியடிக்க முயன்றார். இதனால் கொள்ளையர்களுக்கும் சண்முகவேலுக்கும் மோதல் ஏற்பட்டது. சத்தம் கேட்டு செந்தாமரை வெளியில் வந்தார். அவரும் கொள்ளையர்களை எதிர்த்து போராடினார்.

கையில் கிடைத்த நாற்காலி, பெஞ்ச் உள்ளிட்டவற்றால் கொள்ளையர்களை சண்முகவேலும் செந்தாமரையும் துணிச்சலுடன் விரட்டியடித்தனர். இந்தக் காட்சிகள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன. இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் பொதுமக்களும் காவல்துறையினரும் துணிச்சல் தம்பதியினரை பாராட்டினர். சுதந்திர தினத்தையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வீரத் தம்பதிகளுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

சைலேந்திரபாபு, பாராட்டு கடிதம்
சைலேந்திரபாபு, பாராட்டு கடிதம்

இந்தநிலையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, பாராட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ``அன்புள்ள சண்முகவேல் அவர்களுக்கு, நீங்களும் உங்களது துணைவியாரும் 11.8.2019ல் கொள்ளையர்களைத் திருப்பி தாக்கி விரட்டியடித்த சம்பவத்தை செய்திகள் மூலம் அறிந்தேன். உங்களுடைய வீரமும், துணைவியர் செந்தாமரையின் துணிச்சலும் மெய்சிலிர்க்க வைக்கிறது. உங்கள் செயல் ஊக்கமூட்டும் முன்உதாரணமாக உள்ளது. உங்களது வீரச் செயல்களை பொதுமக்கள் பாராட்டுகிறார்கள். காவல்துறை உங்களின் துணிச்சலைப் பாராட்டுகிறது. ஆபத்தான ஆயுதம் ஏந்திய இரண்டு கொள்ளையர்களிடமிருந்து விடுபட்டு அவர்களை திருப்பி அடித்து விரட்டிய உங்களையும் துணைவியரையும் நானும் பாராட்டுகிறேன். தொலைபேசியில் பேசிவிட்டேன். நேரில் சந்திக்கிறேன். பாராட்டுக்கள் அன்புடன் சைலேந்திரபாபு" என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.