Published:Updated:

`கொரோனாவை விரட்ட இரு வரியில் ஒரு வழி பிறக்கும்!’ - அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்ல முயற்சி

கொரோனா
கொரோனா

ஒரு இக்கட்டான தருணத்தில் ஒன்று கூடி உதவியைச் செய்ய முடியவில்லை என்றாலும் வரிகளில் மூலம் மக்களுக்கு உணர்த்த நினைத்தோம். ஊர் கூடாமலேயே ஒற்றுமையுடன் இருந்து கொரோனாவை விரட்டியடிக்க வேண்டும்.

கொரோனா குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களுக்குள் வாசகப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளதுடன் சிறந்த வாசகங்கள் மக்களிடையே சென்று சேரும் வகையில் வாட்ஸ் அப் கார்டுகளாக உருவாக்கி அதைச் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். `இரு வரிச் செய்தி.. ஒரு வழி பிறக்க உதவும்' என்பதே இதன் நோக்கம் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

கொரோனா விழிப்புணர்வு வாசகம்
கொரோனா விழிப்புணர்வு வாசகம்

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரண்டு வரியில் வாசகங்கள் எழுதி அனுப்பும் போட்டி அறிவிக்கபட்டுள்ளது. இதில் ஏராளமான ஆசிரியர்கள் கொரோனாவில் தற்காத்துக் கொள்கிற வகையிலான விழிப்புணர்வு வாசகங்களை எழுதி அனுப்பி வருகின்றனர்.

இதில் எளிதாக மக்களை ஈர்க்கக் கூடிய, சென்றடையக் கூடிய வகையிலான கொரோனா குறித்த வாசகங்களை வாட்ஸ் அப் கார்டாக உருவாக்கி ஆசிரியர் கூட்டணியில் உள்ள நிர்வாகத்தினர் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கள் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

கொரோனா விழிப்புணர்வு வாசகம்
கொரோனா விழிப்புணர்வு வாசகம்

இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்த நிர்வாகியான ஆசிரியர் தங்கபாபுவிடம் பேசினோம், ``உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கிற கொரோனாவால் பலவேறு நாடுகள் நிலைகுலைந்து போய் உள்ளன. மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்காகப் பாதிக்குள்ளான நாடுகள் பலவிதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அத்துடன் கொரோனா இந்தியாவில் பரவத் தொடங்கியதையடுத்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அதே நேரத்தில் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட பலர் கொரோனா வராமல் தடுக்கக் கூடிய விழிப்புணர்வுச் செயல்களைச் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மத்தியில் நாங்கள் ஒரு போட்டியை அறிவித்தோம். அதில் இரண்டு வரி மட்டுமே இருக்கக் கூடிய மக்கள் மனதில் பதிகின்ற வகையிலான வாசகங்கள் எழுதி அனுப்ப வேண்டும். அவற்றை நாங்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பார்வைக்குச் செல்லும் வகையில் பரப்பப்படும் எனக் கூறியிருந்தோம்.

ஆசிரியர் தங்கபாபு
ஆசிரியர் தங்கபாபு

கொரோனாவிலிருந்து தற்காத்துக் கொள்வதற்கும், என்ன செய்தால் இதிலிருந்து தப்பிக்கலாம் என்பதை மக்களுக்குத் தெரியபடுத்தும் வகையில் இந்தப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. சிறப்பான வாசகங்கள் எழுதி அனுப்பும் ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பின்னர் பரிசு வழங்கி கெளரவிக்கபட உள்ளனர்.

``நன்றாய் கைகளைக் கழுவு! ஒன்றாய் இருப்பதிலிருந்து நழுவு”, ``பழைய உணவு முறைக்கு மாறு! தமிழர் பெருமைதனைக் கூறு”, ``கையெடுத்துக் கும்பிடு! கொரானோ வராது நம்பிடு!”, ``இஞ்சி மஞ்சள் சுக்கு! இயற்கை கவசம் நமக்கு” , ``கூட்டமதைத் தவிர்த்திடு! கொரோனாவை விரட்டிடு” , ``விட்டமின் C யை ருசிப்போம்! கோவிட் 19 யைத் தவிர்ப்போம்!” என ஆசிரியர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். இவை வாட்ஸ் அப் கார்டுகளாக தயார் செய்து பல பகுதிகளுக்கும் பரவும் வகையில் பரப்பப்படுகிறது.

ஆசிரியர்கள் அனுப்பிய வாசகம்
ஆசிரியர்கள் அனுப்பிய வாசகம்

இரு வரியில் ஒரு வழி பிறக்க வேண்டும் அவை எல்லோரையும் சென்றடைய வேண்டும் இதுதான் நம்முடைய நோக்கம். ஒரு இக்கட்டான தருணத்தில் ஒன்று கூடி உதவியைச் செய்ய முடியவில்லை என்றாலும் வரிகளில் மூலம் மக்களுக்கு உணர்த்த நினைத்தோம். ஊர் கூடாமலேயே ஒற்றுமையுடன் இருந்து கொரோனாவை விரட்டியடிக்க வேண்டும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு