Published:Updated:

`560 குடும்பங்கள்; 3,000 பேர்!’ - வீடு தேடிச் சென்று உதவிய தஞ்சை ஹோமியோபதி மருத்துவர்

கொரோனா தடுப்பு மருந்து
கொரோனா தடுப்பு மருந்து

`குஜராத் அரசு, தங்களது மாநிலத்தில் உள்ள 76,000-க்கும் அதிகமான மக்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்திருக்கு. இந்த மருந்தை சாப்பிட்டவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.’

தஞ்சையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் ஒருவர், தனது பூர்வீக கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தனது சொந்த செலவில் 3,000 பேருக்கு மருந்து வழங்கி அசத்தியுள்ளார். மத்திய அரசின் ஆயூஷ் அமைச்சகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆர்சானிக் ஆல்பம் 30C என்ற மருந்தை 560 குடும்பங்களுக்கு வீடு தேடிச் சென்று இலவசமாக வழங்கிய இச்சம்பவம், இப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா தடுப்ப்பு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது
கொரோனா தடுப்ப்பு மருந்து இலவசமாக வழங்கப்படுகிறது

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,000-த்தை நெருங்குகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு நீடிக்கப்பட்ட நிலையிலும்கூட இதைக் கட்டுக்குள் கொண்டு வருவது பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. மக்களின் அன்றாட வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டதால், மத்திய மாநில அரசுகள், ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்திருக்கின்றன.

இந்நிலையில்தான், கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலை உருவாகியுள்ளது. குறிப்பாக, முன்னெச்சரிக்கை தடுப்பு மருந்துகள் உட்கொள்ள வேண்டிய தேவை உருவாகியுள்ளது. ஆனால், இதற்கு எதைச் சாப்பிட வேண்டும், இதற்கான மருந்து எங்கு கிடைக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகள் எவை... இதுபோன்ற தகவல்கள் பெரும்பாலும் கிராமப்புற மக்களை சென்றடையவில்லை.

இந்நிலையில்தான் தஞ்சையைச் சேர்ந்த ஹோமியோபதி மருத்துவர் சுதந்திர பாரதியின் சேவை மனப்பான்மை, பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. இவரது பூர்வீக கிராமம், ஒரத்தநாடு அருகே உள்ள கீழ வன்னிப்பட்டு. இங்குள்ள 560 குடும்பங்களைச் சேர்ந்த 2,700 நபர்களுக்கும் மேலும், இதன் பக்கத்து கிராமமான ஒக்கநாடு கீழையூர் பகுதி மக்களுக்கும் மூன்று நாள்களுக்கு அருந்தக்கூடிய மருந்தை இலவசமாக வழங்கியுள்ளார் இவர். மேலும், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், போக்குவரத்துத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கும் இலவசமாக இந்த மருந்தை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் இன்று புதிதாக 1,286 பேருக்கு கொரோனா பாதிப்பு - 25,000-த்தைக் கடந்த மொத்த எண்ணிக்கை! #NowAtVikatan

இதுகுறித்து ஹோமியோபதி மருத்துவர் சுதந்திர பாரதியிடம் பேசினோம். ``ஆர்சானிக் ஆல்பம் 30C 2-ங்கற இந்த மருந்து, நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கக்கூடியது. மூன்று நாள்களுக்கு இந்த மருந்தைச் சாப்பிட்டால், நுரையீரலில் உள்ள சளி வெளியேறிடும். மனித உடலில் உள்ள நோய் எதிர்ப்பாற்றலையும் அதிகரிக்கும். இந்த மருந்தைச் சாப்பிட்டால், கொரோனா வராமல் தடுப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆகியவை, கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இந்த மருந்தைப் பரிந்துரை செஞ்சிருக்கு. குஜராத் அரசு, தங்களது மாநிலத்தில் உள்ள 76,000-க்கும் அதிகமான மக்களுக்கு இந்த மருந்தைக் கொடுத்திருக்கு. இந்த மருந்தைச் சாப்பிட்டவங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆர்சானிக் ஆல்பம் 30C மருந்தைச் சாப்பிடலாம்னு தமிழக அரசும் அரசாணை வெளியிட்டிருக்கு. கடைகளில் இந்த மாத்திரை இப்ப அதிகமான விலைக்கு விற்கப்படுது. என்னோட சொந்த செலவுல எங்க ஊர் மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். எங்க ஊர் மக்களும் இதுக்கு ஒத்துழைச்சாங்க. நம்பிக்கையோடு வாங்கி சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க” என மகிழ்ச்சியோடு பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு