Published:Updated:

`மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் தடுத்துநிறுத்தப்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள்!'-தேனி மலைக்கிராம சர்ச்சை

மஞ்சனூத்து சோதனைச் சாவடி
மஞ்சனூத்து சோதனைச் சாவடி

தமிழக விவசாய சங்கம் சார்பில், அரசரடி செல்ல இருந்த விவசாயச் சங்க நிர்வாகிகள், மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

தேனி மாவட்டம் வருசநாடு அருகே உள்ள வெள்ளிமலை, அரசரடி, பொம்மராஜபுரம், குழிக்காடு, இந்திரா நகர், மஞ்சனூத்து, மேலக்குடிசை ஆகிய மலைக்கிராமங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்துவருகிறார்கள். இங்கு, காய்கறிகள் பயிர் செய்யப்படுகின்றன.

மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து
மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து

இக்கிராமங்கள் அனைத்தும், மேகமலை வன உயிரினச் சரணாலயத்திற்கு உட்பட்டவை. இவற்றிற்கு செல்ல வேண்டும் என்றால், மஞ்சனூத்து வனத்துறை சோதனைச் சாவடியைக் கடந்துதான் செல்ல வேண்டும். வன விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், இப்பகுதியில் வனத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை, தமிழக விவசாய சங்கம் சார்பில், அரசரடி செல்ல இருந்த சங்க நிர்வாகிகள் மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்தபோது பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகின. அரசரடி கிராமத்தில் வசிப்பவர், வனம். இவரின் மகன் ரவி. இவர்கள், அரசரடி அருகே உள்ள மலைப்பகுதியில் 3 ஏக்கர் பரப்பளவில் ஏலச் செடி பயிர் செய்திருக்கிறார்கள். அந்த இடம், வனத்துறைக்குச் சொந்தமானது எனக் கூறிய அரசரடி ரேஞ்சர் சதீஸ் கண்ணன், கடந்த 24-ம் தேதி, அந்நிலத்தில் இருந்த ஏலச்செடிகளை வனத்துறை ஊழியர்கள் உதவியுடன் அகற்றியுள்ளார். அதைத் தடுக்க வந்த வனம் மற்றும் அவரது மகன் ரவி ஆகியோரை, வனத்துறை ஊழியர்கள் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

`மாசில்லா தேசம் 2020; நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மரக்கன்றுகள்!'- தேனி அமைப்பின் பாசிட்டிவ் முயற்சி
வனத்துறையால் வெட்டி அழிக்கப்பட்ட ஏலச்செடிகள்
வனத்துறையால் வெட்டி அழிக்கப்பட்ட ஏலச்செடிகள்

காயமடைந்த இருவரும், கானாவிலக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். ரவியிடம் நாம் பேசியபோது, “என் அப்பா கேன்சர் நோயாளி. அவரை அரிவாளால் தாக்கியுள்ளனர். அந்த இடத்தை பாரம்பர்யமாக நாங்கள்தான் பயன்படுத்தி வருகிறோம். ஏலக்காய் செடியை பார்த்த ரேஞ்சர், 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டார். எங்களால் கொடுக்க முடியவில்லை. அதனால், ஆட்களை அழைத்துவந்து ஏலச்செடிகளை அழித்தது மட்டுமல்லாமல், என் அப்பாவை அரிவாளால் தாக்கிவிட்டனர். போலீஸார் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள்!” என்றார் வேதனையோடு.

இதையடுத்து தமிழக விவசாயிகள் சங்கம், இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் உள்ள நியாயத்தைக் கேட்டறிய, நேற்று அரசரடி கிராமத்திற்குச் செல்ல திட்டமிட்டது. இந்நிலையில்தான் அவர்கள் மஞ்சனூத்து சோதனைச் சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்கள். அரசரடி செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிச் செல்ல முயன்றும், அவர்களால் சோதனைச் சாவடியைத் தாண்டிச் செல்ல வனத்துறை அனுமதியளிக்கவில்லை.

வனத்துறையால் வெட்டி அழிக்கப்பட்ட ஏலச்செடிகள்
வனத்துறையால் வெட்டி அழிக்கப்பட்ட ஏலச்செடிகள்
ரசாயனம் போடாத ஆர்கானிக் செங்கரும்பு... சாகுபடியில் அசத்தும் தேனி விவசாயி!

இது தொடர்பாக மேகமலை வன உயிரின சரணாலயக் காப்பாளர் போஸ்லே சச்சின் துக்காராமிடம் பேசியபோது, “பிரச்னைக்கு உரிய இடம், முழுக்க முழுக்க வனத்துறைக்குச் சொந்தமானது. அவர்கள் அதை ஆக்கிரமித்து ஏலச்செடி பயிர் செய்திருக்கிறார்கள். எங்களுடைய ரேஞ்சர், ஏலச்செடிகளை அகற்றும்போது, அந்த இடத்தில் வனம் என்பவர் மட்டுமே இருந்தார். ஆனால், மருத்துவமனையில் வனம் மற்றும் அவரது மகன் ரவி இருவரும் சிகிச்சைக்காகச் சேர்ந்துள்ளார்கள். இது எப்படி நியாயமாகும்?

மேகமலை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. அதற்குள் இருக்கும் கிராமத்திற்குச் செல்ல, அந்த மக்களுக்கு மட்டுமே உரிமை உண்டு. மற்றவர்கள் சென்றால், அது அத்துமீறி நுழைவதாகத் தான் அர்த்தம். அதனால்தான், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகளைத் தடுத்து நிறுத்தினோம். அரசரடி, பொம்மராஜபுரம் பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைக்குக் கொண்டுசெல்ல, கிராம மக்கள், ஒரு வாகனத்தைப் பயன்படுத்தினார்கள். வனச்சட்டப்படி, அந்தப் பகுதியில் வாகனம் பயன்படுத்தத் தடை உள்ளது. அதனால், வாகனம் செல்ல தடை விதிக்கப்பட்டது. என்னிடம் மக்கள் முறையிட்டார்கள். வாரம் ஒரு நாள் வாகனம் செல்ல அனுமதித்தேன். கடந்த 24-ம் தேதி நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்திற்கு வந்த மக்கள், மூன்று நாள்கள் அனுமதி வேண்டும் என்று கலெக்டரிடம் முறையிட்டனர். எந்தவித யோசனையும் இன்றி, அதற்கும் சம்மதம் தெரிவித்தேன். இப்போது, முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட ஒரு நிலத்தை வனத்துறை மீட்கிறது. இப்போது எங்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இது எப்படி சரியாக இருக்கும்? பட்டா நிலத்தில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதை நாங்கள் எதுவுமே கேட்கவில்லையே...” என்றார்.

`விதைக்கு வட்டி; மாடுகளுக்கு பாஸ்!' - தேனி விவசாயிகள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் காரசார விவாதம்
கலெக்டர் மற்றும் மேகமலை வன உயிரினக் காப்பாளர்.
கலெக்டர் மற்றும் மேகமலை வன உயிரினக் காப்பாளர்.

இந்நிலையில், வனம் மற்றும் ரவி மீது மயிலாடும்பாறை காவல்நிலையத்தில் வனவர் சரவணக்குமார் புகாரின் பேரில், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ``வனப்பகுதியில் அத்துமீறி ஆக்கிரமிப்பு செய்து ஏலச்செடி விவசாயம் செய்தவர்களுக்கு முறைப்படி நோட்டீஸ் கொடுத்து, பின்னர் ஏலச்செடிகளை அகற்றும்போது, இவர்கள் இருவரும் அசிங்கமாகப் பேசியும், பணி செய்ய விடாமல் தடுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு