Published:Updated:

பசி பட்டினி.. தூங்காத இரவுகள்.. 50 நாட்களுக்கு பிறகு ஊர் திரும்பிய தமிழர்கள் வேதனை!

திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை
திருச்சி விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

“கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவித்த தமிழர்கள் இன்று திருச்சி வந்தடைந்தனர். கடந்த 50 நாட்களாக நாங்கள் பட்ட வலிகளைச் சொல்ல வார்த்தைகளே இல்லை” எனக் கலங்கினார்கள்.

மலேசியாவில் இருந்து சிறப்பு விமானம்!

தமிழகத்தில் இருந்து வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக மலேசியா நாட்டில் தங்கி இருந்தவர்கள் கொரோனா விவகாரத்தால் நாடு திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். இந்தியாவுக்கான அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் செய்வதறியாமல் தவித்தனர். ஏற்கனவே திருச்சியில் இருந்து இரண்டு சிறப்பு விமானம் மூலம், மலேசிய நாட்டைச் சேர்ந்தவர்கள் அந்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

`சாப்பிட்டு 2 நாளாச்சு; ஒடிசாவுக்கு நடந்தே போகிறோம்!’ - போலீஸாரைப் பதறவைத்த இளைஞர்கள்

இந்நிலையில், ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு வந்தே பாரத் மிஷன் எனும் பெயரில் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களைத் தாய்நாட்டுக்கு அழைத்துவரச் சிறப்பு தனி விமானங்களை அனுப்பி ஏற்பாடு செய்தது.

திருச்சி ரயில்  நிலையத்தில்
திருச்சி ரயில் நிலையத்தில்

அதன்படி மத்திய அரசு ஏற்பாடு செய்த ஏர்இந்தியா சிறப்பு தனி விமானம் மூலம் மலேசியாவில் சிக்கித் தவித்த 178 பயணிகள் நேற்று இரவு திருச்சிராப்பள்ளி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தனர்.

திருச்சி விமான நிலையத்துக்கு வந்த அவர்களை, திருச்சி மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் சுப்ரமணி, வருவாய் கோட்டாட்சியர் விசுவநாதன், பொன்மலை உதவி ஆணையர் தயாநிதி, மாநகராட்சி நகர் நல அலுவலர் ஜெகநாதன், திருச்சி கிழக்கு வட்டாட்சியர் மோகன், தேர்தல் தனி வட்டாட்சியர் முத்துசாமி ஆகியோர் சகிதமாக மாவட்ட ஆட்சியர் சிவராசு வரவேற்றார்.

தொற்று பரிசோதனை!

அங்கேயே திருச்சி மாவட்ட சுகாதாரத்துறையின் மூலம் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து பயணிகளில் ஒருவருக்கு கிட்னி தொடர்பான பிரச்னை இருக்கவே, அவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

சிறப்பு தனி விமானம் மூலம் வந்த யாருக்கும் கொரோனா வைரஸ் நோய் அறிகுறி இல்லை. ஆனாலும் அவர்கள் மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைப்பதற்காக திருச்சி மணிகண்டம் அருகில் உள்ள சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி விடுதிவிடுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு சுமார் 117 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மீதமுள்ள 60 பேர் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் குரு ஹோட்டல், ராஜசுகம் ஹோட்டல், பெமினா ஹோட்டல் மற்றும் பல்வேறு ஹோட்டல்களில் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து சில தினங்களில் மற்றொரு விமானம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திக் திக் 50 நாட்கள்.. !

நம்மிடம் பேசிய பயணிகள், ”கொரோனா ஊரடங்கு இந்தியாவை விட மலேசியாவில் மிகக் கடுமையாக பின்பற்றப்படுகிறது. விதிமுறைகளை மீறினால், கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுகிறது. இதனால் சொல்லமுடியாத துயரத்துக்கு ஆளாகிப் போனோம். கொரோனா பாதிப்பு அதிகரித்தவண்ணம் இருப்பதால், குடும்பத்தைத் தமிழகத்தில் விட்டுவிட்டு, மலேசியாவில் எங்கள் மனநிலை பட்ட பாடுகளைச் சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லபடியாக நாங்கள் ஊர் வந்து சேர்ந்தோம் என்பதை நம்ப முடியவில்லை” என்றார்கள்.

திருச்சி ரயில்  நிலையத்தில்
திருச்சி ரயில் நிலையத்தில்

ரயில் மூலம் வந்த 962 தமிழர்கள்!

இதேபோல், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணிபுரிந்த தமிழகத்தில் 34 மாவட்டங்களை சேர்ந்த 962 தொழிலாளர்கள் மத்திய - மாநில அரசுகளின் நடவடிக்கையால், பந்தர்பூர் ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு இரயில் மூலம் அழைத்துவரப்பட்டனர். அவர்கள் இன்று திருச்சி இரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தனர். அவர்கள் அனைவரையும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, நேரில் பார்வையிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 30 சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.

`குடும்பக் கஷ்டத்துக்காக வேலைக்கு வந்தோம்!’- மகாராஷ்டிராவில் தவிக்கும் தமிழக இளைஞர்கள்

மதுராந்தகத்தைச் சேர்ந்த கார்த்திக் நம்மிடம் பேசுகையில், “கடந்த 50 நாட்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளானோம். திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டோம். பல நாட்கள் சோறு இல்லாமல் பட்டினியாக கிடந்தோம். மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகம் இருப்பதால் அங்குச் சூழல் மோசமாக உள்ளது. சாப்பிட வெளியே சென்றாலும் போலீஸார் கைது செய்கிறார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிடந்த நாங்கள், ஊருக்கு வருவோம்னு நம்பவே இல்லை.” என்றார்.

திருச்சி ரயில்  நிலையத்தில்
திருச்சி ரயில் நிலையத்தில்

திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறுகையில், “இவர்கள் அனைவரும், மகாராஷ்டிரா மாநிலம் சோழாப்பூரில் பணி புரிந்தவர்கள். கொரோனா ஊரடங்கில் சிக்கிக் கொண்ட இவர்கள், சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் எனக் கோரிக்கை வைக்கவே, மத்திய, மாநில அரசுகள் அரசுகளின் நடவடிக்கையின் மூலம் அழைத்துவரப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் உள்ள 34 மாவட்டங்களைச் சேர்ந்த இந்த 962 பேரையும், திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அவர்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உள்ளதா எனப் பரிசோதனை செய்யப்படுவார்கள்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு