Published:Updated:

``அந்த இரண்டு காரணங்கள்தான் திருவள்ளுவர் யாரென்று சொல்லும்!" கவிஞர் மகுடேசுவரன்

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

`திருவள்ளுவர் கூறிய நெறிகளை அவரது காலகட்டம் கொண்டு பார்க்க வேண்டும் என்பது என் கருத்து.’

திருக்குறளும் திருவள்ளுவரும் தமிழர்தம் வாழ்வில் இரண்டற கலந்து நிற்பன. பள்ளி பாடப்புத்தகம், அரசுப் பேருந்துகள், அரசு அலுவலகங்கள் என அன்றாடத்தில் ஒருமுறையேனும் திருவள்ளுவரையும் திருக்குறளையும் பார்த்திட நேரும்.

வள்ளுவர் கோட்டமும் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவரின் பிரமாண்ட சிலையும் தமிழரின் பெருமைமிகு அடையாளங்கள். தமிழகத்தின் சில கிராமங்களில் திருவள்ளுவரை இறைவனாக பாவித்து அணையா தீபமேற்றி வழிபடுகிறார்கள்.

திருவள்ளுவரின் சித்திரம் நம் மனதைவிட்டு ஒருபோதும் அகலாத ஒன்று. அந்தச் சித்திரம்தான் சமீபத்தில் இணையதளமெங்கும் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பி.ஜே.பி தமிழ்நாடு முகநூல் பக்கத்தில், திருவள்ளுவர் காவி நிற உடையில் திருநீறு பட்டையுடன் இருக்கும் ஓவியம் வெளியிடப்பட்டது. இது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

திருவள்ளுவர்
திருவள்ளுவர்

திருவள்ளுவர் இந்து மத சாயல் கொண்டவர் என, இந்துமத ஆதரவாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மறுபுறம், வள்ளுவர் மதசார்பற்றவர் என்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலைக்கு சாணம் பூசி அவமரியாதை செய்த வருந்தத்தக்க சம்பவமும் நடந்துள்ளது. திருவள்ளுவரின் பிறந்த ஊர், அவரின் பெயர் எனப் பல குறித்தும் தமிழ் அறிவுலகில் மாற்றுக்கருத்துகள் உள்ளன. சமீபத்தில் எழுப்பப்பட்டுள்ள திருவள்ளுவரின் மதம் சார்ந்த சந்தேகங்கள் குறித்து தமிழ் அறிஞர்களிடம் பேசினோம்.

'தமிழக மக்கள் முன்னணி'யின் ஒருங்கிணைப்பாளரும் திருக்குறள் குறித்து பல ஆய்வுகளை மேற்கொண்டவருமான பொழிலன் பேசுகையில், "திருவள்ளுவரை இந்து மத அடையாளத்துக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகள் ஆரம்ப காலத்திலிருந்தே நடந்துள்ளன. திருக்குறளுக்கு, பரிமேலழகர் எழுதிய உரையிலிருந்தே இந்தச் செயல் ஆரம்பித்துவிட்டது என்றும் சொல்லலாம். திருக்குறளை மனுதர்மக் கருத்துகள் கொண்ட நூல் என்று நிறுவும் முயற்சிதான் இது. ஆனால், திருக்குறள் மனுதர்மத்துக்கு எதிரான 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கருத்தை உள்ளடக்கியது. மேலும், இன்னார்தான் படிக்க வேண்டும். இன்னார் படிக்கக் கூடாது என்பதற்கெதிராகப் பல குறள்கள் உள்ளன. எனவே, நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். திருக்குறளில் மனுதர்மத்துக்கு எதிரான கருத்துகளே உள்ளது. மேலும், திருவள்ளுவர் இந்துவா என்ற கேள்விதான் இப்போது பரவலாகக் கேட்கப்படுகிறது.

பொழிலன்
பொழிலன்

இது வேடிக்கையான கேள்வி. திருவள்ளுவர் காலத்தில் இந்து மதம் என்ற ஒன்றே இல்லை. திருவள்ளுவர் 'இயற்கையை' வழிபட்டிருக்கத்தான் வாய்ப்புகள் அதிகம். 'தெய்வம்', 'இறை' என்ற வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்கிறார். அந்தப் பதங்களைத் திட்டியும் இருக்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பே, பிஜேபியைச் சேர்ந்த தருண் விஜய், 'திருக்குறளை முன்னெடுப்பதற்கான செயல்திட்டம் ஆர்.எஸ்.எஸிடம் உண்டு' என்று பேசியுள்ளார். தமிழர்கள் வாழும் இடங்களிளெல்லாம் இவர்கள், திருக்குறளைப் பற்றிப் பேசுவது ஒரு சூழ்ச்சிதான். ஆனால், திருவள்ளுவர் இந்து மதம் சார்ந்தவராக இருக்க வாய்ப்பே இல்லை" என்றார் ஆதங்கத்துடன்.

கவிஞர் மகுடேசுவரன் இதுகுறித்து பேசுகையில், "திருவள்ளுவர் தமிழ்மொழியின் தலை சிறந்த புலவர். அவர் தன்னுடைய இலக்கியத்தை ஓர் அறநூலாகவே இயற்றியிருக்கிறார். அந்த நூல் அறம், பொருள், இன்பம் என மூன்று பகுப்புகளாக உள்ளது. அதில் பொருள் சார்ந்து பல கருத்துகளை பொருட்பாலில் தெரிவித்துள்ளார். அறம் சார்ந்த கருத்துகளில் தவம், ஊழ் முதலியவற்றைக் கூறியிருக்கிறார். அதை வைத்தே அவருக்கு மதம் சார்ந்த ஓர் எண்ணம் இருக்குமோ எனப் பார்க்கின்றனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட நூல் திருக்குறள். அந்தக் காலகட்டத்தில் சமணம், பௌத்தம் உள்ளிட்டவற்றில் அவர் எதைப் பின்பற்றினார் எனப் பார்த்தால், அவருடைய கருத்துகள் சமண மதத்துடன் நெருங்கிய தொடர்புடையவையாக இருக்கின்றன. திருவள்ளுவர் சமண மதத்தைத் சார்ந்தவர் என்ற கருத்துகள்கூட சொல்லப்படுகின்றன. துறவு குறித்து அவர் கூறியுள்ள ஆழமான கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு அவர் சமணம் தொடர்புடையவராகக் கூறுகிறார்கள்.

கவிஞர்.மகுடேசுவரன்
கவிஞர்.மகுடேசுவரன்

திருவள்ளுவர் கூறிய நெறிகளை அவரது காலகட்டம் கொண்டு பார்க்க வேண்டும் என்பது என் கருத்து. அந்தக் காலத்தில் சான்றோர்களை ஒரு மாமுனியாகப் பார்க்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. பெரும் சொற்கள் கூறுகிறவர்கள் அந்தச் சமூகத்தின் மாமுனியாகவே பார்க்கப்பட்டார்கள். அந்தக் காலத்தின் மதச்செல்வாக்கு எனத் தமிழ் நிலத்தில் எது குறித்தும் உறுதியாகச் சொல்ல முடியாது. அன்று நிலவிய அரசாட்சி ஆகியவை குறித்து நாம் பார்க்கும்போது ஒரு தொகுப்பான ஒருவராகத்தான் திருவள்ளுவரைச் சொல்ல முடியும். அவரின் கருத்துகளில் பிற உயிர்கொல்லாமை, துறவு போன்ற சமணக் கருத்துகள்தான் அதிகமிருந்தன. அவரை நாம் எந்த மதக் கட்டுக்குள்ளும் வைக்கத் தேவையில்லை. எல்லோருக்குமான கருத்துகளும் அவரிடத்தில் உள்ளது. அவர் அனைவருக்குமானவர்’’ என்றார்.

திருவள்ளுவர் ஓவியம் உருவானது எப்படி? -  ஓவியர் வேணுகோபால் சர்மாவின் நாற்பதாண்டுப் போராட்டம்
அடுத்த கட்டுரைக்கு