Published:Updated:

`என் மகனின் நேர்மைக்குக் கிடைத்த பரிசு!' -அடுத்தடுத்த உதவிகளால் நெகிழும் 12 வயது சிறுவனின் தாய்

விஷ்ணு குடும்பத்தினருடன்
விஷ்ணு குடும்பத்தினருடன்

இரண்டு மாதங்களுக்கான மளிகைப் பொருள்கள், என் பையனுக்கு புது சைக்கிள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவியைச் செய்தனர். கிட்டத்தட்ட 25,000 ரூபாய் வரை எங்கள் கையில் பணமாகக் கொடுத்துள்ளனர்.

தஞ்சாவூரில் கொரோனா லாக்டெளனால் வருமானமின்றி முடங்கிய தன் குடும்பத்தைக் காப்பதற்காக விஷ்ணு என்ற சிறுவன், தினமும் 10 கிலோ மீட்டர் வரை சைக்கிளிலேயே சென்று வடை, சமோசா உள்ளிட்ட பலகாரங்களை விற்றுவருவதாக விகடன்.காமில் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம்.

சிறுவன் விஷ்ணு
சிறுவன் விஷ்ணு

இதை வாசித்த விகடன் வாசகர்களில் பலரும், சிறுவனின் வீட்டுக்கே தேடிச் சென்று உதவிகளை வழங்கிவருகின்றனர். இதுகுறித்து விஷ்ணுவின் அம்மா சுமதியிடம் பேசினோம். ``தஞ்சாவூர் அருகே உள்ள மானோஜிப்பட்டி கிராமத்தில் நாங்க இருக்கிறோம். என் கணவர் வரதராஜன். எங்களுக்கு மூன்று பிள்ளைகள். நரம்புத்தளர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால் என் கணவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை.

நான் வீட்டிலிருந்தபடியே நூல் கண்டு தயாரிக்கும் கூலி வேலை செய்தேன். இந்த நிலையில் லாக்டெளன் அறிவிக்கப்பட்டதால் அந்த வருமானமும் தடைபட்டுப்போனது.

விஷ்னுவின் பெற்றோர்
விஷ்னுவின் பெற்றோர்

இதையடுத்து, நான் வடை உள்ளிட்ட பலகாரங்களைச் செய்து வீட்டின் முன்வைத்து விற்கத் தொடங்கினேன். நான் படும் கஷ்டத்தைப் பார்த்த என் மகன், சைக்கிளில் போய் வடை, சம்சா விற்று வருகிறேன் எனச் சொன்னான். சரி என அவனை அனுப்பி வைத்தேன். அவனைப் பற்றி விகடனில் செய்தி எழுதியதைத் தொடர்ந்து, பல பேர் எங்களின் நிலையை விசாரிக்கத் தொடங்கினர். அத்துடன், பலகாரம் சுடுவதற்குத் தேவையான பலகாரச் சட்டி உள்ளிட்ட இரும்பால் ஆன பொருள்களை ஒருவர் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்.

இரண்டு மாதத்திற்கான மளிகைப் பொருள்கள், என் பையனுக்கு புது சைக்கிள் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு உதவியைச் செய்தனர். கிட்டத்தட்ட 25,000 ரூபாய் வரை எங்கள் கையில் பணமாகவும் கொடுத்துள்ளனர். இன்னும் பலர், என்ன தேவையோ அதைச் செய்வதாகக் கூறி அக்கறையோடு பேசிவருகின்றனர்.

விஷ்ணு
விஷ்ணு

இதில், முத்தாய்ப்பான விஷயம் என்னவென்றால் தி.மு.க தலைவர் ஸ்டாலின் போன் மூலம் எங்களிடம் பேசி விசாரித்தார். என் மகனிடம், `என்ன தம்பி நல்லா இருக்கியா?' எனக் கேட்டவர், என்னிடம், ``உங்க மகனை வியாபாரத்திற்கு அனுப்பாதீங்க. இந்த வயதில் படிப்பில் மட்டுமே அவனுக்கு கவனம் இருக்க வேண்டும். உங்களோட மூன்று பிள்ளைகளின் படிப்பையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நல்லா படிக்க வையுங்க. எதைப் பற்றியும் கவலைப்படாதீங்க' என்றார்.

அத்துடன், உங்க குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கிறேன்'' என்று தெரிவித்தார். ஒரு கட்சி தலைவரிடமிருந்து நம்பிக்கை தரும் வார்த்தைகளைக் கேட்டதும் கண்ணீர் வடித்துவிட்டேன். என் மகன் விஷ்ணுவின் பிறந்தநாள் அன்னைக்கும் வியாபாரத்திற்கு போன அவன் வழியில் கீழே கிடந்து பர்ஸ் ஒன்றை எடுத்துள்ளான். அதைத் திறந்து பார்த்தபோது அதில் 600 ரூபாய் பணம் இருந்துள்ளது. உடனே அதை அருகில் இருந்த போலீஸாரிம் கொடுத்துள்ளான். அவனைப் பாராட்டிய அவர்கள், 200 ரூபாய் பணம் கொடுத்துள்ளனர்.

``வலிக்குப் பயந்தா குடும்பமே பட்டினி கிடக்குமே...''- 12 வயதில் குடும்பத்தைச் சுமக்கும் தஞ்சை சிறுவன்

வேண்டாம் சார் என அந்தப் பணத்தை வாங்க விஷ்ணு மறுத்துவிட்டான். வியாபாரம் முடிந்தவுடன் வீட்டிற்கு வந்து நடந்ததைச் சொன்னான். எனக்குப் பெருமிதமாக இருந்தது. குடும்பமே கஷ்டத்தில் இருக்கும்போது, நேர்மையாக நடந்து கொண்ட அவனின் செயலை நினைத்துப் பெருமைப்பட்டேன். அன்றைக்குத்தான் அவனைப் பற்றி விகடனில் எழுதியிருந்தீர்கள். அவனுடைய நேர்மைக்குக் கிடைத்த பரிசாக இதை நினைக்கிறேன். அதன்பிறகு, முகம் தெரியாத பல பேர் வந்து எங்களுக்கு உதவி வருகிறார்கள். இதனால் எங்கள் வாழ்கையில் மாற்றமும் மகிழ்ச்சியும் ஏற்படத் தொடங்கிவிட்டது. இப்பதான் என் கணவர் முகத்தில் சிரிப்பைப் பார்க்க முடிகிறது" என்றார் நெகிழ்ச்சியான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு