Election bannerElection banner
Published:Updated:

``இரவுநேர ஊரடங்கு கொரோனாவை முடக்காது; எங்களைத்தான் முடக்கும்!" - வேதனையில் வணிகர்கள்

காய்கறிச் சந்தை
காய்கறிச் சந்தை

``இரவுநேர ஊரடங்கு எந்த விதத்திலும் கொரோனாவை முடக்காது, வியாபாரத்தைத்தான் முடக்கும். " - ஏ.எம்.விக்கிரமராஜா

தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், காய்கறிச் சந்தைகளுக்கு இரவு நேரங்களில் வருகின்ற சரக்கு வாகனங்களுக்குத் தளர்வு அளிக்க வேண்டுமென்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களுடைய பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா உட்பட பல்வேறு நிர்வாகிகள் அத்தியாவசியப் பொருள்கள் விரியோகக் குழு தலைவர் ககன்தீப்சிங் பேடியைக் கடந்த 20-ம் தேதியன்று நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இரவு நேர ஊரடங்கு
இரவு நேர ஊரடங்கு

அந்த மனுவில், ``கொரோனா இரண்டாம் அலை காரணமாக அரசாங்கம் பல்வேறு கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மீதும் வணிக செயல்பாடுகளின் மீது விதித்துள்ளது. பொது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அத்தியாவசிய சந்தைகள், குறிப்பாக கோயம்பேடு காய்கறி, பழம் மற்றும் மலர் வணிகச் சந்தை எப்போதும்போல் எவ்வித குறுக்கீடுகளும் இல்லாமல், இரவு நேரங்களில் காய்கறி, பழங்கள் போன்ற சரக்குகளின் போக்குவரத்தை மேற்கொள்ள அனுமதிக்குமாறு வணிகர் சங்க பேரமைப்பு கோருகிறது.

அழுகக்கூடிய பொருள்களான காய்கறி மற்றும் பழங்களைச் சந்தைக்குக் கொண்டுவரும் வாகனங்களுக்கு உரிய அனுமதி அளித்து, தடை எதுவுமில்லாமல் காய்கறி வரத்தை உறுதிப்படுத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜாவிடம் பேசியபோது, ``சாதாரணமாக, சந்தைகளில் காய்கறி மற்றும் பழக்கடைகளுக்கு விடியற்காலை 1 மணியளவில் சரக்குகள் கொண்டுவரப்பட்டால்தான் ரீடெய்ல் வியாபாரிகளுக்கு 2 மணியளவில் கிடைக்கும். அப்போதுதான் அந்தப் பொருள்கள் மக்களிடையே 8 மணிக்குள் சென்றுசேரும். காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் அதிகாலை 2 மணியிலிருந்து சரக்குகளை வாங்குகிறார்கள். இவர்கள் இந்தச் சரக்குகளை வாங்கிக்கொண்டு போய் அந்தந்தப் பகுதிகளில் சேர்க்கவே 7 மணி வரை ஆகிவிடும். அப்படிக் கொண்டு போனால்தான், மக்களுக்குத் தேவையான நேரத்தில் அந்தப் பொருள்கள் கிடைக்கும்.

கோயம்பேடு சந்தையில் நிற்கும் சரக்கு வாகனங்கள்
கோயம்பேடு சந்தையில் நிற்கும் சரக்கு வாகனங்கள்

ஆகையால், அத்தியாவசியப் பொருள்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் எந்தக் குழப்பமும் வந்துவிடக் கூடாது என்பதைத் தெளிவு படுத்தியுள்ளோம். இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், ஊரடங்கு காரணமாக 2 மணிக்கு வருகிறவர்களை 4 மணிக்கு வரச் சொன்னால், காய்கறிகள் 11 மணிக்குத்தான் மக்களைச் சென்றடையும். இப்போதிருக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால், அந்த நேரத்துக்குக் கொண்டு செல்லும் காய்கறிகள் வாடி வதங்கிவிடும். மொத்த வியாபாரச் சந்தையில் விற்கும் சிறு சிறு வியாபாரிகள் அனைவரும், விவசாயிகளிடம் இருந்து வாங்கி வந்துதான் விற்கிறார்கள். அப்படி விற்றுக் காசாக்கிய பிறகே விவசாயிகளுக்கும் பணம் தருகிறார்கள். ஒருவேளை அந்தக் காய்கறிகளை விற்க முடியாமல் போனால், விவசாயிகளுக்கும் பணத்தைக் கொடுக்க முடியாமல் போகும்" என்று கூறினார்.

மேலும், ஊரடங்கு காரணமாக வேறு என்னென்ன சிக்கல்களை வியாபாரிகள் சந்திக்கிறார்கள் என்று கேட்டபோது, ``இரவு நேரங்களில் பேருந்துகளை இயக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார்கள். இரவுப் பேருந்து இல்லையென்பதால், மக்கள் பகல் நேரப் பேருந்தில் கூட்டம் கூட்டமாகப் பயணிக்கிறார்கள். அப்படிப் பயணிக்கும்போது கொரோனா பரவாதா?

கோயம்பேடு பேருந்து நிலையம்
கோயம்பேடு பேருந்து நிலையம்

இது எந்த விதத்திலும் கொரோனாவை முடக்காது, வியாபாரத்தைத்தான் முடக்கும். இப்போதைய நிலையைப் பார்த்துவிட்டு, வெளிமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அவரவர் சொந்த ஊருக்குச் செல்ல புறப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கொரோனா தொற்றுநோயால், நாங்கள் கடைகளை அடைத்து வைத்திருந்தாலும் இழப்புகளைச் சந்தித்தாலும், அரசு எங்களுக்கு எவ்வித உதவியையும் இதுவரை செய்யவில்லை.

ஆனால், கொரோனா சோதனை என்ற பெயரில் கடைகளுக்குச் சீல் வைக்கிறார்கள். கடைகளுக்கு வரும் மக்களுக்கு நாங்கள் எவ்வளவுதான் சொன்னாலும் ஒரு சிலர் அதைப் பொருள்படுத்தாமல் நடந்துகொள்வதற்கு எங்களைக் குற்றம் சாட்டி கடைகளுக்குச் சீல் வைக்கின்றனர். இப்படி, கடையையே இழுத்து மூடுவதால் வருமானமின்றி ஊழியர்களுக்கு எங்கள் சொந்தப் பணத்திலிருந்து சம்பளம் வழங்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஏற்கெனவே நஷ்டத்தில் சிக்கியிருக்கும் எங்களை இது மேலும் கீழே தள்ளுகிறது. இப்படி பொருளாதாரத்தில் நலிவடைந்து கொண்டிருக்கும் சூழ்நிலையை மேலும் சிக்கலாக்குவதால் நெருக்கடி மேலும் அதிகம்தான் ஆகும்" என்றார்.

கோயம்பேடு சந்தை
கோயம்பேடு சந்தை

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெளியூர்களில் இருந்து சுமார் 1,700 வாகனங்கள் காய்கறி, பழங்கள் போன்ற சரக்குகளைத் தினமும் கொண்டு வருகின்றன. சென்னைக்கு மட்டும் சுமார் 700 சரக்கு வாகனங்கள் வருகின்றன. இதுமட்டுமன்றி, பால் பொருள்களின் விநியோகமும்கூட விடியற்காலை 3 மணியளவிலேயே தொடங்கினால்தான் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் சென்றடையும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில், கொண்டுவரப்படும் அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்குச் சென்றடையவில்லை எனில், அவர்களுடைய அன்றாட வாழ்வு சிக்கலுக்கு உள்ளாகும். அதோடு, பெருமளவிலான விவசாய உற்பத்தியும் வீணாகும். இதைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் அத்தியாவசியப் பொருள்கள் மக்களுக்கு எந்த இடையூறுமின்றிக் கிடைக்க வழிசெய்ய வேண்டும்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு