Published:Updated:

தொடர் கனமழை: ``வெளியூர் மக்கள் சென்னை வருவதை 3 நாள்கள் தவிருங்கள்!” - ஆய்வுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!
முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

தொடர் மழை பாதிப்பு, 07-11-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!

07 Nov 2021 2 PM

தொடர் கனமழை: ``வெளியூர் மக்கள் சென்னை வருவதை 3 நாள்கள் தவிருங்கள்!” - ஆய்வுக்குப் பின் முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை!

சென்னையில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சென்னையின் சாலைகளில் வெள்ளநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. இந்த சூழலில் இன்று காலை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெள்ளம் தேங்கி நிற்கும் இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து சென்னையில் இயங்கி வரும் கட்டுப்பாட்டு அறையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

அப்போது அவர் வெளியூர் மக்கள் சென்னை வருவதை இரண்டிலிருந்து மூன்று நாட்கள் தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தீபாவளி பண்டிகை முடிந்து மக்கள் இன்று சென்னை திரும்பி வரும் நிலையில், கனமழை காரணமாக இந்த கோரிக்கையை முதல்வர் விடுத்திருக்கிறார். மேலும் கனமழை காரணமாக சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு இரண்டு நாட்கள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.

07 Nov 2021 1 PM

சென்னை செம்பரம்பாக்கம் வினாடிக்கு 500 கன அடி உபரிநீர் திறப்பு!

07 Nov 2021 11 AM

மழை வெள்ள பாதிப்பு பகுதிகளில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

சென்னையில் மழையால் ஏற்பட்டிருக்கும் சேதங்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். எழும்பூர் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அவர், தற்போது புரசைவாக்கத்தில் மழை நீர் தேங்கியிருக்கும் பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்து வருகிறார்.

முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!
முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

முதல்வருடன் தலைமை செயலாளர் இறையன்பு, சென்னை பெருநகர ஆணையர் ககன் தீப் சிங் பேடி, காவல்துறை இயக்குநர் சைலேந்திரபாபு, அமைச்சர்கள் சேகர்பாபு, கே.என்.நேரு ஆகியோர் இருக்கின்றனர். ஆய்வின் போது மக்களிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த முதல்வர், விரைவில் நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார். புரசைவாக்கத்தைத் தொடர்ந்து, தி.வி.க.நகர், கொளத்தூர், பாடி உள்ளிட்ட பகுதிகளிலும் முதல்வர் ஆய்வு மேற்கொள்ளவிருப்பதாகக் கூறப்படுகிறது.

07 Nov 2021 11 AM

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரயில் சேவை ரத்து!

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தண்டவாளத்தில் அதிக அளவு மழைநீர் தேங்கியிருப்பதால், தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருக்கிறது.

07 Nov 2021 10 AM

கனமழை எதிரொலி; திருவள்ளூர் உட்பட 3 மாவட்டங்களுக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு படை!

மழை பாதிப்பு ஏற்பட்டிருக்கும் திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்திருக்கின்றனர்.

தேசிய பேரிடர் மீட்புக் குழு
தேசிய பேரிடர் மீட்புக் குழு
கோப்பு படம்

திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, அரக்கோணம் பேரிடர் மீட்பு மையத்தில் இருந்து 4 குழுக்கள் அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறது. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு 2 குழுக்களும், மதுரை மாவட்டத்துக்கு 2 குழுக்களும் விரைந்திருக்கின்றன.

07 Nov 2021 10 AM

சென்னை வியாசர்பாடியை சூழ்ந்த மழைநீர்! 

07 Nov 2021 10 AM

நுங்கம்பாக்கம் பகுதியில் 2015-க்கு பிறகு பதிவான மிகக் கனமழை!

சென்னையில் 2015-க்கு பிறகு தற்போது மிக அதிக மழை பதிவாகியிருக்கிறது. நேற்றிரவு முதல் சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், 3 மணி நேரத்துக்கு சென்னையில் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் பகுதி வாரியாக பதிவான மழை நிலவரத்தைப் பார்க்கலாம்:-

சென்னை மழை
சென்னை மழை

அதிகபட்சமாக நுங்கம்பாக்கம் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமாக மழைப் பதிவாகியிருக்கிறது. அதே போல, வில்லிவாக்கம் பகுதியில் 19 சென்டிமீட்டரும், மீனம்பாக்கத்தில் 9 சென்டிமீட்டரும், எம்.ஆர்.சி நகரில் 15 சென்டிமீட்டரும், நந்தனத்தில் 15 சென்டிமீட்டரும், தரமணியில் 11 சென்டிமீட்டரும், தாம்பரத்தில் 5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியிருக்கிறது.

07 Nov 2021 9 AM

`மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்க உதவி எண்கள் அறிவித்தது சென்னை மாநகராட்சி!'

சென்னையில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. அதன் காரணமாக, சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 4 நாள்களுக்குக் கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கும் நிலையில், சென்னையில் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து புகார் தெரிவிக்கச் சென்னை மாநகராட்சி உதவி எண்கள் அறிவித்திருக்கிறது.

சென்னை மழை
சென்னை மழை
கோப்பு படம்

சென்னை மாநகர எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் 044- 25619206, 044- 25619207, 044- 25619208 ஆகிய எண்களிலும், 1913 என்ற எண்ணிலும் தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம் எனச் சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

07 Nov 2021 9 AM

செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்படும்!

செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். ஏரி நீர் திறக்கப்படுவதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதே போல, திருவள்ளுர் மாவட்டம் புழல் ஏரியில் இருந்து இன்று காலை 11 மணிக்கு 500 கன அடி உபரி நீர் திறக்கப்படும். புழல் ஏரிக்கு வரும் நீர், தொடர்ந்து அதிகரித்து வருவதால், உபரி நீர் திறப்பு படிப்படியாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

07 Nov 2021 9 AM

தரைப்பாலத்தில் உடைப்பு... பயிர் மூழ்கும் அபாயம்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மகேந்திரபள்ளி ஊராட்சியில் உள்ளது கோரைத்திட்டு கிராமம். இப்பகுதி வழியாக சின்னாறு பாசன மற்றும் வடிகால் வாய்க்கால் செல்கிறது. இந்த ஆற்றின் வலது கரையில் தண்ணீர் பாசனத்திற்கு செல்லும் வகையிலும், மழைக்காலங்களில் அதிகப்படியாக வரும் நீரை  வெளியேற்றும் வகையிலும் தரைப்பாலம் அமைந்திருந்தது.

.இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழையால் சின்னாறு வாய்க்காலில் நீர்வரத்து பெருக்கெடுத்தது. கோரைதிட்டு என்ற இடத்தில் தரைப்பாலத்தில் உடைப்பு ஏற்பட்டு மகேந்திரப்பள்ளி, நாணல்படுகை, அளக்குடி மற்றும் பழைய பாளையம் ஆகிய கிராமங்களிலுள்ள வயல்களில் நீர் புகுந்துள்ளது. இதனால் சுமார் 500 -க்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு செய்துள்ள பயிர் மூழ்கும் நிலையில் உள்ளது.

- மு.ராகவன்

07 Nov 2021 7 AM

சென்னையில் விடிய விடிய கனமழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

விடியவிடிய பெய்த மழை காரணமாக சாலைகள், குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையில் இரவு முழுவதும் பெய்த தொடர் மழை காரணமாக அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 16 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மீனம்பாக்கத்தில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

தொடர் மழை காரணமாகச் சாலையில் தேங்கியிருக்கும் நீர்

இடம்: அரும்பாக்கம்; சென்னை

சென்னையில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் பல இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.

தொடர் மழை காரணமாகச் சாலையில் தேங்கியிருக்கும் நீர்

இடம்: கிண்டி; சென்னை

இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரி நீர் திறப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள். புழல் ஏரியிலிருந்து காலை 11 மணிக்கு உபரிநீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு