Published:Updated:

`36 மணிநேரத்தில் ரூ.3.61 லட்சம் நிதி; இலக்கு ரூ.1 கோடி' -கொரோனா தடுப்பில் அசத்தும் எல்ஐசி ஊழியர்கள்

தஞ்சை எல்.ஐ.சி அலுவலகம்
தஞ்சை எல்.ஐ.சி அலுவலகம்

கொஞ்சமும் சுணக்கம் இல்லாமல், அக்கறையோடு நிதி அனுப்பிக்கிட்டே இருக்காங்க. இன்னும் சில மணிநேரங்களிலேயே தஞ்சைக் கோட்ட எல்.ஐ.சி ஊழியர்கள் 10 லட்சம் ரூபாய் இலக்கை நிறைவு செஞ்சிடுவாங்கனு எதிர்பார்க்குறோம்.

கொரோனா வைரஸ் பரவல் உலகையே பெரும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்தியாவையும் நிலைகுலையச் செய்துள்ளது. கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகப் பல்வேறு தரப்பினரும் மத்திய மாநில அரசுகளுக்கு ஏராளமாக நிதி வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு எல்.ஐ.சி ஊழியர்கள் நேரடியாக நன்கொடை வழங்குவதில் மிகுந்த ஆர்வமும் வேகமும் காட்டி வருகிறார்கள். குறிப்பாக தஞ்சைக் கோட்ட எல்.ஐ.சி ஊழியர்கள் 36 மணிநேரத்தில் 3.61 லட்சம் ரூபாய் நிதி வழங்கி மற்ற தரப்பினரை ஊக்கப்படுத்துபவர்களாக உள்ளனர்.

சேதுராமன்
சேதுராமன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சைக் கோட்ட எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சேதுராமன் ``இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் உள்ள எல்.ஐ.சி ஊழியர்கள், அந்தந்த மாநில முதல்வர்களின் பொது நிவாரண நிதிக்கு நேரடியாக நிதி வழங்கணும்னு முடிவெடுத்தோம். தமிழ்நாட்டுல எங்களோட எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கம் எட்டுக் கோட்டங்களாக உள்ளது. தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நன்கொடை வழங்க இலக்கு தீர்மானிச்சிருக்கோம். இந்த நன்கொடையை எல்.ஐ.சி ஊழியர்கள் தனித்தனியாக நேரடியாகவே தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தலாம்னு எல்லாருக்கும் சுற்றறிக்கை அனுப்பினோம்.

நன்கொடை வழங்கியதற்கான ரசீதை சங்கத்திற்கு அனுப்புங்கள்னு சொல்லியிருந்தோம். சுற்றறிக்கையைப் படிச்ச உடனேயே எங்க தோழர்கள் மனமுவந்து மிக வேகமாக நிதி செலுத்த ஆரம்பிச்சிட்டாங்க. நாங்களே எதிர்பார்க்கலை. 36 மணிநேரத்துல 3,61,500 ரூபாய் செலுத்தியிருக்காங்க. இதற்கான ரசீதுகளைச் சங்கத்துக்கு அனுப்பிட்டாங்க. மற்ற தோழர்களும் கொஞ்சமும் சுணக்கம் இல்லாமல், மிகுந்த அக்கறையோடு நிதி அனுப்பிக்கிட்டே இருக்காங்க. இன்னும் சில மணிநேரங்களிலேயே தஞ்சைக் கோட்ட எல்.ஐ.சி ஊழியர்கள் 10 லட்சம் ரூபாய் இலக்கை நிறைவு செஞ்சிடுவாங்கனு எதிர்பார்க்குறோம். எல்.ஐ.சி ஊழியர்கள் சங்கம், தங்களோட நலனுக்காக மட்டுமே செயல்படக்கூடியதல்ல. சமூக நலன்களிலும் கவனம் செலுத்திக்கிட்டு இருக்கோம்.

முதல்வர் நிவாரண நிதி
முதல்வர் நிவாரண நிதி

பல சந்தர்ப்பங்களில் எங்களோட ஊழியர்கள் மிகப் பெரும் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிறைய நிவாரண உதவிகளைச் செய்தோம். குறிப்பா, சீர்காழி பக்கத்துல புதுப்பட்டினம் கிராமத்துலயும், சிதம்பரம் பக்கத்துல முதலிங்கற ஊர்லயும் 70 லட்சம் ரூபாய் செலவுல திருமண மண்டபம் கட்டிக்கொடுத்தோம். அதுல இருந்து வரக்கூடிய வருமானம், அந்தப் பகுதி மக்களின் அடிப்படை வசதிகளுக்கு உறுதுணையாக இருந்துகிட்டு இருக்கு. தானே புயல், சென்னை வெள்ளம், கஜா புயல் பாதிப்புகளின்போது எல்.ஐ.சி ஊழியர்களான நாங்கள் எங்களால் முடிஞ்ச உதவிகளைச் செஞ்சிருக்கோம். அதன் தொடர்ச்சியாகத்தான் இப்ப, கொரோனா தடுப்பு மற்றும் நிவாரணத்துக்குப் பங்களிப்பு செலுத்திக்கிட்டு இருக்கோம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு