Published:Updated:

தஞ்சாவூரில் கனமழை: உடையும் நிலையில் பாலம்; இடிந்து விழுந்த வீடு... உயிர் தப்பிய குடும்பம்!

மழையில் இடிந்து விழுந்த வீடு
News
மழையில் இடிந்து விழுந்த வீடு

தற்காலிக பாலத்தை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதாலும், சாலையை கடந்து மழை நீர் ஓடிக்கொண்டிருப்பதாலும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள அந்த தற்காலிக பாலம் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

பேராவூரணி பகுதியில் இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழையில் கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் முதியவர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் தற்காலிக பாலம் ஒன்றும் மழை நீர் சூழ்ந்திருப்பதால் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் பெய்த திடீர் பெரு மழையால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

மருத்துவமனையில் ஜனார்த்தனம்
மருத்துவமனையில் ஜனார்த்தனம்

தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. டெல்டா மாட்டங்களில் பெய்து வரும் மழை விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பெய்த மழையில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டன. கடைமடை பகுதியான பேராவூரணியில் இரவு முழுவதும் பெய்த கன மழையில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சிலரிடம் பேசினோம், `பேராவூரணி பகுதியில் நேற்று இரவு விடாமல் கன மழை பெய்து கொண்டிருந்தது. இதில் வாத்தலைக்காடு கிராமத்தில் ஜனார்த்தனம்(74) என்பவரின் பழைய கான்கிரீட் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. வீட்டின் முன் பகுதியில் ஜனார்த்தனம் படுத்திருந்துள்ளார். உள்பகுதியில் உள்ள அறையின் அவரின் மனைவி, மகள், பேத்தி ஆகியோர் படுத்திருந்தனர்.

சாலையை சூழ்ந்துள்ள மழை நீர்
சாலையை சூழ்ந்துள்ள மழை நீர்

வீடு பழுதடைந்திருந்தால் பல மாதங்களாக பிரதமர் மோடி வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்ட நிதி உதவி கேட்டிருந்தார். ஆனால் அரசு அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் பழைய வீட்டிலேயே ஜனார்த்தனமும் அவரின் குடும்பத்தினரும் வசிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் இரவு முழுவதும் பெய்த தொடர் கன மழையில் அவர் வீட்டின் முன்பகுதி முழுவதும் இடிந்து விழுந்தது. இதில் முன் பகுதியில் படுத்திருந்த அவருக்கு தலை, காது, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

திடீரென கேட்ட பெரும் சத்தத்தில் வீட்டுக்குள், படுத்திருந்த அவரின் மனைவி உள்ளிட்டவர்கள் பதறியடித்து எழுந்தனர். வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துடன் சத்தம் போட்டனர். இதனை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் ஜனார்த்தனத்தை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. வீட்டுக்குள் இருந்த மற்றவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதை எண்ணி அப்பகுதியினர் நிம்மதி பெரு மூச்சு விட்டனர்.

இடிந்து விழுந்த வீடு
இடிந்து விழுந்த வீடு

பேராவூரணியிலிருந்து பூக்கொல்லை வழியாக கழனிவாசல், சோழகனார் வயல், கொரட்டூர், ரெட்ட வயல் உள்ளிட்ட பல கிராமங்களுக்கு செல்வதற்கான மெயின் சாலை உள்ளது. இந்த சாலையில் நான்கு காட்டாற்று பாலங்கள் உள்ளன. அந்த பாலங்கள் மிகவும் பழுதடைந்திருந்தால் அதனை இடித்துவிட்டு புதிய பாலம் கட்டும் பணி கடந்த ஐந்து மாதங்களாக முன் தொடங்கப்பட்டு நடைப்பெற்று வருகிறது.

பொதுமக்களின் வசதிக்காக பூக்கொல்லை அருகே ரெட்டைவயல் பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பெய்த பெரு மழையில் பூக்கொல்லை அருகில் செல்லும் காட்டாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடத் தொடங்கியது. இதனால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாலம் உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்த வழியாக செல்லும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இருசக்கர வாகனங்களில் செல்வோர் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சாலையில் மழை நீர்
சாலையில் மழை நீர்

தற்காலிக பாலத்தை சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதாலும், சாலையை கடந்து மழை நீர் ஓடிக்கொண்டிருப்பதாலும் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள அந்த தற்காலிக பாலம் எப்போது வேண்டுமானாலும் உடையும் நிலையில் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 15 கிராம மக்கள் பெரும் பாதிக்குள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை எம்.எல்.ஏ அசோக்குமார் பார்வையிட்டுள்ளதாக” தெரிவித்தனர்.