Published:Updated:

`இது இறைவன் கொடுத்த வாய்ப்பு!' - நெகிழும் தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவ்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ்

`தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்பதே பெரும் சவாலாகப் பேசப்பட்டது.

தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழா, பக்தி பரவசத்துடனும் கோலாகலமாகவும் நடந்து முடிந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிந்து, குடமுழுக்கை தரிசித்தார்கள். எந்த ஒரு சிறு அசம்பாவிதமும் இல்லாமல், பெரிதாகச் சொல்லும்படியான குறைகளும் இல்லாமல் குடமுழுக்கு நடைபெற்று முடிந்ததால், தஞ்சை மக்கள், மிகுந்த மனநிறைவும், மகிழ்ச்சியும் அடைந்துள்ளார்கள். வெற்றிகரமாக நடத்தி முடித்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவுக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வரக்கூடும்.. மாவட்ட நிர்வாகம் எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறதோ என்ற பெரும் கேள்வி எழுந்தது.

ஆட்சியர் கோவிந்தராவ்
ஆட்சியர் கோவிந்தராவ்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கு விழா மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் வரக்கூடும்.. மாவட்ட நிர்வாகம் எப்படி இதை எதிர்கொள்ளப்போகிறதோ என்ற பெரும் கேள்வி எழுந்தது.

`பெரிய கோயில் குடமுழுக்குக் கோலாகலம்' - மக்கள் வெள்ளத்தில் திணறிய தஞ்சை!

1997-ம் ஆண்டு நடைபெற்ற குடமுழுக்கின்போது தீவிபத்து ஏற்பட்டதால், தற்போது நடைபெறும் குடமுழுக்கில் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக்கூடாதென, தஞ்சை மக்கள் நினைத்திருந்தனர். வெளியூர்களிலிருந்து வரக்கூடிய லட்சக்கணக்கான மக்களுக்கு, எந்த ஒரு குறையும் இல்லாமல், தேவையான வசதிகளை மாவட்ட நிர்வாகத்தினர், எப்படி செய்து தரப் போகிறார்களோ என்ற கேள்வியும் எழுந்தது. இப்படியாக தஞ்சை பெரியகோயில் குடமுழுக்கை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்பதே பெரும் சவாலாகப் பேசப்பட்டது.

இந்நிலையில்தான், சிறப்பாக நடந்து முடிந்து, தஞ்சை மக்களை மனநிறைவில் ஆழ்த்தியுள்ளது இக்குடமுழுக்கு விழா. அலங்கார விளக்குகள், பளபளப்பான சாலை, அழகிய சுவர் ஓவியங்கள், பிரமாண்ட யாகசாலை உள்ளிட்டவை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அத்தோடு, பக்தர்களின் அடிப்படைத் தேவைகளான, போக்குவரத்து, குடிநீர், கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளுக்குச் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பு ஏற்பாடுகளும் குறையின்றி செய்யப்பட்டிருந்தன.

இதுகுறித்து நெகிழ்ச்சியோடு பேசும் தஞ்சை மக்கள், `பெருசா சொல்லிக்கிற மாதிரி எந்தக் குறையும் இல்லை. ஒரு சின்ன அசம்பாவிதமும் இல்லாம, குடமுழுக்கு மகிழ்ச்சியா நடந்து முடிஞ்சிடுச்சி. தஞ்சாவூர் கலெக்டர் சோவிந்தராவோட திறமையான, சுறுசுறுப்பான செயல்பாடு இதுக்கு ஒரு முக்கியக் காரணம்” எனப் பாராட்டு தெரிவிக்கிறார்கள்.

ஆட்சியர் கோவிந்தராவ்
ஆட்சியர் கோவிந்தராவ்

தஞ்சை ஆட்சியர் கோவிந்தராவிடம் இதுகுறித்து நாம் பேசியபோது, ``இது இறைவன் கொடுத்த மிகப்பெரும் வாய்ப்பு. நான் கலெக்டராக இருந்து தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கு விழாவை, நடத்துறங்கறது, எனக்கு கிடைச்ச பாக்கியம். இது வெற்றிகரமாக நடக்க, நான் மட்டுமே காரணம் இல்லை. அனைத்துத் துறை அலுவலர்களும் ஊழியர்களும் ஆர்வமாக உழைச்சாங்க. தன்னார்வ அமைப்புகளும் உறுதுணையாக இருந்தாங்க. காவல்துறையினர் அர்ப்பணிப்போடு செயல்பட்டாங்க. குடமுழுக்குக்கு தேதி குறிக்கப்பட்டதுல இருந்தே, தலைமைச் செயலாளர் சண்முகம் சாரும், டிஜிபி திரிபாதி சாரும் அடிக்கடி மீட்டீங்க நடத்தி ஆலோசனைகள் சொல்லிக்கிட்டே இருந்தாங்க. நேரடியாகவும் பார்வையிட்டாங்க.

இவ்விழாவுக்காக உயர்நிலைக்குழு அமைக்கணும்னு தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினேன். உடனே அமைச்சாங்க. அக்குழுவுல இடம்பெற்ற உயரதிகாரிகளும் நிறைய ஆலோசனைகள் சொன்னாங்க. எல்லோருடைய ஒத்துழைப்புனாலயும் அர்ப்பணிப்புனாலயும்தான் குடமுழுக்கு வெற்றிகரமா நடந்து முடிஞ்சிருக்கு” என்றார் நெகிழ்ச்சியோடு.

பின் செல்ல