Published:Updated:

தேனி: `நேரடி கொரோனா மரணங்கள் மிகக் குறைவு!’ - சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன்

Radhakrishnan IAS
Radhakrishnan IAS

கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து, தமிழக சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தேனியில் இன்று ஆய்வு செய்தார்.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்புப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட எஸ்.பி சாய்சரண் தேஜஸ்வி, கம்பம் எம்.எல்.ஆ ஜக்கையன் மற்றும் வருவாய், சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்
ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்
தேனி: `ஒரே தெருவில் 46 பேருக்கு கொரோனா!’ - அதிர்ச்சி கொடுத்த துக்க நிகழ்ச்சி

”கொரோனா தொற்று குறைந்து வருகிறது. தற்போதுதான் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். காய்ச்சல் கண்டறியும் முகாம் அமைக்கப்பட்டு, நோய்த் தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. ஊரகப்பகுதிகளில், இன்னும் மாஸ்க் போடாத நிலையில்தான் மக்கள் உள்ளனர். இந்தப் பழக்கவழக்கம் மாற வேண்டும். தேனி மாவட்டத்தில் நோய்த் தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறையுமென எதிர்பார்க்கிறோம். லேசான அறிகுறியோடு இருக்கும் பலரும், தனக்கு கொரோனா தொற்று இல்லை என நினைத்துக்கொண்டு, பரிசோதனை செய்யாமல், பலருக்கும் தொற்றினை பரப்பி வருகிறார்கள். தேனி மாவட்டத்தில், ஒரு நாளில் 2,000 பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதை 3,000-மாக அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்
ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பி.எஸ்

கொரோனா பாதிக்கப்பட்ட அல்லது இறக்கும் நபர்களைக் கையாள ஆம்புலன்ஸ் பற்றாக்குறை இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த ராதாகிருஷ்ணன், ``150 கூடுதல் ஆம்புலன்ஸ்கள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆம்புலன்ஸ் வந்துவிடும்” என்றார்.

தேனி மாவட்டம் கூடலூரில், ஆம்புலன்ஸ் வராததால், கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலைத் தள்ளுவண்டியில் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு, ``இந்த மாதிரி ஒரு நிலை ஏற்பட்டிருக்கக் கூடாது. கொரோனா பாசிட்டிவ் நபர்கள் வீட்டில் இறந்தால், உடலை ஒன்றரை மணி நேரத்தில் எடுப்பதில் ஆரம்பித்து அனைத்தும், அப்பகுதி நகராட்சி அல்லது பேரூராட்சி அதிகாரிகளுக்கு அறுவுறுத்தப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் தன்னார்வலர்கள் கொரோனா தடுப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். தமிழகம் முழுக்க 1,18,000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. 12 மாவட்டங்களில் சித்தா சிகிச்சை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 4 சித்தா சிகிச்சை மையங்கள் உள்ளன. மாற்று நோயாளிகளே அதிகம் இறக்கின்றனர். நேரடி கொரோனா மரணங்கள் மிகக் குறைவு. தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைய பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம்” என்றார்.

தேனி: `தாமதமான ஆம்புலன்ஸ்!’ - தள்ளுவண்டியில் மூதாட்டி உடலை எடுத்துச் சென்ற அவலம்
அடுத்த கட்டுரைக்கு