Published:Updated:

`சாப்பாட்டுக்கே வழியில்ல... முதல்வர் உதவணும்! - கலங்கும் பாரா ஜூடோ வீராங்கனை

பாரா ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி பெற்றோருடன்

ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு மகள்கள் என அனைவருமே விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள் என்றால், அவர்களின் அன்றாடம் எப்படி இருக்கும்? நினைக்கும்போதே நம் மனம் கனக்கிறது.

`சாப்பாட்டுக்கே வழியில்ல... முதல்வர் உதவணும்! - கலங்கும் பாரா ஜூடோ வீராங்கனை

ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு மகள்கள் என அனைவருமே விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள் என்றால், அவர்களின் அன்றாடம் எப்படி இருக்கும்? நினைக்கும்போதே நம் மனம் கனக்கிறது.

Published:Updated:
பாரா ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி பெற்றோருடன்

ஒரு குடும்பத்தில் அப்பா, அம்மா, இரண்டு மகள்கள் என அனைவருமே விழிச்சவால் மாற்றுத்திறனாளிகள் என்றால், அவர்களின் அன்றாடம் எப்படி இருக்கும்? நினைக்கும்போதே நம் மனம் கனக்கிறது. அந்த மூத்த மகள்தான் மகேஸ்வரி.

சர்வதேச அளவில் இந்தியாவுக்குப் பல்வேறு பதக்கங்களைப் பெற்றுத் தந்த பாரா ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி, வாழ்வாதாரம் இழந்து நிர்க்கதியான நிலையில், தான் உணவுக்கே வழியில்லாமல் வறுமையுடன் போராடிக் கொண்டிருப்பதாகவும், சீனியர் வீராங்கனையான தனக்கு அரசாங்க வேலை வழங்கி உதவுமாறும் சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்குக் கோரிக்கை மனு அனுப்பியிருந்தார். மனுவுக்கான பதிலை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த மகேஸ்வரி குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்தோம்.

மகேஸ்வரி
மகேஸ்வரி

பொன்னேரியை அடுத்த வெள்ளிவாயல்சாவடி கிராமத்தில் அசோக் லேலேண்ட் தொழிற்சாலைக்குப் பின்புறம் அமைந்திருந்தது மகேஸ்வரியின் ஓலை வீடு. கொளுத்தும் வெயிலில் ஓலைக் குடிசையில் ஒடுங்கிப் படுத்துக்கிடந்த மகேஸ்வரியின் குடும்பத்தினர், தட்டுத் தடுமாறியபடி வெளியே வந்தனர். மகேஸ்வரியின் விழிச்சவால் மாற்றுத்திறனாளி தந்தையும் தாயும் நம்மை வரவேற்றனர்.

மகேஸ்வரியின் தந்தை மெள்ளப் பேசத் தொடங்கினார். ``என் பேரு முருகன். என் மனைவி பேரு சாமந்தி. எனக்கு ரெண்டு பொம்பளப் பிள்ளைங்க. மூத்தவ மகேஸ்வரி, இளையவ ராஜேஸ்வரி. நானும் என் மனைவியும் பிறவியிலேயே பார்வையற்றவங்க. எங்க பெரிய பொண்ணு மகேஸ்வரிக்கு, பார்வை மங்கலா வெறும் உருவம் மட்டும் கொஞ்சமா தெரியும். சின்னப் பொண்ணுக்கு வெறும் நிழல் மட்டும்தான் தெரியும். அதுவும் பகல்ல மட்டும்தான். ராத்திரி ஆயிடுச்சுனா அவங்களுக்கும் சுத்தமா கண்ணு தெரியாது. நாங்க ரெண்டு பேருமே பார்வைத்திறனற்றவங்க என்பதால எங்க பொண்ணுங்களுக்கும் பார்வைத்திறன் குன்றிடுச்சு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒரு குடும்பத்துல நாலு பேருக்குமே கண்ணு தெரியாதுன்னா எவ்வளவு கொடுமையான விஷயம்னு கொஞ்சம் யோசித்துப் பாருங்க. ஆனா, இந்த நிலைமையிலும் நாங்க எங்க பொண்ணுங்கள நல்லா படிக்க வெக்கணும்னு முடிவு பண்ணினோம்.

இப்போ எனக்கு 55 வயசாகுது. நான் 20 வயசுல டிரெயின்ல கடலைமிட்டாய் விற்க தோளுல பையை மாட்டிக்கிட்டு, கையில ஸ்டிக் எடுத்துக்கிட்டு கிளம்பினேன். இப்ப வரைக்கும் அந்த ரயில் வியாபாரம்தான் எங்க குடும்பத்தைக் காப்பாத்திட்டு இருக்கு. ரெண்டு புள்ளைங்களையும் ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்க வெச்சோம்'' என்றவர், இத்துணை துயரமான சூழலிலும் தன் பெண்களைப் படிக்கவைப்பதில் உறுதியாக இருந்திருக்கிறார்.

``சின்ன வயசுல ரெண்டு பிள்ளைங்களையும், கண்ணு தெரியாத நான் கூட்டிட்டுப் போய் பள்ளிக்கூடத்துல விட்டுட்டு கூட்டிட்டு வருவேன். வெறும் ஸ்கூல் படிப்போட நிறுத்திடக் கூடாதுனு காலேஜ்ல சேர்த்து ரெண்டு பொண்ணுங்களையும் டிகிரி படிக்க வெச்சோம். இப்ப பெரிய பொண்ணு ரெண்டு டிகிரி முடிச்சிட்டா, சின்னவ ஒரு டிகிரி முடிச்சிருக்கா. எங்களோட வறுமை எங்க பிள்ளைங்கள பாதிச்சிடக் கூடாதுன்னு அவங்க படிப்பு விசயத்துல ரொம்ப கவனமா இருந்தோம்'' என்றவர் தன் அன்றாடம் பற்றிக் கூறுகையில்,

``காலையில இங்கிருந்து ஆட்டோ பிடிச்சு மீஞ்சூர் போயிடுவேன். அங்கிருந்து ரயில்ல ஏறிடுவேன். கடலை மிட்டாய், இஞ்சி மிட்டாய், ரேஷன் கார்டு கவர்னு சில பொருள்கள வியாபாரம் செய்வேன். ஒரு நாள் முழுக்க வியாபாரம் செஞ்சா செலவு போக கைக்கு 200 ரூபாய் கிடைக்கும். அத வெச்சுத்தான் குடும்பத்த நடத்திட்டு வந்தோம்.

ஆனா, அந்த சொற்ப வருமானமும் கடந்த ஒரு வருசமா இல்லாமப் போயிடுச்சு. லாக்டௌன் போட்டதுல இருந்து ரயில் வியாபாரத்துக்குப் போக முடியல. சாப்பாட்டுக்கே வழியில்ல. ரேஷன் கடையில கொடுக்குற அரிசி, சர்க்கரை, பருப்புதான் எங்க உசுர கையில பிடிச்சு வெச்சுருக்கு. எங்களோட ஏழ்மை நிலையைப் பார்த்து ஒரு சிலர் மளிகைப் பொருள் கொடுத்து உதவிட்டு வர்றாங்க'' என்று வருத்தத்துடன் சொல்பவர், தன் பெண்களின் சாதனைகளைப் பட்டியலிடும்போது முகம் மலர்கிறார்.

``எங்க பெரிய பொண்ணு மகேஸ்வரி ஒரு ஜூடோ வீராங்கனை. தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்லாம சர்வதேச அளவுலயும் நெறைய சாதனை படைச்சிருக்கா. எங்களோட இருட்டடைஞ்ச வாழ்க்கையில தீப்பந்தமா என் மவ மகேஸ்வரி ஜொலிச்சா. அவளோட திறமையப் பார்த்துட்டு 2018-ல திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரா இருந்த சுந்தரவல்லி மேடம் பரிசுத்தொகை கொடுத்து ஊக்கப்படுத்துனாங்க. அதோட மட்டுமல்லாம, எங்களுக்குப் பசுமை வீடு திட்டத்துல வீடு ஒதுக்கி அரசாணை கொடுத்தாங்க'' என்பவரின் குடும்பத்துக்கு, கஷ்டம் அப்படியும் முடியாமல் இன்னும் நீண்டிருக்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

``ஆனா, வீட்டுக்கு பேஸ்மென்ட் போட்டாதான் மானியம் கொடுப்போம்னு அதிகாரிங்க சொல்லிட்டாங்க. எங்ககிட்ட பேஸ்மென்ட் போடுற அளவுக்குப் பணமில்ல. இருந்த பழைய, சின்ன வீடும் போன வருஷம் இடிஞ்சு விழுற நிலைமைக்கு வந்திருச்சு. அதனால, நாலு நாளா வெளியிலேயேதான் இருந்தோம். அப்புறம், ஒரு தொண்டு நிறுவனம் மூலமா பக்கத்துலயே ஓலைக் குடிசை போட்டு கொடுத்தாங்க. இப்ப அதுலதான் தங்கிட்டு இருக்கோம்.

தினமும், ஓலைக் குடிசையில் ராத்திரியான ரொம்ப பயமா இருக்கும். நாலு பேருக்குமே கண்ணு தெரியாததால பாம்பு, பூச்சினு எது வந்தாலும் எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. இப்படியேதான் வாழ்க்கைய ஓட்டிட்டு இருக்கோம். சரி, பேங்க்ல கடன் வாங்கி வீட்ட கட்டலாம்னு பாத்தா, இந்தக் கண்ணு தெரியாதவனுக்கு லோன் கொடுக்க முடியாதுனு விரட்டி அடிச்சிட்டாங்க. இந்த கொரோனால வருமானம் இல்லாம, மூணு வேளையும் ஒழுங்கா சாப்பிடக்கூட முடியல. ரெண்டு வேளைதான், அதுவும் அரை வயித்துக்குச் சாப்பிட்டுட்டு இருக்குறோம்.

என் பெரிய பொண்ணு மகேஸ்வரி ரெண்டு டிகிரி முடிச்சிருக்கா, பாரா ஜூடோ விளையாட்டுல பல சாதனைகள் படச்சிருக்கா. அவளுக்கு ஒரு அரசாங்க வேலை கெடச்சா எங்க குடும்பத்தோட நிலைமை கொஞ்சம் மாறிடும். அந்த வேலைக்கான தகுதி அவளுக்கு இருக்கு, அந்த நம்பிக்கையிலதான் இப்போ முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியிருக்கோம்" என்றார்.

பாரா ஜூடோ வீராங்கனை மகேஸ்வரியிடம் பேசினோம். ``2016-ல குயின் மேரிஸ் காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போதுதான் ஜூடோ விளையாட்ட பத்தி எனக்குத் தெரிய வந்தது. அங்க Tamilnadu Blind Judo Associsation மூலம் பயிற்சி எடுத்தேன். அந்த விளையாட்டு ரொம்பப் பிடிச்சிருந்ததால ரொம்ப ஈடுபாட்டோட தீவிரமா கத்துக்க ஆரம்பிச்சேன். 2016-ல ஜூடோ கத்துக்க ஆரம்பிச்ச நான் 2017-ல ஹரியானாவுக்கு 10 நாள் பயிற்சி முகாமுக்குப் போயிருந்தேன். அங்க ஜப்பானுடைய தேசிய விளையாட்டான ஜூடோ குறித்து முழுமையா அனுபவபூர்வமா தெரிஞ்சிக் கிட்டேன்.

எதிரியை நிலத்தில் வீழ்த்துவது, மல்லர் பிடி பிடித்து எதிரியைப் பணிய வைப்பது, நகர முடியாமல் இருக்கப் பிடிப்பது, திணற வைத்துப் பணிய வைப்பதுனு பல்வேறு நுணுக்கங்களை அந்தப் பயிற்சி முகாமில் கத்துக்கிட்டேன். ஜூடோ எனக்குப் புது தெம்பை கொடுத்துச்சு. அந்த விளையாட்டைப் போலவே என்னோட சொந்த வாழ்க்கையிலும் போராட ஆரம்பிச்சேன்; அதுல வெற்றியும் கண்டேன். அதே வருஷம் திரும்பவும் ஹரியானவுல மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விளையாட்டு போட்டி நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்டு வெள்ளிப்பதக்கம் வாங்குனேன். அதுல விட்ட தங்கப் பதக்கத்தை அடுத்த வருஷம் நடந்த போட்டியில கலந்துக்கிட்டு அடிச்சேன். அதுல இருந்து இந்திய அளவுல பாரா ஜூடோ விளையாட்டுல பேர் சொல்லி அழைக்குற வீராங்கனைகள்ல நானும் ஒருத்தியா உயர்ந்தேன்.

அதுக்கப்புறம் 2018-ல இந்தோனேசியாவில் நடந்த ஆசியன் பாரா கேம்ஸ்ல தங்கப் பதக்கம் வென்றேன். அப்போ, எங்களை அத்தனை வருஷமா மதிக்காத ஊர்க்காரங்க எல்லாரும் என்ன தூக்கி வெச்சு கொண்டாடுனாங்க. இருட்டுல இருந்த நான், ஜூடோ ஏத்தி வெச்ச ஒளியோட பிரகாசத்தை அப்பதான் உணர்ந்தேன். அதற்குப் பிறகு துருக்கி, லக்னோனு பல இடங்கள்ல போட்டிகள்ல கலந்துகொண்டு மெடல்கள் அடிச்சேன்.

ஆனா, தமிழகத்துக்க இந்த ஜூடோ விளையாட்டுக்கு உரிய மரியாதை இல்லை. பிற மாநிலங்கள்ல தேசியளவுல நடக்கற போட்டிகள்ல கலந்துகொண்டாலே அரசாங்க வேலை, பரிசுத்தொகைனு கொடுத்து ரொம்ப ஊக்கப்படுத்துவங்க. ஆனா, தமிழ்நாட்டுல வெறும் சான்றிதழ் மட்டும்தான். எங்க அப்பாதான் ஒவ்வொரு முறையும் நான் வெளியூருக்குப் போட்டிக்குப் போகும் போது கடன் வாங்கி அனுப்பி வெப்பாரு.

ஒரு முறை 2018-ல, அப்போ திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரா இருந்த சுந்தரவல்லி மேடம் என்னோட திறமையைப் பாராட்டி 1,09,000 ரூபாய் பரிசுத்தொகையும், அரசாங்கத்தோட பசுமை வீடு திட்டத்துல ஒரு வீடும் ஒதுக்கி உதவுனாங்க. அது என்னோட வாழ்க்கையிலேயே மறக்க முடியாத உதவி. ஆனா, எங்களுக்கு வீடு ஒதுக்கி அரசாணை வாங்குன கொஞ்ச நாள்லேயே அவங்க வேற மாவட்டத்துக்கு மாறிட்டாங்க. எங்க நிலத்துல நாங்களே வீட்டுக்கு செலவு பண்ணி பீம் போட்டு அத போட்டோ எடுத்து அனுப்புனாதான் மானியம் கொடுப்போம்னு சொல்லிட்டாங்க. ஆனா, அதுக்கே லட்சம் ரூபாய் செலவாகும். அதனால, எங்களால இப்ப வரைக்கும் கட்ட முடியல. நாங்களும், ஒவ்வொரு திங்கள்கிழமையும் கலெக்டர் அலுவலகத்துல மனு கொடுத்துட்டேதான் இருக்கோம்... ஆனா, பலன்தான் கிடைக்கல.

பல பதக்கங்கள் வாங்கி மாநிலத்துக்கு பெருமை சேர்த்திருக்கேன். 2 டிகிரி முடிச்சிருக்கேன். இந்த தகுதிக்காவது எனக்கு ஒரு அரசாங்க வேலை கெடச்சா, எங்க குடும்பத்தோட நிலைமை மாறும். அப்பாக்கும் வயசாகிடுச்சு. எனக்கு வேலை கெடச்சா அவர வீட்டுலயே இருக்க சொல்லிடுவேன்.

முதல்வர் ஸ்டாலின் எல்லாருக்கும் நல்லது செய்யுறதா கேள்விப்பட்டேன். எங்க நிலமையை விளக்கி அவருகிட்ட உதவி கேட்டிருக்கேன். நிச்சயம் உதவி செய்வாருன்னு நம்புறேன்" என்று திட மனதுடன் முதல்வரின் பதிலுக்குக் காத்துக் கொண்டிருக்கிறார் பாரா ஜூடோ வீராங்கனை மகேஸ்வரி.

இருளிலேயே வாழ்க்கையைக் கழித்து வரும் இந்தப் பார்வை சவால் கொண்ட தன்னம்பிக்கை மனிதர்களின் வாழ்க்கை நிச்சயம் ஒரு நாள் மாறும் என்ற நம்பிக்கையில் அவர்களிடம் ஆதரவாகச் சில வார்த்தைகள் பேசிவிட்டு கனத்த இதயத்துடன் திரும்பினோம்.

Note:

மகேஸ்வரி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு உதவ முன்வரும் வாசகர்கள், `help@vikatan.com’ என்ற மெயில் ஐ.டி-யைத் தொடர்புகொண்டு தாங்கள் செய்ய விரும்பும் உதவிகள் குறித்துத் தெரிவிக்கலாம். மகேஸ்வரி குறித்த விவரங்கள் உடனடியாகத் தரப்படும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism