Published:Updated:

`இந்த வாழ்க்கை இதுவரை நாங்க வாழாதது!’ - லாக்டௌனால் தஞ்சையில் நெகிழும் ஆதரவற்றவர்கள்

மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும் ஆதரவற்றவர்
மரக்கன்றுக்கு தண்ணீர் ஊற்றும் ஆதரவற்றவர் ( ம.அரவிந்த் )

`கொரோனா 144 தடை உத்தரவை நினைவு கொள்ளும் வகையில் கொரோனா குறுங்காடு அமைக்கும் முயற்சியாக அப்பகுதியில் 144 மரக்கன்றுகளை அவர்கள் கையினாலேயே ஊன்ற வைத்தோம்.'

தஞ்சாவூரில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கொரோனா ஊரடங்கால் ஆதரவற்றவர்களை மீட்டு கவனிக்க முகாம் அமைத்ததுடன், மரக்கன்று ஊன்றி பராமரிப்பது, ஆட்டம், பாட்டம், விளையாட்டு போன்ற செயல்களில் அவர்களை ஈடுபட வைத்து வருகிறார்கள். இப்படி அன்பும் அக்கறையுமாகக் கவனித்து வருவது அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சியை உண்டாக்கியுள்ளதுடன், `இந்த வாழ்க்கை இதுவரை நாங்க வாழாதது’ என அவர்கள் நெகிழ்கின்றனர்.

முகாமில் நடனமாடும்
முகாமில் நடனமாடும்

கொரோனா பரவாமல் தடுப்பதற்காகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் பலரும் வீட்டுக்குள் முடங்கிய நிலையில் தஞ்சாவூரின் நகரப் பகுதிகளில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் எனப் பலர் சுற்றித் திரிந்தனர். மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவின் உத்தரவின் பேரில் அவர்கள் மீட்கப்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு வேண்டிய உதவிகளை மாநகராட்சி நிர்வாகத்தினர் செய்து கொடுத்ததுடன், கண்காணிக்கக்கூடிய பொறுப்பு ரெனிவல் பவுண்டேஷன் என்ற அமைப்பிடம் கொடுக்கப்பட்டது. இந்தநிலையில் மரம் வளர்ப்பு, ஆடல், பாடல், உடற்பயிற்சி, சிகிச்சை என அவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட்டதால் இன்று அவர்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது. `இது வேறு எந்த மாவட்டத்திலும் செயல்படுத்தாத ஒன்று. இதற்கு வித்திட்ட கலெக்டர் கோவிந்தராவுக்கு நன்றி’ எனப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

விளையாட்டு
விளையாட்டு

இதுகுறித்து ரெனிவெல் பவுண்டேஷன் அமைப்பைச் சேர்ந்த வீரமணி என்பவரிடம் பேசினோம். ``தஞ்சை நகரப் பகுதிகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கபட்ட, ஆதரவற்றவர்கள் என மொத்தம் 110 நபர்களை அழைத்து வந்து எங்கள் கண்காணிப்பில் பராமரிக்கத் தொடங்கினோம். அவர்கள் மதுரை, ஈரோடு, கடலூர், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

அழுக்கு உடையுடன் இருந்த அவர்களுக்கு முதலில் முடி வெட்டி குளிக்க வைத்த பிறகு, புது ஆடை கொடுத்து உடுத்த வைத்தோம். பின்னர் உடற்பயிற்சிக்காகச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்ய வைத்தோம். தொடக்கத்தில் அவர்கள் எதற்கும் ஒத்துழைக்காமல் இருந்தனர். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டது. நேரத்துக்கு நல்ல உணவு, டீ, ஸ்நாக்ஸ் போன்றவற்றைக் கொடுத்து சாப்பிட வைத்தோம். இதைத் தொடர்ந்து கல்லூரி வளாகம் முழுவதையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

முகாம்
முகாம்

பின்னர் கொரோனா 144 தடை உத்தரவை நினைவு கொள்ளும் வகையில் கொரோனா குறுங்காடு அமைக்கும் முயற்சியாக அப்பகுதியில் ஆலம், அரசம், வேம்பு உள்ளிட்ட 144 மரக்கன்றுகளைக் கொடுத்து அவர்கள் கையினாலேயே ஊன்ற வைத்தோம். அத்துடன் காலை, மாலை என இரு வேளையும் அவர்கள் தங்கள் பிள்ளைகளைக் கவனிப்பதுபோல் நீர் ஊற்றி வளர்க்கத் தொடங்கினர். அதில் ஒரு அம்மா, `நான் செடிக்கு தண்ணீர் ஊற்ற மாட்டேன். நான் ராசியில்லாதவள்’ எனக் கூறினார். அவர் மனதில் எவ்வளவு வலி இருந்திருக்கும். `அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. நீங்க ஊத்துங்க’ என்றோம். அப்ப அவர் முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி படர்ந்தது.

மேலும், நல்ல உடற்பயிற்சியுடன் சேர்த்து யோகா சொல்லிக் கொடுத்தோம். அத்துடன் எல்லோரையும் நடனம் ஆட வைப்பது, பாட்டுப் பாடுவது, பாரம்பர்ய விளையாட்டுக்களை விளையாட வைப்பது என ஜாலி மன நிலைக்கு மாற்றினோம். தினமும் இரவு 7 மணியளவில் திரையுடன்கூடிய மொபைல் வேனை வரவழைத்து சினிமா படம் காண்பித்து வருகிறோம். இதில் அவர்களுக்குள் மனதில் நல்ல மாற்றம் ஏற்பட்டதுடன் மறுமலர்ச்சியுடன் இருக்கத் தொடங்கினர். `இந்த 45 நாள்கள் எங்க வாழ்க்கையில் இதுவரை நாங்க வாழாதது’ எனப் பலர் உருகினர்.

மரக்கன்று
மரக்கன்று

இதைத் தொடர்ந்து நன்றாகக் குணமான 15 பேரை அவர்கள் வீடுகளில் கொண்டு சென்று விட்டோம். சிலர் ஏற்றுக் கொண்டார்கள். பலர் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை அப்படியே விட்டுவிட்டால், மீண்டும் பழைய பாதைக்குச் சென்று விடுவார்கள். தொடர்ந்து அவர்களைக் காப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாவட்டம்தோறும் நிரந்தர முகாம் அமைத்து ஆதரவற்றவர்களுக்கு எல்லாவற்றையும் செய்து கொடுத்து, காக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு