Published:Updated:

`அரசு நிவாரணத்துக்காக 5 கி.மீ நடந்த மூதாட்டி!' - வீட்டுக்கே சென்று உதவிய தஞ்சை அரசு அதிகாரி

மூதாட்டி குழந்தையம்மாள்
மூதாட்டி குழந்தையம்மாள்

உதவிக்கு யாரும் இல்லாததால், கடந்த சில தினங்களுக்கு முன் தனது வீட்டிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள வட்ட வழங்கல் அலுவகத்திற்கு நடந்தே சென்றார்.

தஞ்சாவூரில், மூதாட்டி ஒருவர் தனது ரேஷன் கார்டுக்கு அரசு அறிவித்த கொரோனா நிவராணம் கிடைக்காத நிலையில், 5 கி.மீ தூரம் நடந்தே சென்று, வட்ட வழங்கல் அலுவலரிடம் முறையிட்டுள்ளார். மூதாட்டியின் நிலையை உணர்ந்த வட்ட வழங்கல் அலுவலர், அவருக்கு புதிய ரேஷன் கார்டு கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்ததுடன், அவரின் வீட்டுக்கே சென்று ரூ.1,000 பணமும் அரிசி உள்ளிட்ட பொருள்களையும் உதவியாக வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதவும் மரியஜேசப்
உதவும் மரியஜேசப்

தஞ்சாவூர் அருகே உள்ள வலம்புரி கிராமத்தைச் சேர்ந்தவர், குழந்தையம்மாள் (வயது 65). இவருடைய கணவன் இறந்துவிட்டார். இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கூலி வேலைசெய்து அதில் வரும் வருமானத்தைக் கொண்டு கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் கூலி வேலைக்குச் செல்ல முடியாத நிலை குழந்தையம்மாளுக்கு ஏற்பட்டது. இதனால் சேர்த்துவைத்திருந்த காசைக் கொண்டு சில நாள்களை ஓட்டினார். இதையடுத்து, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு நிவாரணமாக அரசு ரூ.1,000 வழங்கியது.

கொரோனா உதவி
கொரோனா உதவி

குழந்தையம்மாள் தன் பகுதிக்குட்பட்ட ரேஷன் கடைக்கு, தனது ரேஷன் கார்டை எடுத்துக் கொண்டு 1,000 ரூபாயை வாங்கச் சென்றார். நீண்ட வரிசையில் காத்திருந்த பிறகு அவரிடம் வந்த ரேஷன் கடை ஊழியர், `பாட்டி, உங்க ரேஷன் கார்டு புதுப்பிக்கபடாமல் இருப்பதால், இதற்குப் பணம் கிடையாது' எனக் கூறிவிட்டார். `என்னப்பா இப்படி சொல்ற... இந்த வயசான காலத்துல நான் என்ன செய்வேன்' எனக் கூற, `என்னால் எதுவும் செய்ய முடியாது. நீங்க ரேஷன் கார்டு தொடர்பான அலுவலகத்துக்குச் சென்று முறையிடுங்கள்' எனக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, உதவிக்கு யாரும் இல்லாத்தால், கடந்த சில தினங்களுக்கு முன் தனது வீட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வட்ட வழங்கல் அலுவகத்திற்கு நடந்தே சென்றுள்ளார். பின்னர், அங்கிருந்த வட்ட வழங்கல் அலுவலரிடம் தன் நிலையை விளக்கிக் கூறி, 'எனக்கு ரேஷன் கடை மூலம் கொடுக்கப்படும் நிவாரணப் பொருள்களையும் நிவாரணப் பணம் 1,000 ரூபாயும் வழங்க வேண்டும்' எனக் கேட்டுள்ளார்.

வீட்டில் குழந்தையம்மாள்
வீட்டில் குழந்தையம்மாள்

இதையடுத்து, வட்ட வழங்கல் அலுவலர் மரியஜோசப், `எங்கிருந்து வர்றீங்க பாட்டி?' எனக் கேட்டதுடன் மூதாட்டியின் ரேஷன் கார்டை வாங்கிப் பார்த்த பிறகு, அந்த ரேஷன் கார்டு இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் இல்லை எனத் தெரியவந்தது. பாட்டி 5 கிலோ மீட்டர் நடந்து வந்ததையும், அவரின் நிலையையும் அறிந்த மரிய ஜோசப், உடனே அவரின் விவரங்களைக் கேட்டு, புதிய ரேஷன் கார்டு கொடுப்பதற்கான ஏற்பாட்டை செய்தார்.

அப்போது, `இனிமே எனக்கு எல்லா பொருளும் கிடைக்குமாய்யா' என பாட்டி கேட்க, `கவலையேபடாம வீட்டுக்கு போங்க, உங்க வீடு தேடி பொருள் வரும்' எனக் கூறி அனுப்பிவைத்தார். அத்துடன், சொன்னது போலவே மரியஜோசப், மூதாட்டியின் வீட்டுக்கே சென்று 30 கிலோ அரிசி, 2 கிலோ பருப்பு, 2 லிட்டர் சமையல் எண்ணெய், ரூ.1000 என அனைத்தையும் வழங்கினார். அதைப் பெற்று கொண்டபோது பாட்டியின் முகத்தில் இருந்த கவலை விலகியதுடன், `நீங்க நல்லா இருக்கணும்' எனக் கூறி வாழ்த்தினார். அப்போது மரிய ஜோசப், ` நான் எதுவும் செய்யவில்லை, அரசுதான் உங்களுக்கு செய்கிறது' எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்தது.

உதவி
உதவி

இதுகுறித்து மரியஜோசப் கூறுகையில், ``இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், போலி ரேஷன் கார்டுகளைக் கண்டுபிடித்து நீக்கியபோது தனிநபர் கார்டுகளும் நீக்கப்பட்டன. இதில் குழந்தையம்மாளும் பாதிக்கப்பட்டுள்ளார். கார்டை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு அவரும் எந்த முயற்சியும் செய்யவில்லை. இந்த வயதிலும் உழைத்து சாப்பிடும் அவரின் தற்போதைய நிலையை உணர்ந்து, புதிய கார்டைக் கொடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அவருக்கு புதிய கார்டு வந்துவிடும். அதுவரை அவருக்குத் தேவையான பொருள்கள் மற்றும் 1,000 ரூபாய் பணத்தை உதவியாக வழங்கியிருக்கிறோம்" என்றார் உற்சாகமான குரலில்.

அடுத்த கட்டுரைக்கு