கொச்சி டு தென்காசி நடைப்பயணம்! - பாதி வழியில் மயங்கிய தமிழக இளைஞர்கள்! #CoronaLockdown

கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுவிட்டதால் வேலை செய்த இடத்தில் தங்குவதற்கோ உணவுக்கோ வழியில்லாத சூழல் ஏற்பட்டது. அதனால் எப்படியாவது சொந்த ஊருக்குச் சென்றுவிட வேண்டும் என்ற வைராக்கியத்தில் நடைப்பயணம் தொடங்கினார்கள்.
கொரோனா வைரஸ் தாக்குதல் உலகம் முழுவதையும் புரட்டிப் போட்டிருக்கிறது. இந்த வைரஸைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குச் சென்றுவிட்டது. தொழில் நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்பட்டதால் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் அருகில் இருக்கும் மாநிலங்களில் வேலை செய்து வருகிறார்கள். நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் வேலை செய்த நிறுவனங்கள் மூடப்பட்டன.
கேரள மாநிலம் கொச்சி நகரில் உள்ள ஃபர்னிச்சர் நிறுவனத்தில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் வேலைசெய்து வந்தார்கள். அந்த நிறுவனத்திலேயே தங்கியிருந்து பணியாற்றி வந்தனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அவர்கள் வேலை செய்துவந்த நிறுவனம் மூடப்பட்டது.

அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டதால் உணவுக்கும் தங்குவதற்கும் வழியில்லாமல் தவித்தனர். அதனால் சொந்த ஊருக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர். அவர்கள் வேலை செய்த நிறுவன உரிமையாளர், ஒவ்வொருவருக்கும் செலவுக்கு 1,000 ரூபாய் வழங்கியிருக்கிறார்.
ஐந்து பேரும் கொச்சியில் இருந்து நடைப் பயணமாகவே கிளம்பியிருக்கிறார்கள். பேருந்துகள் இயங்காத நிலையில் நடந்து செல்லும் வழியில் காய்கறி ஏற்றி வந்து தமிழகத்துக்குள் திரும்பிச் செல்லும் லாரி அல்லது வேன் மூலம் சென்றுவிட முடியும் என்கிற நம்பிக்கையில் நடைப்பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.
வழியில் எங்கும் ஓய்வெடுக்காத நிலையில், நடந்து வந்த அவர்கள் இரவு 8 மணிக்கு மூவாற்றுப்புழா என்ற இடத்தை அடைந்துள்ளனர். உணவுக்கு வழியில்லாமலும் தண்ணீர்கூட குடிக்காமலும் ஓய்வின்றி நடந்ததால் இருவர் மயக்கமடைந்தனர்.
இதுபற்றி அந்தப் பகுதி மக்கள் அறிந்ததும் அவர்களை அழைத்து விசாரித்துவிட்டு உணவு மற்றும் தண்ணீர் கொடுத்து உபசரித்தனர். பின்னர் அங்கேயே ஓய்வெடுக்க அனுமதித்ததுடன், காலையில் எழுந்து சொந்த ஊருக்குச் செல்லுமாறு தெரிவித்தனர்.

கொச்சியில் இருந்து ஐந்து இளைஞர்கள் நடந்தே தமிழகத்துக்குச் செல்ல முடிவெடுத்து வந்த விவரம் தெரிய வந்ததும் அங்கு வந்த கேரள அதிகாரிகள், அனைவரையும் முகாமுக்கு அழைத்துச் சென்றார்கள். ``அவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட பின்னர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்" என அதிகாரிகள் தெரிவித்தனர்.