Published:Updated:

டேண்டம் சைக்கிள், 600 கி.மீ தூரம், 40 மணிநேர டார்கெட்! - கரூரைக் கலக்கிய கேரள நண்பர்கள்

இருவர் அமர்ந்து ஓட்டக்கூடிய டேண்டம் வகை சைக்கிளை ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் ஓட்டி வந்தது, கரூர்வாசிகளை வெகுவாகக் கவர்ந்தது.

ஆப்ரகாம், லோரா
ஆப்ரகாம், லோரா

கோவையில் உள்ள ஆர்டர்ஸ் இந்தியா அசோசியேஷன் என்ற தனியார் நிறுவனம் சார்பில், தேசிய அளவிலான சைக்கிள் பந்தயம், கோவையில் தொடங்கியது. இப்பந்தயம், 40 மணி நேரத்தில் கரூர்-திருச்சி-ஈரோடு-கோவை என மொத்தம் 600 கிலோ மீட்டர் பயணிக்கும் வகையிலான போட்டியாகும். கரூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்த போட்டியாளர்கள், பல கிலோ மீட்டர்கள் கடந்துவந்து கரூர் சுங்கச்சாவடி முன்பு, செல்ஃபி எடுத்து போட்டி நடத்தும் மையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

செல்பி எடுக்கும் ஆப்ரகாம் மற்றும் லோரா
செல்பி எடுக்கும் ஆப்ரகாம் மற்றும் லோரா

இதேபோல, திருச்சி நகர்ப் பகுதிக்குச் சென்று அங்கும் செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும் என்பது போட்டியின் விதிமுறை. இந்தப் போட்டியில் 10-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்றதோடு, உலக சாதனை முயற்சிக்காக டேண்டம் எனப்படும் இருவர் ஒரே நேரத்தில் ஓட்டக்கூடிய மிதிவண்டியை ஓட்டிவந்தனர் கேரளாவைச் சேர்ந்த ஆப்ரகாம் மற்றும் லோரா ஆகியோர்.

அவர்களிடம் பேசினோம்.

`` இதுபோன்ற போட்டிகளில் 300 கிலோமீட்டர் பயணம் என்பது உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. பாரீஸ் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அந்தப் போட்டி நடைபெறும். அதில், நானும் கடந்தமுறை கலந்துகொண்டு, இலக்கை அடைந்தேன். மொத்தம் 6,300 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அதில் இந்தியா சார்பில் 322 பேர் கலந்துகொண்டனர். அவர்களில் 14 பேர்கள் இலக்கை அடைந்தனர்.

ஆப்ரகாம் மற்றும் லோரா
ஆப்ரகாம் மற்றும் லோரா

இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 4 பேர், கேரளாவைச் சேர்ந்த 3 பேர், பெங்களூரைச் சேர்ந்த 2 பேர் அடக்கம். மற்றவர்கள், வடநாட்டைச் சேர்ந்தவர்கள். அதேபோல் தற்போது, அந்தச் சாதனையை முறியடிப்பதற்காக, 600 கிலோ மீட்டர் போட்டியில் கேரள மாநிலம் பரவூர் பைக்கர்ஸ் கிளப் சார்பில் டேண்டம் எனப்படும் இருவர் ஓட்டக்கூடிய சைக்கிள் பந்தயத்தில் பங்கேற்றுள்ளோம்.

கோவையில் ஆரம்பிக்கும் போட்டி, கரூர் வழியாக திருச்சி சென்று, அங்கிருந்து திரும்பிவந்து கோவையை அடைந்து, அங்கிருந்து ஈரோடு பவானி சென்று மறுபடியும் கோவையை அடைய வேண்டும். மொத்தம் 600 கிலோ மீட்டர்கள் தூரம் கொண்ட போட்டி இது. இந்தப் பயண தூரத்தை டேண்டம் சைக்கிள் மூலம் 40 மணி நேரத்தில் கடக்க வேண்டும். பத்து ஜோடிகள் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு பயணிக்கிறார்கள். அங்காங்கே செக்பாயின்ட் இருக்கும்.

ஆப்ரகாம் மற்றும் லோரா டேன்டம் சைக்கிளில்...
ஆப்ரகாம் மற்றும் லோரா டேன்டம் சைக்கிளில்...

அங்கே நின்று போட்டி நடத்துபவர்களுக்கு செல்ஃபி எடுத்து அனுப்ப வேண்டும். நாங்கள் இருவரும் கண்டிப்பாக 40 மணி நேரத்துக்குள்ளாகவே இலக்கை அடைந்து, வெற்றி பெறுவோம்" என உற்சாகத்தோடு தெரிவித்தனர்.