Published:Updated:

மே 31...25 மாவட்டங்களுக்குத் தளர்வு! - தமிழகத்தில் லாக் டௌன் 4.0; வரைமுறைகள் மற்றும் தளர்வுகள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை மே 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது

கொரோனா நோய்த் தொற்று காரணமாக மத்திய அரசு அறிவித்த மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தமிழக அரசானது ஊரடங்கு உத்தரவை மே 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ``தமிழகத்தில் நோய்த் தொற்று பரவல் அதிகம் இல்லாமலும், சிகிச்சைக்குக் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவின் கருத்துகளின் அடிப்படையிலும், அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்த முடிவுகளின் அடிப்படையிலும் ஊரடங்கு உத்தரவை மே 31-ம் தேதி நள்ளிரவு வரை ஏற்கெனவே நடைமுறையில் உள்ள பல்வேறு வரைமுறைகளுடனும், தளர்வுகளுடனும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.

தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படாத 12 மாவட்டங்கள்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, தி.மலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 12 மாவட்டங்களில் ஊரடங்கு தொடரும். நடைமுறையில் தளர்வு இல்லை.

நீலகிரி கொடைக்கானல் மற்றும் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு வெளியூர் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தற்போது உள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்படும்.

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே அனுமதி தொடரும்’

பெருநகர சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தவிர தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவிர பிற பகுதிகளில் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு மட்டுமே அனுமதி தொடரும்.

ஊரடங்கு
ஊரடங்கு

தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்கள்

கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் மற்றும் நீலகிரி ஆகிய 25 மாவட்டங்களுக்குக் கீழ்க்கண்ட சில தளர்வுகள் வழங்கப்படுகின்றன.

என்னென்ன தளர்வுகள்?

அந்தந்த மாவட்டங்களுக்குள் போக்குவரத்து இயக்கத்திற்கு மட்டும் தமிழக அரசின் இ-பாஸ் இல்லாமல் இயங்க தளர்வு அளிக்கப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கும், அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் சென்று வர போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

ஒரு மாவட்டத்திலிருந்து இன்னொரு மாவட்டத்திற்குச் சென்றுவர தமிழக அரசின் இ-பாஸ் பெற்றும் செல்லும் தற்போதைய நடைமுறையே தொடரும்.

அரசுப்பணிகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகளுக்குச் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் அதிகபட்சமாக 20 நபர்களும் வேன்களில் 7 நபர்களும், இன்னோவா போன்ற பெரிய வகை கார்களில் 3 நபர்களும், சிறிய கார்களில் ஓட்டுநர் தவிர்த்து இரண்டு நபர்களும் செல்ல அனுமதி.

மாவட்டங்களுக்குள் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ள 25 மாவட்டங்களில் இ பாஸ் இல்லாமல் வாடகை மற்றும் டாக்ஸி வாகனங்களை அத்தியாவசியப் பணிகளுக்கும் மருத்துவம் போன்ற பணி நிமித்தம் பயணம் செய்ய மட்டும் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஊரடங்கு
ஊரடங்கு

தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டம் - தற்போதுள்ள 50 சதவிகிதப் பணியாளர்களை 100 சதவிகிதப் பணியாளர்களாக உயர்த்துவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

சென்னை காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதிகளைத் தவிர தமிழ்நாட்டிலுக்கு அனைத்து மாநகராட்சி , நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் 50 நபர்களுக்கும் குறைவாகப் பணிபுரியும் தொழிற்சாலையில் 100 சதவிகிதம் பணியாளர்களுக்கும் அனுமதி

100 நபர்களுக்கு மேல் பணியாளர்கள் எண்ணிக்கை உள்ள தொழிற்சாலைகளில் 50 சதவிகிதப் பணியாளர்கள் அல்லது 100 பணியாளர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக” தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே நடைமுறையில் உள்ள கீழ்க்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள் மறு உத்தரவு வரும்வரை தொடர்ந்து அமலில் இருக்கும்

பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்கள்.

வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்கள் வழிபாடு மற்றும் அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள்.

திரையரங்குகள், கேளிக்கைக்கூடங்கள், மதுக்கூடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கடற்கரை, சுற்றுலாத்தலங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு அரங்குகள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற இடங்கள்.

அனைத்து வகையான சமய, சமுதாய, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள், விழாக்கள், கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்.

ஊரடங்கு
ஊரடங்கு

பொது மக்களுக்கான விமான, ரயில், பொதுப் பேருந்து போக்குவரத்து.

டாக்ஸி, ஆட்டோ, சைக்கிள் ரிக்ஷா

மெட்ரோ ரயில்,/ மின்சார ரயில்

தங்கும் விடுதிகள் (பணியாளர் விடுதிகள் தவிர), தங்கும் ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள்.

இறுதி ஊர்வலங்களில் 20 நபர்களுக்கு மேல் பங்கேற்கக் கூடாது.

திருமண நிகழ்ச்சிகளுக்கு, தற்போது உள்ள நடைமுறைகள் தொடரும்’’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு