Published:Updated:

சுவர் கடிகாரம் மூலம் தமிழ் எண்களை பிரபலப்படுத்தும் தமிழ்த் தாத்தா!

இரா.மோகன்
உ.பாண்டி

சுவர் கடிகாரம் செய்வதற்கு தேவையான உபகரணங்களை வாங்கி வந்து அவற்றில் தமிழ் எண்களான 'க' வில் தொடங்கி 'க உ' வரை (1 முதல் 12) வரையிலான எண்களை அச்சிட்டு சுவர் கடிகாரங்களை உருவாக்குகிறார்.

தமிழ் எண்கள் கொண்ட கடிகாரத்துடன் மாரியப்பன்
தமிழ் எண்கள் கொண்ட கடிகாரத்துடன் மாரியப்பன் ( உ.பாண்டி )

தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தமிழ் எண்களுடன் கூடிய சுவர் கடிகாரங்களை தயாரித்து அவற்றை இலவசமாக பள்ளிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த முதியவர் ஒருவர்.

தமிழ் எண்களை கொண்ட கடிகாரம்
தமிழ் எண்களை கொண்ட கடிகாரம்
உ.பாண்டி

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டை அருகே உள்ளது ருஜிராபாளையம். இந்த கிராமத்தைச் சேர்ந்த முதியவர் மாரியப்பன். தற்போது கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள நாற்காலிகள் வாடகைக்கு விடும் கடை ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். 82 வயதினை அடைந்த அந்த வயது முதிர்ந்த தொழிலாளி தமிழ் மொழியின் மீது கொண்ட ஈடுபாட்டினால் தமிழ் மொழியின் சிறப்புகளையும், தமிழ் எண்களையும் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சுவர் கடிகாரம் செய்வதற்கு தேவையான உபகரணங்களை வாங்கி வந்து அவற்றில் தமிழ் எண்களான 'க' வில் தொடங்கி 'க உ' வரை (1 முதல் 12) வரையிலான எண்களை அச்சிட்டு சுவர் கடிகாரங்களை உருவாக்குகிறார். அவற்றுக்கு இடையே தமிழ் மொழி குறித்த வினா விடைகள், திருக்குறள் மற்றும் தமிழ் அறிஞர்கள் படங்கள் ஆகியவற்றை அச்சிட்டு தமிழ் மொழி வளர்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். தமிழ் மொழியின் மீது ஏற்பட்ட ஆர்வம் குறித்து விவரித்த மாரியப்பன், ''கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டு நிகழ்ச்சியில் 'இனியவை நாற்பது' என்ற விளம்பரப் பலகையில் தமிழ் எண்களை பயன்படுத்தாமல் வழக்கத்தில் உள்ள பொதுவான எண்களையே பயன்படுத்தி இருந்தனர். தமிழ் மொழிக்காக நடைபெறும் ஒரு மாநாட்டில் தமிழ் மொழிக்கு பதிலாக வேறு மொழியில் எண்கள் எழுதியிருந்தது என்னை வருத்தமடைய செய்தது.

அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு தமிழ் எண் கடிகாரம் பரிசளிக்கும் மாரியப்பன்.
அப்துல்கலாம் பயின்ற பள்ளிக்கு தமிழ் எண் கடிகாரம் பரிசளிக்கும் மாரியப்பன்.
உ.பாண்டி

அப்போது முதல் தமிழ் எண்களை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. மக்கள் எளிதில் அறியும் வகையில் சுவர் கடிகாரங்களில் தமிழ் எண்களை பயன்படுத்தி உருவாக்கினேன். அவற்றை பள்ளிகள் மற்றும் சில அலுவலகங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடம், தஞ்சை மற்றும் மதுரையில் உள்ள தமிழ்ச்சங்கங்கள், கருணாநிதி இல்லம், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் எனது தமிழ் எண் சுவர் கடிகாரம் இடம் பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல்கலாம் படித்த பள்ளிக்கும் இந்தக் கடிகாரத்தினை வழங்கியுள்ளேன்'' என்றார்.