Published:Updated:

``டவருக்கு பேட்டரி மாற்றக்கூட முடியவில்லை!" புலம்பும் தஞ்சாவூர் பிஎஸ்என்எல் ஊழியர்கள் - காரணம் என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பி.எஸ்.என்.எல் செல்போன் டவர்
பி.எஸ்.என்.எல் செல்போன் டவர் ( ம.அரவிந்த் )

``தனியார் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் டவர்களுக்கு பத்து மாதங்களாக வாடகை தரவில்லை. வாடகை கேட்டு உரிமையாளர்கள் நெருக்கடி தருகின்றனர். அதனால் செல்போன் டவரை பராமரிக்கக்கூட செல்ல முடியவில்லை" எனப் புலம்புகிறார்கள்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் அதிகாரி ஒருவருக்கு போன் செய்து, ``திருக்காட்டுப்பள்ளியில் கரன்ட் நின்ற அடுத்த நிமிஷமே செல்போன் டவர் ஆஃப் ஆகிவிடுகிறது. சிக்னல் மீண்டும் வருவதற்குப் பல மணி நேரம் ஆகிறது. இரண்டு வருடங்களாக இந்தப் பிரச்னை தொடர்கிறது, இது தொடர்பாகப் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை" எனப் புகார் தெரிவிக்கிறார்.

பி.எஸ்.என்.எல் அலுவலகம்
பி.எஸ்.என்.எல் அலுவலகம்

உடனே அந்த ஊழியர், ``பேட்டரி மாற்ற வேண்டும். ஊழியர்கள் வந்து மாற்றிவிடுவார்கள்" என்கிறார். பதிலுக்கு அந்த நபர், ``இதைத்தான் இரண்டு வருடங்களாகச் சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள்" என்று கேட்கிறார். அதற்கு அந்த ஊழியர், ``உங்களுக்கு எப்படி எக்ஸ்ப்ளெய்ன் செய்வதென்று எனக்குத் தெரியவில்லை. இந்தியா முழுவதும் இந்தப் பிரச்னை இருக்கிறது. தஞ்சாவூரில் பல இடங்களில் இந்தப் பிரச்னை இருக்கிறது" என்கிறார். அதற்கு அந்த நபர், ``பேட்டரி இல்லையென்றால் ஜெனரேட்டரையாவது போடச் சொல்லுங்கள்" எனக் கூறுகிறார். அதையடுத்து, அந்த பி.எஸ்.என்.எல் ஊழியர், ``சரி சார், பார்க்கச் சொல்கிறேன்" என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டிக்கிறார்.

இருவரும் பேசும் அந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. பி.எஸ்.என்.எல் செயலை வெளிச்சம் போட்டுக்காட்டுவதாக இருந்தது. தனியார் நிறுவனங்கள் தங்களது செல்போன் டவர்களை முறையாகப் பராமரித்து வாடிக்கையாளர்களைப் பெருகச் செய்து, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுத்து நல்ல லாபம் ஈட்டிவருகின்றன.

ஆடியோ
ஆடியோ
மாதிரிப் படம்

ஆனால், மத்திய அரசின் தொலைத் தொடர்புத்துறையின் கீழ் இயங்கும் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தால் ஏன் வளர்ச்சிப்பாதையில் செல்ல முடியவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்திருக்கிறது. மத்திய அரசு போதுமான நிதி ஒதுக்காததே இந்தப் பிரச்னைக்கு காரணம் என பி.எஸ்.என்.எல் அலுவலர்கள் புலம்புவதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

`150 நாள்களுக்குப் பிறகு இணைப்பு; சேவைக் குறைபாடு!'- பிஎஸ்என்எல் விவகாரத்தில் கறார்காட்டிய நீதிபதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கீழ் அமைக்கப்பட்டிருக்கும் டவர்களில் என்னதான் பிரச்னை, சிக்னல் கிடைக்காததற்குக் காரணம் என்ன என்பது குறித்து அறிய பி.எஸ்.என்.எல் அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம். ``தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 2-ஜி டவர்கள் 189, 3-ஜி டவர்கள் 141 என மொத்தம் 330 செல்போன் டவர்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் பேட்டரி பேக்கப், ஜெனரேட்டர் போன்றவை அமைத்து ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன. ஒரு பேட்டரி சுமார் ஐந்து வருடங்கள் வரை பழுது ஏற்படாமல் வேலை செய்யும்.

செல்போன் டவர்
செல்போன் டவர்

தற்போது பல பேட்டரிகள் பழுதடைந்திருப்பதால், புதிய பேட்டரி மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இதேபோல, ஜெனரேட்டரும் பழுதடைந்திருக்கிறது. மேனுவல் முறையில் இயங்கக்கூடிய ஜெனரேட்டர் என்பதால் ஊழியர்களே ஜெனரேட்டரை ஆன் செய்யவேண்டியிருக்கிறது. கேஷுவல் லேபர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் ஜெனரேட்டர் ஆன் செய்வதற்கான ஊழியர்கள் இல்லை. மேலும், ஜெனரேட்டருக்கு டீசல் வாங்கிப் போட முடியாத நிலையில் கடும் நிதி நெருக்கடி நிலவிவருகிறது.

தனியார் இடங்களில் அமைக்கப்பட்டிருக்கும் டவர்களுக்கு பத்து மாதங்களாக வாடகை தரவில்லை. வாடகை கேட்டு உரிமையாளர்கள் நெருக்கடி தருகின்றனர். அதனால் டவரை பராமரிக்கக்கூட செல்ல முடியவில்லை. செல்போன் டவர் கனெக்‌ஷனுக்கு கரன்ட் பில் கட்டவில்லை. கடந்த 18-ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தி.மு.க எம்.பி-க்களான பழநிமாணிக்கம், ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிஎஸ்என்எல்
பிஎஸ்என்எல்

அவர்கள் பி.எஸ்.என்.எல் செல்போன் டவர்கள் சிக்னல் ஏன் கிடைப்பதில்லை, வாடிக்கையாளர்களின் புகார்கள் அதிகரித்துவருகின்றனவே எனக் கேட்டனர். பி.எஸ்.என்.எல் அதிகாரிகள் தங்கள் நிலை குறித்து எடுத்துக் கூறினர். இந்தியா முழுவதும் இந்தப் பிரச்னை இருக்கிறது. இதைத் தீர்க்க வேண்டுமென்றால் புதிய பேட்டரி மற்றும் ஆட்டோமேட்டிக் ஜெனரேட்டர் அமைக்க வேண்டும்.

அதற்காகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரிடம் நிதி ஒதுக்கச் சொல்லி உயரதிகாரிகள் கோரிக்கை வைத்துவருகின்றனர். மத்திய அரசு ஏன் நிதி ஒதுக்கவில்லை, தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஏன் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என்று புரியவில்லை. தனியார் செல்போன் சிம்கார்டு நிறுவனங்கள் சேவைகளைப் பூர்த்தி செய்து வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தி லாபகரமான பாதையில் பயணித்துக்கொண்டிருக்கின்றன.

பிஎஸ்என்எல் அலுவலகம்
பிஎஸ்என்எல் அலுவலகம்

ஒரு காலத்தில் `கனெக்டிங் இந்தியா’ என விளம்பரம் செய்தது பி.எஸ்.என்.எல். தற்போது உள்ளூரில்கூட தொடர்புகொள்ள முடியவில்லை என்று வாடிக்கையாளர்கள் விமர்சிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. போதிய நிதி ஒதுக்கப்பட்டு உரிய கவனம் செலுத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்னையை முழுமையாகத் தீர்க்க முடியும். பி.எஸ்.என்.எல் மீண்டு வருவதற்கான வாய்ப்பும் ஏற்படும்" என்றனர்.

இது குறித்து தஞ்சாவூர் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தின் சப் டிவிஷனல் இன்ஜீனியரான கோவிந்தராஜ் என்பவரிடம் பேசினோம். ``நிதிப் பற்றாக்குறையால் இது போன்ற பிரச்னை நிலவுகிறது. அதைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறோம்" என்றார்.

`போனைப் பிடுங்கி எறிந்து விடலாமா?'- ராமதாஸை சோதிக்கும் பிஎஸ்என்எல்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு