Published:Updated:

நாகை:`மருத்துவமனை அலட்சியத்தால என் கணவர் உசுரு போச்சே!’ -கதறும் மனைவி; மனித உரிமைகள் ஆணையம் விசாரணை!

 மாநில மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்

இது பற்றி அவர் மனைவி புகார் எழுப்பியதால், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தொற்றுக் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த தனியார் வங்கி உதவி மேலாளருக்கு திடீரென ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்தார். இது பற்றி அவர் மனைவி புகார் எழுப்பியதால், தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மனைவி்யுடன் ராஜேஷ்
மனைவி்யுடன் ராஜேஷ்

நாகை மாவட்டம், நாகூரைச் சேர்ந்த ராஜேஷ் தனியார் வங்கியில் உதவி மேலாளராகப் பணியாற்றிவந்தார். இவருக்கு கொரோனா  தொற்று ஏற்பட்டு, கடந்த 12.06.2021-ம் தேதி  முதல்  நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டிருந்தார். ராஜேஷுக்கு தனி ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமல், பைப் லைன் வழியாக சீகாப் மானிட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. இந்தநிலையில், கடந்த 23-ம் தேதி இரவு 9 மணியளவில் ஆக்சிஜன் வழங்கும் இயந்திரத்தில் வால்வு பழுதாகவே, நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காமல் தவித்ததாகச் சொல்லப்படுகிறது.

அதன் பிறகு அங்கு நடந்தவற்றை கணவரைப் பறிகொடுத்த சுபாஷினி சோகத்துடன் விவரித்தார்.

``எனக்கும், என் கணவருக்கும் கொரோனா பாசிட்டிவ்  என்று வந்த நிலையில், நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தோம். ஆறு நாள்ல நான் குணமடைந்தேன். அதுக்கப்புறம் என் கணவரைக் கூடவே இருந்து கவனிச்சுக்கிட்டேன். என் கணவர் நல்லபடியா உடல்நலம் தேறிட்டுவந்தார். சம்பவத்தன்னைக்கு நைட் 8 மணிக்கு  சாப்பிட்டார். நல்லா பேசிக்கிகிட்டு இருந்தார். "இன்னும் நாலு நாள்ல வீட்டுக்குப் போயிடலாம்னு" சொன்னார். ஆசையாய் கடலை மிட்டாய் கேட்டு வாங்கிச் சாப்பிட்டார். 9 மணிக்கு திடீர்னு ஆக்சிஜன் குழாயில பழுதுன்னு ஆக்சிஜனை நிறுத்திட்டாங்க. எல்லாருக்கும் பதற்றம். தனி சிலிண்டரில் இருந்தவங்களை அப்புறப்படுத்திட்டாங்க. பைப் லைன் மூலம் ஆக்சிஜன் பெற்றவங்களை என்ன செய்யறதுன்னு தெரியலை. டாக்டரோ, நர்ஸோ வரலை. அங்கிருந்த எல்லாருமே ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான்.

சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது ராஜேஷ்
சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த போது ராஜேஷ்

அவர்களுக்கும் புரியலை. என் வீட்டுக்கார் மூச்சுவிட முடியாம அவதிப்பட்டதும் நான் அழுது கத்தறேன். ஒவ்வொருத்தர் காலிலும் விழாத கொறையா கெஞ்சறேன். அதற்குள் அரை மணி நேரம் ஆகிப்போச்சு. கடைசியா மாடி ரூமுக்குத் தூக்கிட்டு போனாங்க. அப்பறம் பொட்டலமா கட்டி குழியில மூடிட்டாங்க. இனி ரெண்டு பெண்  புள்ளைகளைவெச்சுக்கிட்டு நான் எப்படி வாழ்வேன்? நிர்வாக அலட்சியத்தால என் கணவர் உசுரு போயிடுச்சு. இதைத் தானாக முன்வந்து மனித உரிமை கமிஷன் விசாரிக்கிறாங்க. அதனால் எனக்கு கணவரின் ட்ரீட்மென்ட் ரிப்போர்ட், டெத் சர்ட்டிஃபிகேட் கேட்டேன். தர மறுக்கிறாங்க. என் மீது ஆஸ்பத்திரி பொருள்களைச் சேதப்படுத்தியதா பொய் வழக்கு போடவும் முயற்சி பண்றதா கேள்விப்பட்டேன். எங்க தெய்வமே போயிடுச்சு. இனி என்ன நடக்கணுமோ நடக்கட்டும். எல்லாத்தையும் கலெக்டர்கிட்டே மனுவா கொடுத்திருக்கேன்’’ என்றார் கண்ணீருடன். இது பற்றி நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் விஸ்வநாதனிடம் விளக்கம் கேட்டோம். ``ராஜேஷ் 12 நாள்கள் தீவிர சிகிச்சையிலிருந்து, நோயின் தீவிர தாக்கத்தால்  சிகிச்சை பலனின்றி இறந்திருக்கிறார். ஆக்சிஜன் பற்றாக்குறையால் அல்ல. தேவையான ஆக்சிஜன் ஆஸ்பத்திரியில இருக்கு" என்று பதில் சொன்னார்.

அடுத்த கட்டுரைக்கு