தஞ்சை: பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெண்! - கலங்கிய அதிகாரிகள்; நெகிழ வைத்த கலெக்டர்

`இனி ஒரு நாளும் அந்தப் பெண், சாலையோரத்தில் இருக்கக் கூடாது உடனே அரசு காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்வதுடன், உடைகள் உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுங்க’ என கலெக்டர் கோவிந்தராவ் கூறியிருக்கிறார்.
தஞ்சாவூரில் பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெண் ஒருவர், கிழிந்த உடையுடன் பல மாதங்களாக சாலைகளில் சுற்றி திரிந்துள்ளார். இதனையறிந்த கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் அந்த பென்ணை மீட்டு அரசு காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாட்டை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அழுக்கு உடையுடன் தங்கியிருந்தபடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தார். இதனைக் கவனித்த சமூக ஆர்வலரான ரியாஸ்சுதீன் என்பவர் அவருக்கு தினமும் உணவு வழங்கி வந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா அச்சம் காரணமாகவும்,அதனை தடுக்கும் வகையிலும் தேவையில்லாமல் மருத்துவக் கல்லூரி வளகாத்திற்குள் இருக்கும் நபர்களை அதன் ஊழியர்கள் வெளியேற்றினர். அதில், இந்தப் பெண்ணும் வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, அவர் மெயின் சாலையில் சுற்றி கொண்டிருந்ததுடன், கிழிந்த உடையுடன் மோசமான நிலையில் சாலையோரத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், ரியாஸ்சுதீன் அந்த பெண்மணிக்கு புதிய உடை வாங்கி கொடுத்து உடுத்த வைத்தார்.அத்துடன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடத்தில் இருக்கும் இருக்கும் அந்த பெண்ணைத் தேடிக் கண்டுபிடித்து அக்கறையுடன் தினமும் உணவு வழங்கி வந்துள்ளார்.
மேலும், அந்த பெண் நிரந்தரமாக ஒரு இடத்தில் தங்கும் வகையிலான உதவியை செய்வதற்கான முயற்சியிலும் இறங்கினார். அதேபோல், அந்த பெண் குறித்த விபரங்களை உதவி கலெக்டர் வேலுமணியின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். பெண்ணின் நிலை குறித்த போட்டோக்களையும் அனுப்பி வைத்தார். அந்தப் பெண்ணின் நிலை கண்டு பதறிய வேலுமணி, உடனடியாக கலெக்டர் கோவிந்தராவிற்கு தகவல் கொடுத்தார்.

`இனி ஒரு நாளும் அந்த பெண் சாலையோரத்தில் இருக்கக் கூடாது. உடனே, அரசு காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாட்டை செய்வதுடன், உடைகள் உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுங்க’ என கலெக்டர் கோவிந்தராவ் கூறியிருக்கிறார். பின்னர் உதவி கலெக்டர் வேலுமணி தலைமையில் அரசு அதிகாரிகள் அந்த பெண் இருக்கும் இடத்திற்கே சென்று, அவரிடம் பேசியுள்ளனர்.
அவர்களிடம்,``எனக்கும் பிள்ளைகள் இருக்காங்க. ஆசையாக வளர்த்து அவர்களை ஆளாக்கினேன். ஆனால், அவர்கள் என்னை கவனிக்கவில்லை. அதனால், நான் அநாதையாக அலைந்து கொண்டிருக்கிறேன்’ எனக் கூறியதை கேட்டு வேலுமணி உள்ளிட்ட பலரது கண்கள் கலங்கியுள்ளன. மேலும், கலெக்டர் உத்தரவின் பேரில் புதிய உடை உள்ளிட்டவற்றையும் கொடுத்தனர்.
பின்னர், அவரை அழைத்து சென்று அரசு காப்பகத்தில் தங்க வைப்பதற்கான ஏற்பாட்டைச் செய்துள்ளனர். அதற்கு முன்னதாக அவரை குளிக்க வைத்தனர். மேலும், அவருக்கு கொரோனா டெஸ்ட் எடுத்து அதன் முடிவு வரும் வரை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன் பின்னர் வடக்குவாசல் பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் நிரந்தரமான தங்க வைக்கப்படுவார் என உதவி கலெக்டர் வேலுமணி தெரிவித்துள்ளார்.பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெண்ணை மீட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுத்த கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.