Published:Updated:

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்: வீரப்பனுக்கு ஸ்கெட்ச் முதல் கோவை என்கவுன்ட்டர் வரை..! - மினி ஃப்ளாஷ்பேக்

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
News
சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

சைலேந்திரபாபு, தனக்குக் கீழ் பணியாற்றும் கடலோர காவல் படை போலீஸாருடன் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் மீனவ இளைஞர்களைச் சேர்த்து குழுக்களை அமைத்தார். 5,000 பேர் கொண்ட இளைஞர்களைத் தேர்தெடுத்து ஸ்பெஷல் பயிற்சி கொடுத்தார். அவர்கள்தான் கடலோர கேட்-கீப்பர்கள்.

சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்: வீரப்பனுக்கு ஸ்கெட்ச் முதல் கோவை என்கவுன்ட்டர் வரை..! - மினி ஃப்ளாஷ்பேக்

சைலேந்திரபாபு, தனக்குக் கீழ் பணியாற்றும் கடலோர காவல் படை போலீஸாருடன் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் மீனவ இளைஞர்களைச் சேர்த்து குழுக்களை அமைத்தார். 5,000 பேர் கொண்ட இளைஞர்களைத் தேர்தெடுத்து ஸ்பெஷல் பயிற்சி கொடுத்தார். அவர்கள்தான் கடலோர கேட்-கீப்பர்கள்.

Published:Updated:
சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்
News
சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்

தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் நியமிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. நாளை காலையுடன் தற்போதுள்ள டி.ஜி.பி திரிபாதி ஓய்வுபெறும் நிலையில், நாளை தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி-யாக சைலேந்திரபாபு ஐ.பி.எஸ் பதவியேற்கவுள்ளார்.

யார் இந்த சைலேந்திரபாபு ஐ.பி.எஸ்?

டாக்டர் சி.சைலேந்திரபாபு ஐ.பி.எஸ். 1987-ம் வருட தமிழக கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி. 34 வருடங்களாக போலீஸ் பணியில் இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்டவர். இவர் எழுதிய 13 புத்தகங்கள் பிரபலமானவை. அவற்றில் மூன்று போலீஸ்துறை பற்றியவை. மீதமுள்ள அனைத்தும் ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கானவை.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

50 வயதைக் கடந்த பிறகும், காஷ்மீர் டு கன்னியாகுமரி வரை 22 பேர் கொண்ட குழுவினருடன் சைக்கிளில் பயணப்பட்டிருக்கிறார். தலைமன்னார் டு தனுஷ்கோடி வரையிலான 28 கி.மீ தூரத்தை போலீஸ் குழுவினருடன் நீந்திச் சாதனை படைத்தவர். இதுவரை 50 மாரத்தான்களில் கலந்துகொண்டிருக்கிறார். தற்போது ரயில்வே போலீஸ் டி.ஜி.பி பதவியில் இருக்கிறார். தமிழகத்திலுள்ள டி.ஜி.பி-க்களில் சீனியர் இவர்தான். தற்போது ஹெட் ஆஃப் தி ஃபோர்ஸ் மற்றும் தமிழக சட்டம், ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி-யாக உள்ள திரிபாதி நாளையுடன் ஒய்வுபெறுகிறார். காலியாகும் அந்தப் பதவிக்குத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார் சைலேந்திரபாபு.

தமிழக ரயில்வே போலீஸின் உயரதிகாரியாக, கடந்த மூன்றரை வருடங்களாக இருந்துவருகிறார். ரயில்வே போலீஸ் பணியிலும் சைலேந்திரபாவு முத்திரை பதித்தார். அவர் வருவதற்கு முன்பு, ரயிலில் ஏற்படும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக வருடத்துக்கு 300 முதல் தகவல் அறிக்கைகள்தான் போடுவார்கள். ஆனால் சைலேந்திரபாபு வந்ததும், ரயில்வே காவல் நிலைய அதிகாரிகளை அழைத்து, புகார்களை வாங்கி, எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என்று கறாராக உத்தரவு போட்டார். அதன் பிறகு, வருடத்துக்கு 3,000 முதல் 3,500 எஃப்.ஐ.ஆர்-கள் பதிவாகின. தனியாகப் பயணிக்கும் பெண் பயணிகளிடம் சில்மிஷம் செய்யும் ஆசாமிகள் பலரைப் பற்றி ரயில்வே போலீஸின் அவசர போன் எண்ணுக்குப் புகார் போகும். அடுத்த நிமிடமே, அந்த ஆசாமிகளை ரயில்வே போலீஸார் சுற்றிவளைத்துப் பிடிப்பார்கள். ரயிலில் பயணிக்கும் பயணிகள் நிம்மதியுடன் பயணித்து வருவதற்கு சைலேந்திரபாவுவின் பலவித நடவடிக்கைகள் முக்கியக் காரணம் என்கிறார்கள் துறை சார்ந்த அதிகாரிகள்.

 சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

நீச்சலில் கரைகண்டவர் சைலேந்திரபாபு. 1997-ல் சிவகங்கை ஏரியாவில் மழை, வெள்ளம் கரைபுரண்டு ஒடிக்கொண்டிருந்த நேரம் அது. பயணிகள் பஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக நீர் நிறைந்த கண்மாய் அருகே போகும்போது ரோடு உடைந்து மூழ்கியது. அந்த வழியாக அப்போது காரில் வேறு பணி தொடர்பாக பயணித்துக்கொண்டிருந்தார் சைலேந்திரபாபு. பஸ் மூழ்குவதை கவனித்து, உடனே கண்மாய் உள்ளே பாய்ந்து, பஸ்ஸின் ஜன்னல்களை உடைத்து 16 பேரை உயிருடன் காப்பாற்றினார். அந்த பஸ்ஸிலிருந்த சிலர் இறந்தும்போனார்கள். ஷைலேந்திரபாபுவின் வீரச் செயலை பாராட்டி பாரத பிரதமர் பதக்கம் அளித்தார். இதேபோல், 2015-ல் சென்னை மாநகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியது அல்லவா? அப்போது சென்னை புறநகர்ப் பகுதிகளில் மிதவை படகில் பயணித்து, தத்தளித்தவர்களை மீட்டு, பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துவந்தார்கள் சைலேந்திரபாபுவும் அவரது கடலோர பாதுகாப்பு படை பிரிவினரும்!

கடலோர பாதுகாப்பு போலீஸ் பிரிவின் உயரதிகாரியாக ஆறு வருடங்கள் இருந்தார். தமிழக கடற்கரையின் நீளம் 1,071 கி.மீ. 13 கடலோர மாவட்டங்கள். இவ்வளவு தூரத்தையும் போலீஸாரால் கண்காணிக்க முடியாது. ஆனால், மத்திய உளவுத்துறையினர் கடல்வழி தீவிரவாதத் தாக்குதல்கள், தீவிரவாதிகள் ஊடுருவல் இருக்கும் எனறு எச்சரித்துவருகின்றனர். இது பற்றி யோசித்த சைலேந்திரபாபு, தனக்குக் கீழ் பணியாற்றும் கடலோர காவல் படை போலீஸாருடன் இணைந்து ரோந்து மற்றும் கண்காணிப்புப் பணியில் மீனவ இளைஞர்களைச் சேர்த்து, குழுக்களை அமைத்தார். 5,000 பேர்கொண்ட இளைஞர்களைத் தேர்தெடுத்து ஸ்பெஷல் பயிற்சி கொடுத்தார். அவர்கள்தான் கடலோர கேட்-கீப்பர்கள். தமிழக கடலோரங்களில் 30 கடலோர காவல் நிலையங்களைத் திறந்தார். சைலேந்திரபாபு எடுத்த நடவடிக்கைகள் இன்றும் பலன் தருகின்றன என்கிறார்கள் தமிழக கடலோர மக்கள்.

வெள்ள மீட்புப்பணியில் சைலேந்திரபாபு!
வெள்ள மீட்புப்பணியில் சைலேந்திரபாபு!

ஜனவரி 26, 2007-ல் பசுமை விகடன் உதயமானது. அனைத்து மாவட்ட கலெக்டர்களின் அலுவலகங்களில் மரம் நடுதல் நிகழ்வுடன் பத்திரிக்கை தொடங்கப்பட்டது. கோவையில் நடந்த விழாவில் கலந்துகொண்டுவிட்டு, விகடன் டீம் சேரன் எக்ஸ்பிரஸ்ஸில் ரிட்டர்ன் வந்துகொண்டிருந்தோம். இரவு வேளை... சேலம் - சென்னை இடையே ரயில் வரும்போது, நள்ளிரவு நேரத்தில் திடீர் சத்தம். ரயில் விபத்துக்கு உள்ளாகிவிட்டதை உணர்ந்தோம். கும்மிருட்டு. பயணிகளின் கதறல்கள். நமது பெட்டியைவிட்டு இறங்கி ரயிலின் முன்பகுதி நோக்கி ஒடினோம். அப்போது, இரண்டாம் வகுப்பு பெட்டி ஒன்றின் கண்ணாடியை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த பெண் பயணிகளை வெளியே தூக்கிவிட்டுக்கொண்டிருந்தார் ஒரு பிரமுகர். யாரென்று அருகில் போய்ப் பார்த்தபோது, அவர் சைலேந்திரபாபு.

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிப்பதில் தீவிரமாகச் செயல்பட்டவர் சைலேந்திரபாபு. 1990-களில் ஈரோடு மாவட்டக் காடுகளை ஒட்டிய 12 கிராமங்களில் தேர்தல் நடக்க தடைவிதித்தது வீரப்பன் தரப்பு. அப்போது கோபிசெட்டிபாளைய ஏ.எஸ்.பி-யாக பணியில் இருந்தார் சைலேந்திரபாபு. பலமுறை வீரப்பன் கோஷ்டிக்கும் போலீஸாருக்கும் நேரடியான மோதல் சம்பவங்கள் நடந்தன. ஈரோடு மாவட்டம், கடம்பூர் காவல் நிலைய லிமிட்டில் நேரடியாகத் துப்பாக்கி சண்டை நடந்தது. வீரப்பன் கோஷ்டியைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டனர். போலீஸ் தரப்பில் மூவருக்குக் கடுமையான குண்டுக் காயங்கள். சில கிராமங்களில் பஸ் போக்குவரத்தைத் தடை செய்யும் நோக்கில், ரோட்டில் மரங்களை வெட்டிப்போட்டு தடை ஏற்படுத்தியிருந்தது வீரப்பன் தரப்பு. அங்கெல்லாம், அரசு பஸ்ஸை சைலேந்திரபாவுவே ஒட்டிச் சென்றார். தடைகளைத் தகர்த்து, பஸ்களை இயக்கியதைப் பார்த்த வீரப்பன் கோஷ்டியினர் அதிர்ந்தனர்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

வீரப்பனுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர்கள் ஐந்து பேர். கர்நாடகாவைச் சேர்ந்த அதிகாரிகளில் எஸ்.பி-யான ஹரிகிருஷ்ணா, டி.எஃப்.ஓ சீனிவாசஸ், எஸ்.ஐ.ஷகீல், எஸ்.ஐ தினேஷ் மற்றும் சைலேந்திரபாபு. இதில் சைலேந்திரபாபு தவிர மற்ற நான்கு அதிகாரிகளும் வீரப்பனால் இரண்டே ஆண்டுகளில் கொல்லப்பட்டனர். ஆனால் சைலேந்திரபாபுவை வீரப்பன் தரப்பினரால் நெருங்க முடியவில்லை. வீரப்பனின் மனைவியின் கிராமமான நெருப்பூரிலுள்ள பஞ்சாயத்து அலுவலகக் கட்டடத்தில் இரவு பகலாக தங்கியிருந்து, வீரப்பனை பிடிக்க ஸ்கெட்ச் போட்டார். பிறகு, 2000-ம் வருடம் மீண்டும் வீரப்பனைப் பிடிக்க அனுப்பப்பட்டார் சைலேந்திரபாபு. செவ்வந்திமலைப் பகுதியில் வீரப்பன் தங்கியிருக்கும் தகவல் கிடைத்து, அங்கே படையினருடன் சென்றார் சைலேந்திரபாபு. சமையல் செய்து சாப்பிட்டுக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸார் சுற்றிவளைக்க... இரவு நேரத்தைப் பயன்படுத்தி வீரப்பனும், அவரது கோஷ்டியினரும் தப்பிச் சென்றுவிட்டனர்.

1992-ல் திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் கிராமத்தருகே நக்சலைட் நடமாட்டம் இருப்பதாகக் கேள்விப்பட்டு, சைலேந்திரபாபு தனது படையினருடன் அங்கே சென்றார். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்சலைட் நாகராஜன் எனபவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.

2010-ல் கோவை சிட்டி கமிஷனராக சைலேந்திரபாபு இருந்தார். அப்போது உலகைக் குலுக்கும் ஒரு கொடூர சம்பவம் நடந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, அவளுடைய தம்பி... இருவரையும் பள்ளிக்கு அழைத்துச் செல்பவன் டிரைவர் மோகன்ராஜ். காமக் கொடூரனான அவன் ஒருநாள், அந்தச் சிறுமியை பள்ளிக்கு அழைத்துச் செல்லாமல், வேறு இடத்துக்கு அழைத்துப்போய் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தான்.

சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு

உடன் இருந்த சிறுமியின் தம்பியையும் கொன்றுவிட்டான். இந்த விவகாரம் பற்றி போலீஸுக்கு தகவல் போனதும், மோகன்ராஜையும் அவனுக்கு உடந்தையாக இருந்தவனையும் பிடித்தனர். பிறகு நடந்த என்கவுன்ட்டரில் மோகன்ராஜ் கொல்லப்பட்டான். அவனது கூட்டாளிக்கு தூக்குத்தண்டனையை வாங்கிக்கொடுத்தது காவல்துறை. ஜனாதிபதிக்குக் கருணை மனு போட்டுவிட்டு, தற்போது சிறையில் இருக்கிறார் அந்தக் கூட்டாளி.

இளைஞர்களை ஊக்குவிப்பதற்கு என்றுமே தயங்கியது கிடையாது, தமிழ்நாட்டின் 30-வது சட்டம், ஒழுங்கு டிஜிபி-யாக பதவியேற்கவிருக்கும் சைலேந்திரபாபு!