Published:Updated:

கொரோனா: `எல்லோரையும் சிரிக்கச் சொல்வோம்; நாங்க அதை மறந்துட்டோம்!’ - கலங்கும் தஞ்சை கேமராமேன்

தேங்காய் வியாபாரம் செய்யும் கேமராமேன்
தேங்காய் வியாபாரம் செய்யும் கேமராமேன் ( ம.அரவிந்த் )

`கொரோனா லாக்டெளனுக்கு முன்பு வரை வீடியோ எடுத்துக் கொடுப்பதன் மூலம் மாதம் தோராயமாக ரூ. 20,000 வரை சம்பாதிச்சேன்.’

தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பால் வேலையிழந்த கேமராமேன் ஒருவர் சாலையோரத்தில் தேங்காய் வியாபாரம் செய்து, தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருகிறார். எல்லோரையும் சிரிக்க வைக்கும் கேமராமேன்களின் வாழ்கையில் மறுபடியும் மகிழ்ச்சி வரவைக்கும் நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் எனவும் கூறி வருகிறார்.

கொரோனா லாக்டெளனால் பாதிக்கப்பட்ட கேசவன்
கொரோனா லாக்டெளனால் பாதிக்கப்பட்ட கேசவன்

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் கேசவன். இவருக்கு சரளா என்ற மனைவியும், 3 வயதில் கோகுல் என்ற மகனும் உள்ளனர். வீடியோ கேமராமேனாக இருக்கும் கேசவன், சொந்தமாக வீடியோ கேமரா வைத்திருப்பதுடன், திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கும் வீடியோ எடுத்துக் கொடுக்கும் வேலை செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், கொரோனா லாக்டெளன் அறிவிக்கப்பட்டு 4 மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தடைபட்டுப் போனதில் வருமானத்தை இழந்த இவர், தன் குழந்தைக்கு பால் வாங்கக் கூட காசில்லாமல் தவித்திருக்கிறார். எல்லோரையும் சிரிக்க வைத்து படம் எடுக்கும் கேமராமேன்களின் வாழ்க்கை மொத்தமும் கொரோனாவால் தலைகீழாக மாறிவிட்டதே என மனதுக்குள் புலம்பியிருக்கிறார். இதையடுத்து, தன் குடும்பத்தைக் காப்பதற்காக சாலையோரத்தில் தேங்காய் கடை நடத்தத் தொடங்கியுள்ளார்.

வியாபாரம்
வியாபாரம்

இதுகுறித்து கேசவனிடம் பேசினோம். ``கொரோனா லாக்டெளனுக்கு முன்பு வரை வீடியோ எடுத்துக் கொடுப்பதன் மூலம் மாதம் தோராயமாக ரூ. 20,000 வரை சம்பாதிப்பேன். வீட்டு வாடகை மற்றும் குடும்ப செலவு மற்றும் கேமரா மெயின்டெனன்ஸ் உள்ளிட்டவைக்கு அந்தப் பணம் சரியாக இருக்கும். இதில் மிச்சப்படுத்த முடியாது என்றாலும், எந்தக் குறையும் இல்லாமல் வாழ்க்கை மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்தது.

கரூர்: `6 குழந்தைகளுக்கும் சரியா சாப்பாடு போட முடியல!' - நாடோடி மனிதரின் துயரம்

கொரோனா பரவுவதைத் தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், பலர் வேலைவாய்ப்பை இழந்தனர். இதனால் வருமானம் ஏதுமின்றி பலரது வாழ்க்கை தலைகீழாகப் புரட்டி போட்டப்பட்டது. என்னைப் போன்ற ஸ்டூடியோ தொழிலில் இருக்கும் கேமராமேன்களின் நிலை வார்த்தைகளால் சொல்ல முடியாது. முதல் இரண்டு மாதத்தைக் கையில் இருந்த பணம் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கி ஓட்டிவிட்டேன்.

கேசவன்
கேசவன்

அதன் பிறகு ஒரு பைசாகூட கையில் இல்லாமல் போனது. இதனால், என் மகனுக்கு பால், பிஸ்கட் வாங்கிக் கொடுக்கக் கூட காசில்லாத துயரநிலைக்குத் தள்ளப்பட்டேன். போட்டோ, வீடியோ எடுக்கும்போது எல்லோரையும் `ஸ்மைல் பண்ணுங்க’ என அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்போம். எல்லோரும் முகம் மலர்ந்து சிரிக்க வைத்த பிறகே, போட்டோ எடுப்போம். இதை கேமராமேன்களின் தனி சிறப்பாகவே நான் கருதுகிறேன்.

இப்படி எல்லோரையும் சிரிக்கச் சொன்ன எங்கள் வாழ்க்கையில் இவ்வளவு சீக்கிரம் சிரிப்பை மறப்போம் எனத் தெரியாமல் போனது. நான் வெளியே போயிட்டு வந்தாலே பிஸ்கட் வாங்கிக் கொண்டு வந்திருக்கேனா என என் மகன் அப்பா என ஓடியாந்து என் கையைப் பார்ப்பான். அப்போது மனசு சுக்குநூறாக உடைந்துவிடும்.

கேமரா மேன்
கேமரா மேன்

நண்பர் ஒருவர், `எப்ப இந்த லாக்டெளன் சரியாகும் எனத் தெரியவில்லை. இப்படியே அரை வயிற்றுக் கஞ்சி குடிச்சிகிட்டு எத்தனை நாள் இருக்கப்போற? வியாபாரம் ஏதாவது செய்’ என நம்பிக்கை கொடுத்தார். அதற்கும் காசு வேண்டுமே எனக் கையைப் பிசைத்து நின்றபோது உறவினரான மாமா ஒருவர், தன் தோப்பில் இருக்கும் தேங்காய்களைக் கொடுத்து விற்பனை செய்துவிட்டு காசு கொடுக்கச் சொன்னார்.

`சினிமா கோடிகளில் புரளும் தொழில்தான்; ஆனால்..!’ - அனுபவம் பகிரும் தஞ்சை `போஸ்டர் காடி’

புதிய வெளிச்சம் பாய்வதை உணர்ந்த நான், எந்தக் கூச்சமும் படாமல் சாலையோரத்தில் தேங்காய் கடை அமைத்து வியாபாரம் செய்யத் தொடங்கினேன். கையில் கேமராவை பிடித்த நான் கடந்த ஒரு வாரத்துக்கு மேலாகத் தேங்காயை வைத்துக்கொண்டு கூவிக் கூவி விற்பனை செய்கிறேன். இதன் மூலம் தினமும் எனக்கு ரூ.250 கிடைக்கிறது. இதைக் கொண்டு குடும்பம் ஓரளவுக்கு நன்றாக ஓடுகிறது. என் பையன் முகத்தில் மறுபடியும் சிரிப்பைப் பார்க்க முடிகிறது.

கோவிட் -19 கொரோனா
கோவிட் -19 கொரோனா

என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான கேமராமேன்கள் வாழ்கையை ஓட்ட முடியாமல், என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்து நிற்கின்றனர். அவர்களுக்கு அரசு, தன்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். எல்லோரும் சிரிக்கச் சொல்கிறவர்களான எங்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு