Published:Updated:

ஈரோடு: `கொரோனா மையம்; மறுத்த மண்டப உரிமையாளர்!’ - அதிரடி காட்டிய தாசில்தார்

மண்டப உரிமையை ரத்து செய்து பிறப்பித்த அரசாணை
மண்டப உரிமையை ரத்து செய்து பிறப்பித்த அரசாணை

கொரோனா தனிமை மையத்திற்காக திருமண மண்டபத்தை அதன் உரிமையாளர் தர மறுக்க, உடனே மண்டபத்திற்கு கொடுத்த உரிமத்தை தாசில்தார் ரத்து செய்திருக்கிறார்.

தமிழகத்தில் கொரோனாவை ஒழித்துக்கட்டிய முதல் மாவட்டமாக ஈரோடு இருந்து வந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரையும் குணமாகி வீடு திரும்பியதோடு, 30 நாள்களுக்கும் மேலாக ஒரு பாசிட்டிவ் கேஸ் கூட ரிப்போர்ட் ஆகாமல் இருந்தது. ஆனால், இரண்டாம் இன்னிங்சிலோ கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. கிட்டத்தட்ட 196 பேர் பெருந்துறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதிதாக வரும் கொரோனா நோயாளிகளுக்கு போதிய படுக்கைகள் இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன்னேற்பாடாக, மருத்துவமனையின் அருகே ஒரு கொரோனா தனிமை மையம் அமைக்க அதிகாரிகள் இடம் தேடி வந்திருக்கின்றனர்.

பெருந்துறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
பெருந்துறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

அந்தவகையில், பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அருகே கருமாண்டி செல்லிபாளையத்தில் உள்ள ‘ஸ்ரீமஹால்’ என்னும் திருமண மண்டபத்தை அதிகாரிகள் கேட்டிருக்கின்றனர். இதற்கு மண்டப உரிமையாளர் சேகர் உடன்பட மறுத்திருக்கிறார். பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன் எடுத்துச் சொல்லி பேசியும் எதுவும் வேலைக்காகவில்லை. உடனே, ‘திருமண மண்டபங்களை அரசின் கட்டுப்பாட்டில் எடுத்து கொரோனா தனிமை மையங்கள் அமைக்க அரசு சொல்லியிருக்கிறது. ஆனால், நீங்களோ உங்கள் மண்டபத்தினுள் தணிக்கை செய்ய விடாமலும், மண்டபத்தை கொரோனா மையமாக செயல்படுத்த அனுமதிக்கவும் இல்லை. இது அரசுக்கு எதிரான செயல். எனவே, உங்கள் மண்டபத்திற்கு கொடுத்த உரிமத்தினை ரத்து செய்கிறோம். இனி உங்கள் மண்டபத்தில் ஏதேனும் நிகழ்ச்சிகள் நடைபெற்றால் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என தாசில்தார் முத்துக்கிருஷ்ணன் அதிரடி அரசாணை கொடுத்திருக்கிறார்.

இதனைப்பார்த்து பதறிப்போன மண்டப உரிமையாளர் சேகர், `கொரோனா தனிமை மையத்திற்காக என்னுடைய திருமண மண்டபத்தை கொடுப்பதற்குச் சம்மதிக்கிறேன்’ என சரண்டர் ஆகியிருக்கிறார். அதனையடுத்து மண்டபத்தின் உரிமத்தை ரத்து செய்த அரசாணையை தாசில்தார் ரத்து செய்திருக்கிறார்.

இதுகுறித்து பெருந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணனிடம் பேசினோம். “ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பெருந்துறையிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை கொடுத்து வருகிறோம். கொரோனா தொற்று அதிகமாகி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருகே ஒரு கொரோனா தனிமை மையம் உருவாக்க ஏற்பாடு செய்து வந்தோம். அந்தவகையில் தான், மருத்துவக் கல்லூரிக்கு அருகே ஒரு கி.மீ தூரத்திலுள்ள 2,500 பேர் அமரக்கூடிய அந்த `மஹால்’ உரிமையாளரிடம் பேசினோம். எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் மண்டபம் தர மறுத்துவிட்டார்.

மண்டப உரிமத்தை திரும்பக் கொடுத்த தாசில்தார்
மண்டப உரிமத்தை திரும்பக் கொடுத்த தாசில்தார்

இந்த கொரோனா சூழலில் பொதுமக்கள் நலனுக்கே கொடுக்கலைன்னா என்ன அர்த்தம்னு, ‘பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005 பிரிவு 61-ன் படி' மண்டப உரிமையை ரத்து பண்ணிட்டேன். அதன்பிறகு அவர் மண்டபத்தை கொடுக்க முன்வந்ததால், அந்த உத்தரவை ரத்து செய்துவிட்டேன். இப்போது அந்த மண்டபத்தை தனிமை மையமாக மாற்றுவதற்கான வேலைகள் நடந்து வருகிறது” என்றார்.

அரசிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால் மண்டப உரிமையை ரத்து செய்துவிடுவார்களோ என்ற பயம் ஒருபுறமும், மண்டபத்தை கொரோனா மையத்திற்காகக் கொடுத்தால் நாளை யாரும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்காக புக் செய்ய மாட்டார்களே என்ற பயத்தாலும் மண்டப உரிமையாளர்கள் பயந்து போய்க் கிடக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு