Published:Updated:

`மக்களை ஈர்க்கும் அறுவடைத் திருவிழா' - பாரம்பர்ய நெல் ரகங்களைப் பரவலாக்க உன்னத முயற்சி!

அறுவடைத் திருவிழா
அறுவடைத் திருவிழா

`பாரம்பர்ய நெல் ரகங்களின் மகத்துவத்தை மக்களுக்கு உணர்த்துறதுக்காகத்தான், நடவுத் திருவிழாவையும் அறுவடைத் திருவிழாவையும் தமிழ்நாடு முழுவதும் பல மாவட்டங்கள்ல நடத்திக்கிட் டிருக்கேன்’.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மலையப்ப நல்லூரில் நடைபெற்ற அறுவடைத் திருவிழா, அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது.

அறுவடை திருவிழா
அறுவடை திருவிழா

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்த பாரம்பர்ய நெல் ரகங்களைப் பரவலாக்கும் உன்னத முயற்சியாக, இதுபோன்ற விழாக்களை தமிழ்நாடு முழுவதும் நடத்திவருகிறார், 'பசுமைச் சாரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான எட்வின்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பயிரிடப்பட்டுவந்த பாரம்பர்ய நெல் ரகங்கள் மருத்துவ குணம் நிறைந்தவை. ஆனால், காலப்போக்கில் அவை கைவிடப்பட்டன. இந்நிலையில்தான், ரசாயன உரங்களைப் பயன்படுத்தி நவீன நெல் ரகங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளிடம், பாரம்பர்ய நெல் ரகங்கள் மற்றும் இயற்கை விவசாயத்தின் மகத்துவத்தை எடுத்துக்கூறி, அவர்களின் மனத்தில் படிப்படியாக மாற்றத்தை உருவாக்கி வருகிறார், எட்வின்.

நம் முன்னோர்கள், பாரம்பர்ய நெல் ரகங்களை சாப்பிட்டதால்தான், நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா வாழ்ந்தாங்க. ஆனால், அடுத்தடுத்த தலைமுறைகள் அதைக் கைவிட்டுடுச்சு.
எட்வின்

சத்துகள் நிறைந்த மாப்பிள்ளை சம்பா, கருங்குறுவை, கறுப்புக் கவுனி, குள்ளக்கார், காட்டுயானம் உள்ளிட்ட இன்னும் பல வகையான பாரம்பர்ய நெல் ரகங்களின் விதைகளை விவசாயிகளிடம் வழங்குவதோடு, அவர்களின் நிலங்களிலேயே நடவு திருவிழா நடத்தி, அவற்றை நடவுசெய்ய வைக்கிறார். அந்த விவசாயிகளிடம் இயற்கை விவசாயத் தொழிநுட்பங்களை சொல்லிக்கொடுத்து, பயிர் விளைந்த பிறகு அறுவடைத் திருவிழாவையும் நடத்துகிறார். நடவு மற்றும் அறுவடைத் திருவிழாக்களுக்கு சுற்றுவட்டார விவசாயிகளையும் பொதுமக்களையும் அழைக்கிறார்கள். இதனால் அடுத்தடுத்து பல விவசாயிகள் பாரம்பர்ய நெல் சாகுபடிக்கு மாறி வருகிறார்கள். இதன் தொடர்ச்சியாகத்தான், தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மலையப்ப நல்லூரைச் சேர்ந்த விவசாயியின் நிலத்தில் அறுவடைத் திருவிழா நடைபெற்றது.

பிரமிக்க வைக்கும் பாரம்பர்ய நெல் ரகங்கள்! - 5 ஏக்கர்... 111 விதமான பயிர்கள்...

இதுகுறித்து நம்மிடம் நெகிழ்ச்சியோடு பேசிய எட்வின், ``இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் உட்பட, இன்னும் சிலர் பாரம்பர்ய நெல் ரகங்களை மீட்டெடுத்து பரவலாக்க கடுமையா உழைச்சாங்க. நம் முன்னோர்கள், பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாப்பிட்டதால்தான், நோய் நொடி இல்லாம ஆரோக்கியமா வாழ்ந்தாங்க. ஆனால், அடுத்தடுத்த தலைமுறைகள் அதைக் கைவிட்டுடுச்சி. இதனால்தான் விதவிதமான நோய்களுக்கு ஆளாகி மக்கள் சிரமப்படுறாங்க. மக்கள் எல்லாருமே இதுக்கு மாறணும். இதைப் பரவலா எல்லா மக்களும் வாங்க ஆரம்பிச்சாதான், விவசாயிகள் இதைச் சாகுபடி செய்ய ஆர்வம் காட்டுவாங்க. இதை மக்களுக்கு உணர்த்துறதுக்காகத்தான், நடவுத் திருவிழாவையும் அறுவடைத் திருவிழாவையும் தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்கள்ல நடத்திக்கிட்டு இருக்கேன். இதுக்கு கண்கூடா பலன் தெரியுது” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு