Published:Updated:

`தேவையற்றதை நம்ப வேண்டாம்!'- வாட்ஸ்அப் வைரல் பதிவு குறித்து தஞ்சை மருத்துவக் கல்லூரி டீன் விளக்கம்

தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ( ம.அரவிந்த் )

`தஞ்சாவூர், இப்போது கொரோனா மையமாக மாறியிருக்கிறது. தற்போது கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமாகிவருகின்றன.’

தஞ்சாவூரில் கொரோன பரவுதல் குறித்து எச்சரிக்கை செய்யும்விதமாக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பதிவிட்டதாகக் கூறி, `அடுத்த மூன்று மாதங்கள் பேரழிவைத் தரும்’ என்ற பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அது, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், கவலையையும் உண்டாக்கியிருக்கிறது.

டீன் மருதுதுரை
டீன் மருதுதுரை

கொரோனா பரவுதலைத் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் இன்றிலிருந்து பல தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. மேலும், பல்வேறு வழிகாட்டு நடைமுறைகளை அறிவுறுத்தி, அவற்றைக் கடைப்பிடிக்கவும் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக தஞ்சை மாவட்டத்தில் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் உள்ளிட்டவற்றில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் மருதுதுரை கொரோனா பரவுதல் குறித்து எச்சரிக்கை செய்யும்விதமாக பதிவிட்டிருப்பதாகக் கூறப்படும் பதிவு ஒன்று வைரலாகிவருகிறது.

அந்தப் பதிவில், ``தஞ்சை மாவட்ட நண்பர்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள். மூச்சுத்திணறல், கொரோனாவின் முக்கியமான பாதிப்பு மற்றும் அவசரகால கேஸ்கள் மட்டுமே தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கையாளப்படுகின்றன.

கொரோனா வார்டு
கொரோனா வார்டு

அனைத்து கார்ப்பரேட் மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகள் தங்களிடம் தீவிர சிகிச்சை பெற்றுவந்தவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர். எல்லோரும் அரசு மருத்துவமனையை நாடும் சூழ்நிலை நிலவுவதால், அரசு மருத்துவமனைகளில் கடுமையான இடப்பற்றாக்குறை ஏற்பட்டுவருகிறது.

 கோவை: 60 நாள்களில் செயற்கை உறுப்பு நிலையம்! - கொரோனா காலத்திலும் அசத்திய அரசு மருத்துவமனை

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் சோர்வடைந்து நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். அவர்களுக்கு உதவி செய்யும் பணியாளர்கள், நோய்வாய்ப்பட்டுவருகின்றனர். அடுத்த இரண்டு, மூன்று மாதங்கள் பேரழிவைத் தரும். கடுமையான இந்த தொற்றுநோயின் அபாயத்தை பொதுமக்கள் இன்னும் முழுமையாக அறிந்து, புரிந்து கொள்ளவில்லை.

தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

ஒவ்வொரு தனிநபரின் உயிரும் ஆபத்தில் இருக்கிறது. எனவே, தஞ்சை மாவட்டத்தில் வசிக்கும் அனைவரும் சமூக ஒழுக்கம், சமூக இடைவெளி, கைகழுவுதல் உள்ளிட்டவற்றைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்.

புதிய நபர்களைச் சந்தித்தல், கூட்டம் கூடுவதைத் தவிர்த்தல் போன்றவற்றைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏனென்றால், தஞ்சாவூர் இப்போது கொரோனா மையமாக மாறியிருக்கிறது. தற்போது கொரோனா பாசிட்டிவ் கேஸ்கள் அதிகமாகிவருகின்றன. அனைத்துப் பெரிய மருத்துவமனைகளும் நிரம்பியுள்ளன. நோயாளிகள் ஒரு படுக்கைக்கு எல்லா இடங்களிலும் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். எனவே, அடுத்து வரும் காலங்களில் கவனமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்'' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை செய்யும்விதமாக இருந்தாலும், இந்தப் பதிவு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தஞ்சாவூரில் கடந்த சில வாரங்களாகவே நாள் ஒன்றுக்கு தோராயமாக 100 பேர் வரை கொரோனா பாதிப்புக்கு ஆளாகிவருகிறார்கள். இந்த சூழ்நிலையில் அரசு அதிகாரி ஒருவரே இதைப் பதிவிட்டிருப்பதாகக் கூறிப் பலரும் அந்தப் பதிவைப் பகிர்ந்து வருவதால், அது வைரலானது.

இது குறித்து டீன் மருதுதுரையிடம் பேசினோம், ``வாட்ஸ்அப்பில் வரும் அந்தப் பதிவை நான் பதிவிடவில்லை. கொரோனா பரவிவரும் நிலையில், பொதுமக்கள் மத்தியில் எச்சரிக்கை செய்யும்விதமாக, ஒரு குரலாக அந்தப் பதிவை ஒருவர் வாட்ஸ்அப்பில் பதிவு செய்திருந்தார்.

டீன் மருதுதுரை
டீன் மருதுதுரை

மக்களின் நலனே முக்கியம் எனச் செயல்படுவதால், அந்த நபர் பதிவிட்டதில் சிலவற்றை நீக்கிய பிறகு நான் ஒரு குரூப்பில் அதைப் பகிர்ந்திருந்தேன். நானே அதை எழுதியிருப்பதாக நினைத்து பலர் அந்தப் பதிவை பரப்பிவருகின்றனர். மக்கள் கவனமாக இருக்க வேண்டிய நேரமிது. தேவையற்றவற்றை நம்பாமல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனாவை முற்றிலுமாக ஒழித்து, அதன் பிடியிலிருந்து நாம் விரைவில் மீண்டுவிடலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு