Published:Updated:

`ஜோதிகா பேச்சால் எழுந்த சர்ச்சை' - தஞ்சை அரசு மருத்துவமனையை ஆய்வு செய்த கலெக்டர்

ஜோதிகா
ஜோதிகா

ஜோதிகா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கடந்த புதன்கிழமை மாலை சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

`தஞ்சாவூரில் உள்ள அரசு மருத்துவமனை முறையாகப் பராமரிக்கப்படவில்லை. அதன் பராமரிப்பு ரொம்பவே மோசமாக இருந்தது' என விருது நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தஞ்சை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மருத்துவனையில் ஆய்வு செய்து வருகின்றனர். `ஜோதிகா பேசியதன் விளைவாகவும் குறையிருந்தால் சரி செய்வதற்காகவும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன' என்கின்றனர் அதிகாரிகள்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

நடிகை ஜோதிகா, இயக்குநர் சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் இயக்குநர் இரா.சரவணன் இயக்கத்தில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தஞ்சாவூரில் நடைபெற்று வந்தது. தஞ்சை மக்களின் வாழ்வியலைச் சொல்லும் இந்தப் படத்தில் மிகுந்த ஈடுபாட்டுடன் ஜோதிகா நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பை தஞ்சாவூரில் உள்ள ராசா மிராசுதார் அரசு மருத்துவனையில் முறையான அனுமதி பெற்று ஜோதிகா சம்பந்தப்பட்ட காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன.

அந்த நேரத்தில் மருத்துவமனை வளாகத்தில் ஜோதிகா கண்ட காட்சிகள்தான் அவரை இப்படிப் பேச வைத்துள்ளன. இதுகுறித்துப் பேசிய நடிகை ஜோதிகா, `தஞ்சாவூரில் அரசு மருத்துவமனையில் படப்பிடிப்பில் கலந்துகொண்டேன். அந்த மருத்துவமனையை மிக மேசமாக பராமரித்து வந்தனர். அங்கு நான் பார்த்தவற்றை என் வாயால்கூட சொல்ல முடியாது.

ஜோதிகா
ஜோதிகா

எல்லோரும் கோயில் உண்டியலில் காசு போடுறீங்க, கோயிலை பெயின்ட் செய்து அழகாகப் பராமரிக்க உதவி செய்றீங்க. அதே மாதிரி அரசு மருத்துவமனைகளும் அரசுப் பள்ளிக்கூடங்களும் ரொம்பவே முக்கியம். மருத்துவமனையைப் பராமரிக்கவும் உதவுங்க' எனத் தனியார் டிவி விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை ஜோதிகா பேசியிருந்தார். அவரின் பேச்சு தற்போது பல விவாதங்களைக் கிளபியிருக்கிறது. படத்தின் இயக்குநர் இரா.சரவணனும், `ஏன் ஜோதிகா அப்படிப் பேசினார்?' என்பதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்தநிலையில் ஜோதிகா பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவத் தொடங்கியது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கடந்த புதன்கிழமை மாலை சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டார்.

``கொரோனா பிரச்னை ஏற்பட்டு ஒரு மாசத்துக்கு மேல் ஆகிறது. இதுவரை வராத கலெக்டர் தற்போது வந்து ஆய்வில் ஈடுபடுகிறார் என்றால் ஜோதிகா பேசியதன் விளைவுதான் இது. மருத்துவமனை எப்படி இருக்கிறது என்றும், அதன் செயல்பாடுகள் பற்றியும் அறியவும் ஏதேனும் குறையிருந்தால் அதை உடனடியாக சரி செய்யவுமே கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்" என்கின்றனர் அதிகாரிகள்.

அரசு மருத்துவமனை
அரசு மருத்துவமனை

மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெண்களின் உறவினர்கள் சிலரிடம் பேசினோம். ``பிரசவத்துக்காக வரும் பெண்கள் மேலே வெள்ளை உடையும், பச்சை பாவாடையும் அணிய வேண்டும். திடீரென வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக வரும் பெண்களிடம் அந்த உடை கையில் இருந்தால் மட்டுமே அட்மிஷன் போடுவோம் என்கின்றனர். முதலில் உடையை வாங்கி வருமாறும் கூறுகின்றனர்.

மருத்துவமனைக்கு வெளியே ரூ.200 மதிப்புள்ள இந்த உடைகள் 500 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்கின்றனர். மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து சொன்னால் காதில் வாங்கிக் கொள்வதில்லை. பெரும்பாலும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள்தான் இங்கு வருகின்றனர். பலர் காசு கொடுத்து இந்த உடையை வாங்க முடியாமல் தவிக்கின்றனர். இந்த உடையைக் கொடுப்பதற்கு அரசே நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை சரிசெய்யப்பட்டால் நிறைய கர்ப்பிணிகள் சந்தோஷம் அடைவார்கள்" என்கின்றனர்.

`வடு மறையாமல் ஒடுங்கிப்போய் அமர்ந்திருந்த தாய்..!' -ஜோதிகா சர்ச்சைக்கு இயக்குநர் விளக்கம்

மருத்துவமனை நிர்வாகிகளிடம், குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டோம். ``இங்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதால்தான் தஞ்சையைச் சுற்றியுள்ள பல மாவட்டங்களில் இருந்து இங்கு பிரசவத்துக்காக கர்ப்பிணிப் பெண்கள் வருகின்றனர். சில மாதங்களுக்கு முன் பார்வையாளர்கள் கூடம் இல்லாமல் இருந்ததால் மக்கள் திறந்தவெளியில் அமர்ந்து வந்தனர். தற்போது இரண்டு பார்வையாளர்கள் கூடம் அமைக்கபட்டுவிட்டது. ஜோதிகா பேசிதற்காக இந்த ஆய்வுகள் நடைபெறவில்லை. கொரோனா தொடர்பாகவே ஆய்வுகள் நடைபெற்றன. முதலில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். இன்று கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.எஸ்.சண்முகம் ஆய்வு செய்ததுடன் டாக்டர்களுடன் ஆலோசனையும் நடத்தினார்" என்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு