கடந்த சில தினங்களாகப் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, தாம்பரம் - கிஷ்கிந்தா சாலையிலிருக்கும், அன்னை அஞ்சகம் நகர் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. இடுப்பளவுக்குத் தேங்கி நிற்கும் வெள்ள நீரால் அந்த பகுதியிலிருக்கும் வீடுகள் அனைத்தும் மூழ்கிக் கிடக்கின்றன. அதனால், அங்கு வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை அரசு அதிகாரிகள் மீட்டு, பெருங்களத்தூரிலிருக்கும் அரசுப் பள்ளி ஒன்றில் தற்காலிகமாகத் தங்க வைத்திருக்கின்றனர்.

அங்கு, ஒரே பள்ளிக்கூட கட்டடத்தில் அதிக அளவிலான மக்கள் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அதனால், இடப்பற்றாக்குறை காரணமாக ஏராளமானோர் அங்கிருந்து வெளியேறி முடிச்சூர் அவுட்டர் ரிங்க ரோடு பகுதியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் சுங்கச்சாவடியில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பள்ளிக்கூட முகாமில் தங்கவைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு, சரியான உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. அதனால், குழந்தைகளுக்குப் பால் வாங்கி கொடுக்கக் கூட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். சுங்கச்சாவடியில் தங்கள் நிலைமையைப் பார்த்து, தன்னார்வலர்கள் சிலர் உணவு பொட்டலங்கள் வழங்கி வருவதால், அரசு அதிகாரிகள் முறையாகத் தங்குமிடத்துக்கு ஏற்பாடு செய்யும் வரை தாங்கள் சுங்கச்சாவடியிலேயே தங்கியிருக்கப் போவதாகக் கூறுகின்றனர்.


கனரக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சாலையில் பச்சிளம் குழந்தைகளை வைத்துக் கொண்டு பரிதவிக்கும் இந்த மக்களுக்கு அரசு உடனடியாக உதவ முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
- இரா. மா. அடலேறு,
(மாணவப் பத்திரிகையாளர்)