Published:Updated:

``ரத்தக்கண்ணீர் வடிக்கிறோம்... தீர விசாரியுங்கள்’’ - போலீஸாரின் கடிதக் குமுறல்கள்

ஒருசிலர் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி ஒட்டுமொத்த காவல்துறைக்கே உத்தரவு பிறப்பிக்கும் சைலேந்திரபாபு, போலீஸார் நலனையும் திருப்பிப் பார்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் உலவுகின்றன...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

2019-ம் வருடம், செப்டம்பர் மாதத்தில் ஒரு நாள். திருச்சியிலிருந்து கடலூருக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றது. விருத்தாசலம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, திட்டக்குடி ஸ்டேஷனில் பணிபுரிந்த போலீஸ்காரர் பழனிவேல் என்பவர் மஃப்டியில் பஸ்ஸில் ஏறியிருக்கிறார். பஸ் கண்டக்டருக்கும், போலீஸ்காரருக்கும் டிக்கெட் எடுப்பதில் தகராறு வந்துவிட்டது. மூச்சைப் பிடித்துக்கொண்டு 10 கி.மீ தூரத்துக்குச் சண்டை போட்டுக்கொண்டிருந்த கண்டக்டர், திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓடும் பேருந்திலேயே மயங்கி விழுந்து இறந்துவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மனித உரிமை கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.

 மாநில மனித உரிமைகள் ஆணையம்
மாநில மனித உரிமைகள் ஆணையம்

பொதுவாக, அரசுப் பேருந்தில் அலுவல்ரீதியாகப் பயணிக்கும் போலீஸாருக்கு வாரன்ட் தரப்படும். அதை கண்டக்டரிடம் காட்டினால், டிக்கெட் எடுக்க வேண்டியதில்லை. ஆனால், சொந்த வேலையாகப் பயணிக்கும் போலீஸாரில் சிலர் இலவசமாகப் பயணிக்கிறார்கள். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்னை ஆகிறது. எனவே, வாரன்ட் இல்லாமல் அரசு பஸ்களில் இனி பயணிப்பவர்கள் டிக்கெட் எடுக்கவேண்டும் என்று மனித உரிமை கமிஷன் உத்தரவிட்டது. இதை மேற்கொள்காட்டிய தமிழக சட்டம் ஒழுங்குப் பிரிவு டி.ஜி.பி-யான சைலேந்திரபாபு, கடந்த ஜூலை 20-ம் தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்றை தமிழகத்திலுள்ள அனைத்து போலீஸாருக்கும் அனுப்பி, மனித உரிமை கமிஷன் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றும்படி கேட்டுக்கொண்டார். அந்த உத்தரவு தமிழக போலீஸாருக்கு டி.ஜி.பி சைலேந்திரபாபு மீது கடும் அதிருப்தியை உண்டாக்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் போலீஸார் பணியில் இருக்கிறார்கள். சுமார் 1,400 காவல் நிலையங்கள் இயங்குகின்றன. ஒருசிலர் செய்யும் தவறுகளைப் பெரிதுபடுத்தி ஒட்டுமொத்த காவல்துறைக்கே உத்தரவு பிறப்பிக்கும் சைலேந்திரபாபு, போலீஸார் நலனையும் திரும்பிப் பார்க்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் உலவுகின்றன. போலீஸார் அவர்களின் குமுறல்களைக் கடிதமாக எழுதிக் குமுறுகின்றனர். ‘போலீஸ் பதிவேடுகளில் உள்ளதைவைத்து துறை சந்தோஷமாக செயல்படுகிறது என்று நினைத்துவிடாதீர்! ரத்தக்கண்ணீர் வடிக்கிறோம்... தீர விசாரியுங்கள்’ என்று ஆரம்பிக்கிறது அந்தக் கடிதம்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

அந்தக் கடிதத்தில், `உங்களுக்குத் தெரியாதது ஏதுமில்லை. ரிட்டயர்டு போலீஸ் அதிகாரிகள் சிலரின் வீடுகளில் இப்போதும்கூட போலீஸ் வாகனங்கள் ஒடிக்கொண்டிருக்கின்றன. வாகனம் மட்டுல்ல! டிரைவர், டீசல் அனைத்தையும் அரசு செலவில் அனுபவிக்கிறார்கள். 'ஆர்டர்லி' என்கிற பெயரில் வீட்டு வேலை செய்கிறார்கள். அதே மாதிரி, பணியிலுள்ள உயரதிகாரிகள் சிலர் அரசு வாகனங்களை அவர்களின் குடும்பத்தினர் பயன்பாட்டுக்கு அனுப்புகிறார்கள். பொதுவாக, மாவட்டங்களில் பணிபுரிகிறவர்கள், அவர்கள் மாறுதலாகும்போது ஸ்பெஷல் பணி என்கிற பெயரில் அவரிடம் வேலை செய்தவர்களைத் தங்களுடன் அழைத்துப்போகிறார்கள். இப்படியெல்லாம் போலீஸார் அலைக்கழிக்கப்படுவது மனித உரிமை மீறல் இல்லையா?

ஒவ்வொரு காவல் நிலையத்திலும், காவல் நிலையத்தில் தினசரி உபயோகப்படுத்தும் ஸ்டேஷனரி பொருள்கள் அனைத்துமே யாரோ முகம் தெரியாத புகார் தர வரும் பொதுஜனத்திடம் பிச்சை எடுக்கப்படுகிறது. இந்தப் பொருள்களை வாங்க அரசுத் தரப்பில் சிறு தொகை தரப்படுகிறது. அந்தத் தொகைக்கான கையெழுத்து மட்டும் காவல் நிலையத்தில் பெறப்படுகிறது. ஆனால், பணம் போகும் ரிஷிமூலங்களைத் தகர்த்து, காவல் நிலையத்தில் பயன்படுத்தப்படும் அத்தியாவசியப் பொருள்களைத் தாரளமாக வாங்க நிதி உதவி செய்ய வேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காவல் நிலையத்தைச் சுத்தமான பகுதியாக வைத்துக்கொள்ள அவ்வப்போது உயரதிகாரிகள் ஆணையிடுகிறார்கள். அரசு நியமித்துள்ள துப்புரவுப் பணியாளர்கள் அனைத்துக் காவல் நிலையங்களிலும் இல்லை. இங்கொன்றும் அங்கொன்றுமாகத்தான் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். மேலே சொன்னதுபோல யாரோ முகம் தெரியாத ஒரு குடிமகனிடம் பிச்சை எடுத்துத்தான் காவல் நிலையத்தை தினந்தோறும் சுத்தம் செய்யும் பணியைச் செய்ய ஒருவரை பணியமர்த்தி காவல் நிலையங்கள் சுத்தம் செய்யப்பட்டுவருகின்றன. தமிழகத்திலுள்ள அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் ஒரு தூய்மை பணியாளரை பணியமர்த்த தாங்கள் உத்தரவிட வேண்டும்.

காவல் நிலையத்தில் ஆய்வாளர் முதல் அனைத்து அதிகாரிகளும் பயன்படுத்தும் வாகனங்கள் பல ஆண்டுகளைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றன. அவற்றைச் சீர்செய்வதற்கு முகம் தெரியாத நபரிடம் பிச்சை எடுத்து சீர் செய்து கொண்டிருக்கின்றனர். ஆகவே அதைக் குறிப்பிட்ட கால அளவில் புதுப்பிக்கவும் சீர் செய்யவும் தாங்கள் உத்தரவிட வேண்டும்.

தமிழக காவல்துறை
தமிழக காவல்துறை

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் குறைந்தது நான்கு புறக்காவல் நிலையங்கள் உள்ளன. அவற்றைக் கட்டுவதற்கு அரசு எவ்வளவு பணம் கொடுத்தது என்பதைக் கேளுங்கள்... ஒவ்வொன்றும் உதவி ஆய்வாளர் முதல் ஆய்வாளர் வரை சாமானியர்களிடம் வசூல் செய்து அமைக்கிறார்கள். இனி வசூல் கூடாது என்று தடுத்து நிறுத்துங்கள்.

சென்னை மாநகரில் போலீஸ் தரப்பில் சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டது ஒருபுறம்... ஆனால், லட்சக்கணக்கில் மூன்றாவது கண் நிறுவினார்களே... எப்படி... யார் பணம் வழங்கியது என்று தாங்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதற்காக, கீழ்மட்ட அதிகாரிகள் முதல் உதவி ஆணையாளர் வரை எவ்வளவு பாடுபட்டு யார் யாரிடம் கெஞ்சி அதை நிறுவினார்கள் என்று கேட்டு, இவ்வாறான செயல்கள் இனி நடக்கக் கூடாது என்று சொல்லி, தாராளமாக நிதி ஒதுக்கி உத்தரவு போடுங்கள்.

தங்களது பணியில் ஓய்வின்றி உழைத்துவரும் போலீஸாருக்குக் கிடைக்க வேண்டிய முறையான ஊதியப் பிரதிபலன்கள் கிடைக்காமல் கஷ்டப்படுகின்றனர். தனக்கு வர வேண்டிய ஊதிய பலன்கள் வராதபோது அதைக் கேட்பதற்கு சில நேரங்களில் 50 முதல் 60 கிலோ மீட்டர் தனது சொந்த வாகனத்தில் பயணம் செய்து மாவட்ட மற்றும் மாநகர காவல் தலைமையகம் சென்றால் அங்கே அமைச்சுப் பணியாளர்கள் கொடுக்கும் டார்ச்சருக்கு அளவேயில்லை. ``போலீஸ்காரர்... வணக்கம் சரியாக வைக்கவில்லை... நேராக நின்று பேசவில்லை...'' என்றெல்லாம் குறை கண்டுபிடித்து மேலதிகாரிகளிடம் போட்டுக்கொடுக்கிறார்கள். அமைச்சுப் பணியாளர்கள் சிலர் போலீஸாரின் முறையான ஊதியப் பலன்களை நிலுவையில் வைத்துள்ளனர். அதை எவ்வளவு பெரிய அதிகாரியிடம் முறையிட்டாலும் அமைச்சுப் பணியாளர்கள் விரும்பிய நேரத்திலேயே அதை செய்து முடிக்கின்றனர். எனவே காவலர்களின் ஊதிய பலன்களை காலம் தாழ்த்தி வழங்கும் அமைச்சுப் பணியாளர்களின் மீது நடவடிக்கை எடுக்க தாங்கள் அரசுக்கு உத்தரவிடுங்கள்.

நாள்தோறும் நடைபெறும் சாலைமறியல், அனுமதியில்லாமல் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள் எனக் கைது செய்து மொத்தமாக பாதுகாப்பாக வைத்திருக்க ஒவ்வொரு காவல் நிலையப் பகுதியில் இருக்கும் திருமண மண்டபங்களில் காவல்துறையினர் கெஞ்சுகின்றனர். அரசு அவர்களுக்கு முறையான நிதி ஒதுக்கினால் வாடகை கொடுத்து அவர்களைத் தங்க வைக்கலாம். அதற்கு உத்தரவிட வேண்டும்.

குற்ற வழக்கில் கைதுசெய்யப்படும், குற்றவாளிகளுக்கும் போராட்ட நேரங்களில் கைது செய்யப்படும் போராட்டக்காரர்களுக்கும் உணவளிக்க காவல்துறையினர் யாரோ ஓர் உணவக முதலாளியை இருகரம் கூப்பி இலவச உணவளிக்கக் கேட்கின்றனர். ‘அதற்குத்தான் பணம் ஒதுக்கப்பட்டுள்ளதே’ என்பீர்கள். அவையெல்லாம் எங்கே போகின்றன என்கிற ரூட்டை செக் செய்யுங்கள். இவ்வாறான விஷயங்களுக்கு அரசு நிதி ஒதுக்க வேண்டும் எனத் தாங்கள் உத்தரவிடுங்கள்.

டி.ஜி.பி சைலேந்திரபாபு
டி.ஜி.பி சைலேந்திரபாபு

ஒவ்வொரு காவல் நிலையத்திலும் வழக்குகளை நீதிமன்றத்தில் கையாள்வதற்கு கோர்ட் ஆர்டர்லி எனப்படும் நீதிமன்றத்தில் வழக்குகளைப் பராமரிக்கும் போலீஸ்காரர் இருக்கிறார். அவர்களைக் கொஞ்சம்கூட மனித உரிமைகளைப் பற்றி கவலைப்படாமல், மரியாதை இல்லாமல் கேவலமாக நீதித்துறை பிரமுகர்கள் நடத்துகிறார்கள். இதுநியாயமா? நீதித்துறையின் உயர் அதிகாரிகளுடன் பேசி, இந்தப் பிரச்னையைத் தீர்க்க வழிவகை செய்யுங்கள். கோர்ட் ஆர்டர்லியாக இருக்கும் போலீஸாரை வீட்டு வாகனத்துக்கு டிரைவராகவும், காய்கறி வாங்குவதற்கும் பயன்படுத்தும் நீதித்துறை பிரமுகர்களை கண்டிக்கவேண்டும். சட்டப்பூர்வமான வேலைகளைத் தவிர மற்ற வேலைகளில் ஈடுபடுத்த கூடாது எனத் தாங்கள் உத்தரவிட வேண்டும்.

போலீஸாருக்கு வழங்கப்படும் சீருடை, காலணி மற்றும் இதர பொருள்கள் அனைத்துமே தரமுள்ளவையாக வழங்க தாங்கள் உத்தரவிட வேண்டும்.

காவல் துறையினரிடம் மாதமாதம் வசூலிக்கப்படும் ‘போலீஸ் பெனிபிட் ஃபண்ட்’ வேறு எதற்காகவோ பயன்படுத்தப்படுவதாக கேள்விப்படுகிறோம். அதை விசாரிக்க உத்தரவிடுங்கள்.

காவல் ஆய்வாளர்கள் பதிவு செய்யும் வழக்குக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் விசாரணைப்படி எனப்படும் இன்வெஸ்டிகேஷன் சார்ஜஸ் எந்த ஸ்டேஷனுக்கும் நேரிடையாக வழங்கப்படுவதில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரியை மாவட்ட அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்து கையெழுத்து மட்டும் வாங்கிக்கொள்வார்கள். இவை குறித்தும் விசாரிக்க உத்தரவிடுங்கள்.

ஸ்டாலின் - சசிகலா - சைலேந்திர பாபு! - டாஸ்க்.. ட்விஸ்ட்..திகில் | Elangovan Explains

சமூக வலைதளங்களிலும், நேரிலும் நம்மிடம் பேசிய போலீஸாரின் கருத்துகள் குறித்து தமிழக டி.ஜி.பி-யான சைலேந்திரபாபுவிடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம். அவர் பிஸியாக இருந்ததால், கிடைக்கவில்லை. எனவே, டி.ஜி.பி. அலுவலக உயர் அதிகாரி ஒருவரிடம் பேசியபோது, '' நீங்கள் சொல்லும் பிரச்னைகள் காலங்காலமாக நடக்கிறவைதான். என்ன செய்வது? புதிதாக வந்திருக்கும் சைலேந்திரபாபு மனது வைத்தால், போலீஸாரின் குமுறல்களை சரிசெய்ய முடியும். அவர் என்ன செய்கிறாரென்று பார்ப்போம் '' என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு