Published:Updated:

தேர்வு எழுதியவர்களில் 90 சதவிகிதம் பேர் ஃபெயில்? - சர்ச்சையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்!

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்
News
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்

தேர்வு எழுதியவர்களில் 10 சதவிகித மாணவர்களைத் தவிர்த்து, மீதமிருக்கும் 90 சதவிகித மாணவர்கள் முறைகேடாகத் தேர்வு எழுதியிருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில், 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வியாண்டுகளில் பயின்ற மாணவர்களுக்கு, கடந்த ஜூலை மாதம் மறுதேர்வு (Arrears) ஆன்லைனில் நடைபெற்றது. அந்த முடிவுகள் டிசம்பர் 2-ம் தேதி வெளியானது. இரண்டு ஆண்டுகள் தாமதமாக நடந்த தேர்வின் முடிவுகள், மாணவர்கள் தலையில் பேரிடியாய் விழுந்திருக்கிறது.

தேர்வு எழுதியவர்கள் எந்த முறைகேடுகளிலும் ஈடுபடாத போதிலும், பல்கலைக்கழக நிர்வாகம் தாங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி ஃபெயில் ஆக்கியிருப்பதாகவும், உடனடியாக இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாணவர்கள் முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள்.

இதுகுறித்து மறுதேர்வு எழுதிய மாணவர்கள் சிலர் கூறுகையில், "தேர்வு எழுதியதில் 10 சதவிகித மாணவர்களை தவிர்த்து, மீதமிருக்கும் 90 சதவிகித மாணவர்கள் முறைகேடாக (MALPRACTICE), தேர்வு எழுதியிருக்கின்றனர் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களின் விடைத்தாள்களை திருத்தாமல், தேர்ச்சி பெறவில்லை என்றும் அறிவித்துவிட்டனர். அதேபோல தொழில்நுட்ப கோளாறாலும் பல மாணவர்கள் ஃபெயில் ஆகியிருப்பதாகக் கூறியிருக்கின்றனர்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

ஆன்லைனில் தேர்வு நடத்திய போதே, அந்த செயலியில் நிறைய தொழில்நுட்ப கோளாறுகள் இருந்தன. இதையெல்லாம் நாங்கள் அப்போதே சுட்டிக் காட்டினோம். ஆனால், அதையெல்லாம் பரிசீலிக்காமல் இப்படி ஃபெயில் ஆக்கியிருக்கிறார்கள். பல்கலைக்கழகத்தின் தவறான போக்கால், நன்கு படிக்கும் மாணவர்கள் கூட ஃபெயில்ஆகியிருக்கின்றனர். இதில் எழுத்து தேர்வில் ஃபெயில் ஆனவர்களை, செய்முறை தேர்விலும் ஃபெயில் ஆக்கியிருக்கிறார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதம்
முதல்வருக்கு எழுதியிருக்கும் கடிதம்

கடந்த செப்டம்பர் மாதம், பல்கலைக்கழக பேராசிரியர்கள் முன்னிலையில் செய்முறை தேர்வுகள் நடந்தன. ஆனால், அந்த விடைத்தாள்களும் திருத்தப்படாமல், 'பங்கு பெறவில்லை' (not attended ) என்று குறிப்பிட்டு ஃபெயில் ஆகியிருப்பதாகத் அறிவித்திருக்கின்றனர்.

மேலும், பல்கலைக்கழகம் வெளியிட்ட தேர்வு முடிவில் சில இடங்களில் மாணவர்களின் பெயருக்கு பதிலாக, 'State Bank of India' என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இது அவர்களின் அலட்சியத்துக்கு ஓர் சிறிய உதாரணம்தான். பல்கலைக்கழகத்தின் செயலால், 2017 பேட்ச் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால், தற்போது இறுதியாண்டு படிக்கும் அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.

சர்ச்சையான தேர்வு முடிவுகள்
சர்ச்சையான தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

இது குறித்தத் தகவல்களை சமூக வலைதளங்களிலோ, ஊடகங்களிடமோ பகிரக் கூடாது என்று உத்தரவே போட்டனர். வேளாண் பல்கலைக்கழகத்தை பொறுத்தவரை தேர்வு முடிவுகள் எப்போதுமே தாமதமாக தான் வெளியாகும். தேர்ச்சி பெறவில்லையே என்று, மறுகூட்டலுக்கு( Re- evaluation) விண்ணப்பித்து விட்டு, அந்த முடிவுக்காக காத்திருப்போம். ஆனால் அந்த முடிவுகள் வெளியாவதற்கு முன்பே, அடுத்த மறு தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டு கட்டணத்தையும் வசூலிக்கின்றனர்.

ஒருவேளை, மாணவர்கள் மறு கூட்டலில் தேர்ச்சி பெற்றாலும், மறுதேர்வுக்கான கட்டணத்தை திரும்ப கொடுப்பது கிடையாது. பல்கலைக்கழகம் இனியாவது, மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி யோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை" என்றனர்.

இதுகுறித்து பல்கலைக்கழக தரப்பு அளித்துள்ள விளக்கத்தில், “90 சதவிகித மாணவர்கள் ஃபெயில் என்பது தவறு. இதில், பெரும்பாலானோர் தேர்ச்சி பெற்று, உயர் படிப்புக்கு சென்றுவிட்டனர். மாணவர்கள் மொபைலிலேயே தேர்வு எழுதும் வகையில், மிக எளிதான முறையில் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினோம். மாணவர்கள் சரியான பதிலை தேர்ந்தெடுத்தால் போதுமானது. செய்முறை தேர்வி ஃபெயில் என்று சொல்வதும் தவறு. ஒரு மாணவர் முறைகேடாக தேர்வு எழுதினால், அவர் அனைத்து பாட தேர்வுகளிலும் ஃபெயில் என்பது பல்கலைக்கழக விதி. மேலும், அந்த மாணவர் அடுத்த செமஸ்டர் தேர்வுகளையும் எழுத முடியாது. மாணவர்களின் எதிர்காலம் முக்கியம். அதேநேரத்தில், கல்வித்தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இவர்கள் விவசாயிகளுக்காக நேரடியாக பணியாற்ற போகின்றனர். அதனால், சரியான வழியில் தேர்ச்சி பெறுவதுதான் அவர்களுக்கும், சமூகத்துக்கும் நன்மை தரும்.” என்று கூறியுள்ளனர்.