Published:Updated:

`கண்ணகி சிலை முதல் `மை ஸ்டாம்ப்' கான்செப்ட் வரை!' - பார்வையாளர்களை அசத்தும் இந்து ஆன்மிக கண்காட்சி

இந்து ஆன்மிக கண்காட்சி
இந்து ஆன்மிக கண்காட்சி

``மனிதர்களுக்கு செய்யும் சேவையே மோட்சத்துக்குச் செல்லும் வழி, ஒவ்வோர் அணுவிலும் இறையாற்றல் பொதிந்துள்ளது" என்ற கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

சமூகத்தில், பலதரப்பட்ட மக்களையும் ஒன்றிணைக்கும் நிகழ்வுகளின் அடிப்படையில் கண்காட்சிகளும் கவனிக்கத்தக்கவை. இதில், இந்து ஆன்மிக மற்றும் சேவை மையமும் பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையும் இணைந்து தமிழகத்தில் ஆண்டுதோறும் நடத்தும் ஆன்மிக கண்காட்சியும் ஒன்று எனலாம்.

சென்னையில் சிறிய அளவில் 2009-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கண்காட்சி தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது. `மனிதர்களுக்குச் செய்யும் சேவையே மோட்சத்துக்குச் செல்லும் வழி, ஒவ்வோர் அணுவிலும் இறையாற்றல் பொதிந்துள்ளது' என்ற கருத்துகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

கண்காட்சி அரங்குகளைப் பார்வையிடும் மாணவர்கள்
கண்காட்சி அரங்குகளைப் பார்வையிடும் மாணவர்கள்

`வனம் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாத்தல், சுற்றுச்சூழலைப் பராமரித்தல், ஜீவராசிகளைப் பேணுதல், பெற்றோர் பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்குதல், பெண்மையைப் போற்றுதல், நாட்டுப்பற்றை வளர்த்தல்' ஆகிய ஆறு மையக் கருத்துகளை முன்வைத்து தொடர்ந்து ஆறு நாள்கள் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.

இந்த ஆறு கருத்துகளில் ஒன்றான `பெண்மையைப் போற்றுதல்' என்ற கருத்தை முதன்மை கருத்தாக முன்வைத்து கண்காட்சி நடத்தப்படுகிறது. இதன் அடையாளமாகக் கண்ணகியின் சிலை ஒன்றும் அரங்கின் முகப்பில் வைக்கப்பட்டுள்ளது. மைய கருத்துகளின் அடிப்படையில் பல்வேறு நிகழ்வுகளும் மாணவர்களுக்கான போட்டிகளும் நூற்றுக்கணக்கான அரங்குகளும் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.

ஒரு பெண்ணால் எதுவும் செய்ய முடியும். பெண்களின் வளர்ச்சிக்கு ஆண்கள் உதவ வேண்டும். அதுதான் பாலின சமத்துவம் வருவதற்கான வழி.
மாதா அமிர்தானந்த மயி

கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசிய மாதா அமிர்தானந்த மயி ``பெண்களுக்கு இயற்கையிலேயே தாய்மை குணம் உள்ளது. அதே நேரம் வீரத்துக்கும் சொந்தக்காரர்களாக உள்ளனர். பெண்களை உடலாக இந்த உலகம் பார்க்கிறது. அது மிகவும் தவறு. ஒரு பெண்ணால் எதுவும் செய்ய முடியும். பெண்களின் வளர்ச்சிக்கு ஆண்கள் உதவ வேண்டும். அதுதான் பாலின சமத்துவம் வருவதற்கான வழி" என்றார்.

அமிர்தானந்த மயி
அமிர்தானந்த மயி

கண்காட்சி குறித்து பண்பு மற்றும் கலாசார பயிற்சி முனைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளருமான ராஜலட்சுமியிடம் பேசினோம். ``ஒவ்வோர் ஆண்டும் ஒரு குறிப்பிட்ட தலைப்பை முதன்மையாகக் கொண்டு கண்காட்சி நடத்தப்படும். இந்த ஆண்டு `பெண்மையைப் போற்றுதல்' என்ற தலைப்பில் நடைபெறுகிறது. பெண்களின் வீரத்தையும் ஆளுமையையும் இந்தச் சமூகத்துக்கு எடுத்துக்காட்டும் வகையில் கண்ணகியின் சிலை இங்கு வைக்கப்பட்டுள்ளது. வேதகாலத்தில் தொடங்கி நிகழ்காலம் வரையில் பெண்களின் பங்கை இந்தக் கண்காட்சி எடுத்துக் கூறுகிறது" என்றவர்,

``நகரங்களில் வளர்ந்துள்ள குழந்தைகளுக்கு கிராமங்களைப் பற்றித் தெரியாது. அவர்களுக்கு கிராமத்து மக்களின் உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆந்திராவின் பல்வேறு கோயில்களின் ரதங்கள் இங்கு வந்துள்ளன. இதுபோன்ற பல்வேறு சிறப்புகளைக் கண்காட்சி உள்ளடக்கியுள்ளது. ஒரு வாரம் நடக்கும் இந்தக் கண்காட்சியைப் பார்ப்பது 1,000 புத்தகங்களைப் படிப்பதற்குச் சமம். தமிழகத்திலுள்ள மக்கள் பலரும் இந்த ஆன்மிகக் கண்காட்சிக்கு வந்து பயன்பெற வேண்டும்" என்றார் உற்சாகமான குரலில்.

கண்காட்சி அரங்கு
கண்காட்சி அரங்கு

கண்காட்சியில் சில தனித்துவம் வாய்ந்த அரங்குகள், மக்களின் கவனத்தை ஈர்த்தன. சங்ககாலப் பெண் புலவர்கள் முதல் வீரத்துக்கு அடையாளமாகச் சொல்லப்படும் பெண்கள் வரை, பலரைப் பற்றிய குறிப்புகள் அரங்கில் முதன்மையாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இந்தியாவின் பல்வேறு மக்களின் கலை, கலாசாரம் மற்றும் பண்பாட்டை விளக்கும் அரங்குகள் அதிகமாக இடம் பிடித்திருந்தன.

அஞ்சல் தலை
அஞ்சல் தலை

இந்திய தபால்துறையும் அரங்கு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. இந்த அரங்கில் ராமாயணம், மகாபாரதம், யோகா ஆகியவற்றைக் குறிக்கும் அஞ்சல் தலைகள் வைக்கப்பட்டிருந்தன. இளைஞர்களைக் கவரும் வகையில் அவர்களுடைய புகைப்படம் அஞ்சல் தலைகளில் இடம்பெறும் வகையில், `மை ஸ்டாம்ப்' என்கிற கான்செப்ட்டையும் வைத்திருந்தனர். மத்திய அரசின் தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் பெண் தெய்வங்கள் சார்ந்த சிலைகளையும் புகைப்படங்களாக வைத்திருந்தனர்.

`கண்ணகிக்கு பிரமாண்ட சிலை; 6 மையக் கருத்துகள்!'- சென்னையில் 11-வது இந்து ஆன்மிக கண்காட்சி

நாட்டுப்புற இசைக்கருவிகளில் பெரும்பாலானவற்றையும் ஓர் அரங்கில் வைத்திருந்தனர். கேரளாவின் பிரசித்திபெற்ற சுவர் ஓவியக்கலையை வெளிப்படுத்தும் அரங்குகளும் இடம்பெற்றிருந்தன. இயற்கையான சாணத்திலிருந்து தயாராகும் சின்னச் சின்ன சிற்பங்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களின் கலை வேலைப்பாடுகளில் உருவான அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருள்களையும் வகைப்படுத்தியிருந்தனர். தனிமையை அதிகம் விரும்பும் நவீன உலகில் குடும்பங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அரங்குகளும் இடம் பெற்றிருந்தன.

மேலும், ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள், பொருள்கள், இசைத்தட்டுகள் ஆகியவையும் அதிகமான கடைகளில் விற்பனைக்கு வைத்துள்ளனர். பேச்சு, கட்டுரை, கில்லி, கோலி உட்பட 1500-க்கும் அதிகமான தலைப்புகளில் போட்டிகளும் நடைபெற உள்ளன. தமிழகத்தின் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பழங்குடியினர் மற்றும் மராட்டியர்கள் உட்பட பல்வேறு இன மக்களின் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள் ஆகியவை தொடர்ந்து நடைபெற உள்ளன.

நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவிகள்
நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட மாணவிகள்

ஜனவரி 29-ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சியானது பிப்ரவரி 3-ம் தேதி வரை வேளச்சேரியிலுள்ள குருநானக் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இந்தக் கண்காட்சியைப் பார்வையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் சுமார் 15 லட்சம் பேர் பார்வையிட்டனர் என்றும் இந்த ஆண்டு இன்னும் அதிகமானோர் கண்காட்சியைப் பார்வையிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு