Published:Updated:

பிரதமரைச் சந்திக்கும் முதல்வர், டெல்லியில் விவசாயிகளையும் சந்திக்க வேண்டும்! - டெல்டா விவசாயிகள்

முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் போராட்டங்களை நடத்தினார்.

பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்காக டெல்லி செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளைச் சந்தித்துப் பேச வேண்டுமென டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

விவசாயிகள் போராட்டம்
விவசாயிகள் போராட்டம்

ஜூன் 17-ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச டெல்லி செல்லவிருக்கிறார். இது குறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் ‘’விவசாயிகளுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனுக்கு ஆதரவாகவும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் கடந்த 200 நாள்களாகப் போராட்டம் நடத்திவருகிறார்கள். கடும் குளிர், வெயில், கனமழையிலும் இரவு பகலாக இவர்களது போராட்டம் அர்ப்பணிப்போடு தொடர்ந்துகொண்டிருக்கிறது. இதுபோல் உலகில் வேறு எங்கும் இப்படி வீரம் செறிந்த, அர்ப்பணிப்பு மிக்க போராட்டம் நடந்ததில்லை. கொரோனா பெருந்தொற்று அச்சுறுத்தும் நிலையிலும்கூட, விவசாயிகள் தங்களது போராட்டத்தைக் கைவிடவில்லை.

சுந்தர விமல்நாதன்
சுந்தர விமல்நாதன்

இந்தப் போராட்டத்தில் இதுவரை 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிர்த் தியாகம் செய்துள்ளார்கள். டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் போராட்டங்களை நடத்தினார். சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக டெல்லி செல்கிறார். ஜூன் 17-ம் தேதி, பிரதமர் மோடியைச் சந்தித்த பிறகோ, அல்லது அதற்கு முன்பாகவோ டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளைச் சந்தித்து, தனது ஆதரவை அவர் தெரிவிக்க வேண்டும். பிரதமர் அலுவலகத்திலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள காசிப்பூரில்தான் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இது மிகவும் குறைவான தூரம்தான். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பயணிக்க அதிக நேரம் ஆகாது. டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை, பஞ்சாப், ஹரியானா, கேரளா உள்ளிட்ட மாநிங்களின் முதலமைச்சர்களெல்லாம் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.

ஏற்கெனவே தமிழக முதலைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்ததோடு, டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு எதிராக கருத்து தெரிவித்துவந்தார். இதனால் தமிழ்நாட்டின்மீது டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு மிகுந்த மன வருத்தமும் அதிருப்தியும் ஏற்பட்டது. அவரால் ஏற்பட்ட இழுக்கை, தற்போதைய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போக்க வேண்டும். அர்ப்பணிப்போடு போராடும் விவசாயிகளுக்கு ஊக்கமும் நம்பிக்கையும் அளிக்கும்விதமாக, தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து தனது ஆதரவை வெளிப்படுத்த வேண்டும். நிச்சயம் சந்திப்பார் என டெல்டா விவசாயிகள் நம்புகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு