Published:Updated:

`உழைக்கப் பயந்தா குடும்பத்தைக் காப்பாத்த முடியுமா?’- திருவையாறு `மாத்தியோசி’ மாற்றுத் திறனாளி

வாகனத்தில் பழங்கள் விற்கும் நாகராஜ்
வாகனத்தில் பழங்கள் விற்கும் நாகராஜ்

`அதிகாலை எழுந்து பழங்கள் வாங்கக் கிளம்புவேன் எனக்கு ஒத்தாசையாக என் மனைவியும் வருவாள். இரண்டு பேரும் தஞ்சைக்குச் சென்று பழங்களை வாங்கிக் கொண்டு வருவோம்'.

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் தஞ்சாவூர் அருகே மாற்றுத்திறனாளி ஒருவர் தனது ஜூஸ் கடையைத் திறக்க முடியாமல் போனது. இதனால், வருமானத்தை இழந்து தவித்த அவர், தன் மூன்று சக்கர வாகனத்தை நடமாடும் பழக்கடையாக மாற்றி பல பகுதிகளுக்குப் பழங்களை விற்பனை செய்துவருவது பாராட்டைப் பெற்றுள்ளது.

நாகராஜ்
நாகராஜ்

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாகராஜர் சமாதி தெருவையைச் சேர்ந்தவர் நாகராஜ் (வயது 41). மாற்றுதிறனாளியான இவருக்கு திலகவதி என்ற மனைவியும்,10 வயதில் சண்முகபிரியா,6 வயதில் திவ்யபிரியா என இரண்டு மகள்கள் உள்ளனர். போதுமான மருமானம் இல்லாமல் எனது குடும்பத்தை நடத்த முடியவில்லை. வறுமையில் இருக்கும் என் குடும்பத்தைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கடந்த வருடம் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தார் நாகராஜ்.

இதையடுத்து நகராஜூக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் அரசு சார்பில் வழங்கப்பட்டதுடன், திருவையாறில் உள்ள தாசில்தார் அலுவலகத்தில் ஜூஸ் கடை வைப்பதற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அனுமதி அளிக்கபட்டது. அதன்பின்னர் அங்கு ஜூஸ் கடை நடத்தி அதில் வரும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தார்.

நாகராஜ்
நாகராஜ்

இந்நிலையில்,கொரோனா ஊரடங்கு அமலுக்கு வந்ததால் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி கடையை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து தனது ஜூஸ் கடையை மூடிவிட்டார். கையில் இருந்த காசை வைத்துக்கொண்டு நாள்களை ஓட்டிக்கொண்டிருந்தவர், காசு தீர்ந்து போனதால் அடுத்து என்ன செய்வது என யோசித்தார்.

இதையடுத்து, தனது மூன்று சக்கர வாகனத்தையே நடமாடும் பழக்கடையாக மாற்றி அதில் திருவையாறின் பல பகுதிகளுக்கும் சென்று பழங்களை விற்பனை செய்து வருகிறார். யாரிடமும் கையேந்தக் கூடாது எப்போதும் உழைத்துச் சாப்பிட வேண்டும் என நினைத்து செயல்படும் நாகராஜின் மாற்றுச் சிந்தனையின் முயற்சியைப் பார்த்த பொதுமக்கள் அவரை பாராட்டியதுடன் நாகராஜிடம் பழங்களை வாங்கி ஊக்கப்படுத்தியும் வருகின்றனர்.

கொரோனாவால் பழ வியாபாரம் செய்யும் நாகராஜ்
கொரோனாவால் பழ வியாபாரம் செய்யும் நாகராஜ்

இதுகுறித்து நாகராஜிடம் பேசினோம், ``தினமும் ஜூஸ் கடை நடத்தினால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலை இருந்தது. திடீரெனக் கடையை மூடியதால் வருமானம் நின்றது. கையில் இருந்த காசும் கரைந்து விட்டது. வீட்டில் பிள்ளைகள் வேறு இருக்கிறார்கள். அவர்களை நினைத்துக் கவலையடைந்தேன். சரி இப்படியே வீட்டுக்குள் முடங்கியிருந்தால் குடும்பத்தைக் காப்பற்ற முடியாது, வண்டியிலேயே பழங்கள் விற்கச் செல்லாம் என முடிவு செய்து என் மனவியிடமும் யோசனை கேட்க அவளும் சம்மதித்தாள்.

`உலகம் எப்படிப் பார்த்தால் என்ன.. இது என் வாழ்க்கை!' -வேலூர் மாற்றுத் திறனாளி இளைஞரின் நம்பிக்கை

பின்னர் தினமும் அதிகாலை எழுந்து பழங்கள் வாங்கக் கிளம்புவேன். எனக்கு ஒத்தாசையாக என் மனைவியும் வருவாள். இரண்டு பேரும் தஞ்சைக்குச் சென்று பழங்களை வாங்கிக் கொண்டு வருவோம். பின்னர் என் மனைவியை வீட்டில் இறக்கி விட்டு விட்டு நான் மட்டும் பழங்களை விற்பனை செய்யச் சென்றுவிடுவேன். கடந்த பத்து தினங்களாக இதனைச் செய்து வருகிறேன். ஆரம்பத்தில் கஷ்டமாக இருந்தது. உழைக்க பயந்தா, எப்படி குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என நினைத்த பிறகு கஷ்டம் மறைந்துவிட்டது. ஒரு நாளைக்கு ரூ.200 லிருந்து ரூ. 300 வரை லாபம் கிடைக்குது. அதைவைத்து சந்தோஷமாக இருக்கிறோம்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு