Published:Updated:

`எங்களுக்கு மட்டும் பாரபட்சம் ஏன்?' - இங்கிலாந்தில் தவிக்கும் 300 தமிழர்கள்

லண்டனில் இருக்கும் தமிழர் ஷ்யாமளா
லண்டனில் இருக்கும் தமிழர் ஷ்யாமளா

ஊரடங்கால் உலகமே முடங்கிப் போயிருக்கும் நிலையில், இங்கிலாந்தில் தவிக்கும் 300 தமிழர்கள், தங்களைத் தாயகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது. பெரும்பாலான நாடுகளிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. வெளிமாநில தொழிலாளர்களின் பிரச்னை ஒருபுறம் ரணத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிற, மறுபுறம் வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களும் தாயகத்துக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். யூ.கே-வில் 300-க்கும் மேற்பட்ட தமிழர்கள், தமிழ்நாடு திரும்புவதற்கான முயற்சி செய்து வருகிறார்கள்.

லண்டன்
லண்டன்

இதுகுறித்து, லண்டனில் பிஹெச்.டி படித்து வரும் ஷ்யாமளா, ``நான் சென்னை தி.நகரைச் சேர்ந்தவள். படிப்புக்காக லண்டனில் தங்கியிருக்கிறேன். இந்தியாவில் ஊரடங்கு தொடங்குவதற்கு முன்பே, இங்கு ஊரடங்கு தொடங்கிவிட்டது. வெளியிலேயே வர முடிவதில்லை. என்னுடைய படிப்பு எல்லாம் இனி ஆன்லைனில்தான். இயல்பு நிலை திரும்ப எப்படியும் ஓராண்டு ஆகிவிடும் என்கின்றனர்.

இந்த நேரத்தில் சொந்த ஊருக்குத் திரும்பி, அப்பா, அம்மாவைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. நான் மட்டுமல்ல, தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், இங்கு வெவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள். அனைவருமே, தாயகம் திரும்புவதற்காக விண்ணப்பித்துள்ளோம். ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதில் தகவல்களைப் பரிமாறிக்கொண்டிருக்கிறோம். மே 14-ம் தேதி லண்டன் டு சென்னைக்கு ஒரு விமானம் சென்றது.

ஷ்யாமளா
ஷ்யாமளா

மீதம் இருப்பவர்கள் இரண்டாவது விமானத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று சொல்லப்பட்டது. ஆனால், தற்போதுவரை அதுகுறித்து எந்தத் தகவலும் இல்லை. வயதானவர்கள், இதய நோயாளிகள், சர்க்கரை நோயாளிகள் எனப் பலரும் தமிழகம் திரும்பியாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பலருக்கு இங்கு மருத்துவ சிகிச்சை எடுக்கவும் முடியவில்லை.

அதனால், அவர்கள் அனைவரும் தமிழகம் வந்துதான் மருத்துவ சிகிச்சை எடுக்க வேண்டும். இதுவரை மும்பைக்கு மூன்று விமானங்கள் சென்றுவிட்டன. அதேபோல, டெல்லி, விஜயவாடா, கொச்சி எனப் பல்வேறு பகுதிகளுக்கு அந்தந்த மாநில அரசாங்கம் மூலம் விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன. தமிழக அரசுதான் உரிய ஏற்பாடுகளைச் செய்யவில்லையோ என்று தோன்றுகிறது. முதல்வர் முதல் அனைவரிடமும் எங்களது பிரச்னைகளை அனுப்பியுள்ளோம். எந்தப் பதிலும் இல்லை. இந்தியாவில் உள்நாட்டு விமான சேவை எல்லாம் தொடங்கிவிட்டது. அப்படி இருக்கும்போது, எங்களுக்கு மட்டும் பாரபட்சம்காட்டுவது ஏன்?

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னையில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டிருப்பது எங்களுக்கு நன்கு புரிகிறது. நாங்களும் இந்திய குடியுரிமை உள்ளவர்கள்தாம். எங்களுக்கும் பொறுப்புணர்வு இருக்கிறது. நாங்கள், வேறு மாநிலங்களுக்கு வந்துவிட்டு அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்திக் கொண்டு, அதன்பிறகு தமிழகம் வருவதற்கும் தயாராக இருக்கிறோம். இங்கே இருப்பது மிகுந்த மன அழுத்தத்தைக் கொடுக்கிறது. எனவே, தமிழக அரசு எங்களை தாயகம் அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு