Published:Updated:

`வர்றதுக்கு முன்னாடி காப்பதுதான் நல்லது!’ - நெகிழவைக்கும் அரசுப் பேருந்து ஓட்டுநர் #FightCOVID19

அரசுப் பேருந்தில் கிருமி நாசினி
அரசுப் பேருந்தில் கிருமி நாசினி

``பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு குறித்தும் கூறுகிறேன். வந்த பிறகு கஷ்டப்படுவதைவிட வருமுன் காப்பதே சிறந்தது.''

தஞ்சாவூரில், அரசுப் பேருந்து டிரைவர் ஒருவர் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகவும், பயணிகளைக் காக்கும் வகையிலும் தினமும் பேருந்தில் இயற்கை முறையில் தயார்செய்த கிருமி நாசினி தெளிப்பதுடன், பேருந்தில் பல இடங்களில் வேப்பிலைகளைக் கட்டிவைக்கிறார். இதன்மூலம் கொரோனா பரவாமல் தடுக்கலாம் எனக் கூறும் டிரைவரை, பயணிகள் முதல் பலர் பாராட்டிவருகின்றனர்.

கிருமி நாசினி
கிருமி நாசினி

தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன் குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன். இவர், தஞ்சை வழியாக பட்டுக்கோட்டை டு அரியலூர் செல்லும் அரசுப் பேருந்தில் டிரைவராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், சில தினங்களாக பணிக்குச் செல்லும்போது வீட்டிலிருந்து மஞ்சள், பூண்டு, வேப்பிலை ஆகியவற்றைக் கொண்டு இயற்கை முறையில் கிருமிநாசினி தயார்செய்து பாட்டில்களில் எடுத்துச்செல்கிறார்.

கொரோனா முன்னெச்சரிக்கை; தூத்துக்குடியில் மாஸ்க் அணிந்து திருமணம் செய்துகொண்ட மணமக்கள்!

பணிக்குச் சென்றதும் முதல் வேலையாக, பேருந்து முழுவதும் கிருமிநாசினியைத் தெளிக்கிறார். மேலும், வேப்பிலைகளை பஸ்ஸின் பல இடங்களில் கொத்தாகக் கட்டிவிடுகிறார். பயணிகளுக்கு கொரோனா வராமல் தடுப்பது எங்களுடைய கடமை. அதனாலேயே பாதுகாப்புக்காக இதைச் செய்வதாகக் கூறுகிறார் கண்ணன்.

பேருந்து
பேருந்து

இதுகுறித்து கண்ணனிடம் பேசினோம். ``உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ், தற்போது இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்திவருவது அனைவரும் அறிந்ததே. இதனால், பலருக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதுடன் கொரோனா பரவாமல் இருக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் செய்துவருகின்றனர். மத்திய, மாநில அரசுகள் கொரோனா பரவாமல் தடுக்கும் வகையிலான செயல்களை விழிப்புடன் செய்துவருகின்றன.

பொதுவாக பலர் கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஒரு பேருந்தில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயணம் செய்வார்கள். இதேபோல் நான் ஓட்டும் பேருந்திலும் மக்கள் பயணிப்பது வழக்கம். அவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுப்பதும், காப்பதும் எங்களுடைய கடமையாகும் என்பதை உணர்ந்ததால் பேருந்து முழுவதும் கிருமி நாசினி தெளிப்பதுடன், வேப்பிலைகளையும் கட்டி வைக்கிறேன். இதன்மூலம் கொரோனா தொற்று ஏற்படுவதற்கு வாய்பில்லை.

கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது 5 தடவைக்கு மேல் இவ்வாறு செய்கிறேன். இதற்கு, நடத்துநரும் முழு ஒத்துழைப்பு தருகிறார். பயணிகளுடன் சேர்த்து எங்க நலனும் முக்கியம் என்பதால், பஸ் புறப்படுவதற்கு முன்னதாகக் கைகளை சுத்தமாகக் கழுவிய பிறகே பேருந்தை எடுக்கிறேன். அத்துடன் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி விழிப்புணர்வு குறித்தும் கூறுகிறேன். வந்த பிறகு கஷ்டப்படுவதைவிட, வருமுன் காப்பதே சிறந்தது. அதன் அடிப்படையிலேயே இதைச் செய்கிறோம். இதைப் பார்த்த பயணிகள் பலரும், `உங்களுக்கு நல்ல மனசுப்பா' எனப் பாராட்டும் போது, மனசுக்கும் உடம்புக்கும் புத்துணர்ச்சியாக இருக்கும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு