Published:Updated:

விவசாய நிலங்களைக் குறிவைக்கும் மணல் மாஃபியாக்கள்! - அச்சத்தில் டெல்டா விவசாயிகள்

கே.குணசீலன்

விவசாய நிலங்களில் மணல் கொள்ளை நடந்து வருவதால் டெல்டா விவசாயிகளும், விவசாயமும் முற்றிலுமாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

மணல் எடுக்கப்பட்ட இடம்
மணல் எடுக்கப்பட்ட இடம் ( ம.அரவிந்த் )

தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப் பெயரெடுத்த தஞ்சை மற்றும் டெல்டா பகுதியை ஏற்கெனவே ஹைட்ரோ கார்பன், காவிரியில் தண்ணீர் வராதது, வறட்சி உள்ளிட்ட பிரச்னைகள் சூழ்ந்துள்ளன. தற்போது மணல் மாபிஃயாக்கள் ஆற்றுப்படுகை ஓரம் மற்றும் விவசாய நிலங்களில் மணல் அள்ள தொடங்கியிருப்பதால் புது பிரச்னையில் சிக்கி தவிக்கிறார்கள் விவசாயிகள். `இதனால் விவசாய நிலங்கள் பள்ளத்தாக்காக மாறி விடும், விவசாயமும் விவசாயிகளும் முற்றிலுமாக பாதிக்கப்படுவார்கள். இதை உடனே தடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

பள்ளமாக மணல் அள்ளப்பட்ட இடம்
பள்ளமாக மணல் அள்ளப்பட்ட இடம்

இது குறித்து தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் அய்யனாவரம் முருகேசனிடம் பேசினோம். ``ஆறுகளில் தொடர்ந்து மணல் அள்ளி வந்ததால் மணல் இல்லாமல் போய்விட்டது. ஆறுகளில் மணல் அள்ளுவதற்கு பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், மணல் எடுப்பதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் தற்போது மணல் மாபியாக்கள் ஆற்றுப்படுகை மற்றும் விளைநிலங்களை குறி வைத்து மணல் அள்ள தொடங்கியுள்ளனர்.

தண்ணீர் இல்லாததால் விவசாயம் செய்யாமல் தரிசு நிலமாக வைத்திருந்து யாருக்கு என்ன பயன் என விவசாயிகளிடம் பேசி ஆசை வார்த்தைகளைக் கூறி, மணல் அள்ளுவதற்கு சம்மதிக்க வைத்து மணலை கொள்ளயடித்து வருகின்றனர். பூதலூர் அருகே உள்ள காங்கேயம்பட்டி வெண்ணாற்றங்கரை ஓரத்தில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான நிலத்தில் மணல் அள்ளப்பட்டு வருகிறது. விவசாயிக்கு ஒரு லோடுக்கு ரூபாய் 11,000 வரை தருகின்றனர்.

மணல் அள்ளப்பட்ட இடத்தில் விவசாயிகள்
மணல் அள்ளப்பட்ட இடத்தில் விவசாயிகள்

இதற்கு அருகில் விளை நிலங்கள் வைத்திருக்கும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவாய்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அதற்கு அவர்கள், `சும்மா புகார் சொன்னா எப்படி? மணல் அள்ள வரும் லாரிகளை சிறைப்பிடித்து விட்டு கூறுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம்' என்று சொல்லியிருக்கிறார்கள். உடனே, அப்பகுதி மக்கள் திரண்டு 5 லாரிகளை சிறைப்பிடித்துக் கொடுத்தனர். இதையடுத்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உரிய அனுமதி பெற்றுதான் மணல் அள்ளுகின்றனர் என மணல் மாபியாக்களுக்கு சாதகமாகப் பேசி ஒரு லாரியை மட்டும் வைத்துக்கொண்டு 4 லாரிகளை விட்டு விட்டனர்.

பனவெளி, நாகத்தி, ஆச்சனூர் மற்றும் வெண்ணாற்றங்கரை ஓரங்களில் உள்ள விளை நிலங்களிலும், ஆற்றின் ஓரங்களிலும் மணல் அள்ளப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் மட்டும் 18 அடி ஆழத்திற்கு மணல் அள்ளியிருக்கின்றனர். மக்கள் நேர்காணல் முகாம், தஞ்சை கலெக்டரிடம் இதுகுறித்து புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் இல்லை.

மணலை காட்டும் விவசாயிகள்
மணலை காட்டும் விவசாயிகள்

ஆற்றின் மணலை விட விளைநிலத்தில் உள்ள மணல் தரமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அதனால், இங்கு மணல் அள்ளுவதை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளனர்'' என்றார்.

வழக்கறிஞர் சுதாகர் என்பவர் கூறுகையில், ``சவுடு மண் எடுப்பதாகக் கூறியே இதற்கு அனுமதி வாங்குகிறார்கள் ஆனால் ஆற்றங்கரை ஓரம் உள்ள விவசாயிகளின் நிலத்தில் மணல் அள்ளுகின்றனர். அப்படியே ஆற்றுக்குள்ளும் திருட்டுத்தனமாக மணல் அள்ளுகின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு வேண்டியவர்கள்தான் இப்படி நூதன முறையில் மணல் அள்ள தொடங்கியுள்ளனர்.

மணல் எடுக்கப்பட்ட இடம்
மணல் எடுக்கப்பட்ட இடம்

3 அடி ஆழம் வரைக்கும், காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே மணல் அள்ள வேண்டும் என விதியிருக்கிறது ஆனால், இவர்கள் எதிர்ப்புகள் வரும் என்பதற்காக பகல் நேரத்தில் அள்ளுவது இல்லை. இரவு நேரத்தில் நூற்றுக்கணக்கான லாரிகளை கொண்டு மணல் அள்ளுகின்றனர். இதனால் இப்பகுதியில் உள்ள மக்களுக்கு கடும் அச்சம் ஏற்பட்டுள்ளதோடு, விவசாயிகள் சொல்ல முடியாத துயரத்தில் தவித்து வருகின்றனர். ஆற்றுப் படுகையிலும், விவசாய நிலத்திலும் மணல் அள்ளுவதற்கு உடனே தடை விதித்தால் மட்டுமே நெற்களஞ்சிய பூமியான தஞ்சையைக் காக்க முடியும்'' என்றார் வேதனையுடன்.