Published:Updated:

`சினிமா கோடிகளில் புரளும் தொழில்தான்; ஆனால்..!’ - அனுபவம் பகிரும் தஞ்சை `போஸ்டர் காடி’

சினிமா போஸ்டர் ஒட்டும் தொழிலாளி
News
சினிமா போஸ்டர் ஒட்டும் தொழிலாளி ( ம.அரவிந்த் )

`கொரோனா பாதிப்பால் 4 மாதங்களுக்கு மேலாக தியேட்டர் பூட்டப்பட்டுள்ளது. இதனால் எனக்கு திரைப்படங்களுக்கு போஸ்டர் ஒட்டும் வேலையும் இல்லை.’

Published:Updated:

`சினிமா கோடிகளில் புரளும் தொழில்தான்; ஆனால்..!’ - அனுபவம் பகிரும் தஞ்சை `போஸ்டர் காடி’

`கொரோனா பாதிப்பால் 4 மாதங்களுக்கு மேலாக தியேட்டர் பூட்டப்பட்டுள்ளது. இதனால் எனக்கு திரைப்படங்களுக்கு போஸ்டர் ஒட்டும் வேலையும் இல்லை.’

சினிமா போஸ்டர் ஒட்டும் தொழிலாளி
News
சினிமா போஸ்டர் ஒட்டும் தொழிலாளி ( ம.அரவிந்த் )

கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு பலரது வாழ்கையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது. சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால் தஞ்சாவூரில் போஸ்டர் ஒட்டும் பணி செய்து வந்த ஒருவர், அந்த வேலை இல்லாமல் போனதில் வருமானமின்றி வீட்டிற்குள்ளேயே முடங்கியிருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக வருந்துகிறார்.

போஸ்டர் காடி என்கிற ராஜசேகரன்
போஸ்டர் காடி என்கிற ராஜசேகரன்

தஞ்சாவூர் கரந்தை பகுதியில் வசிப்பவர் போஸ்டர் காடி என அழைக்கப்படுகிற ராஜசேகரன் (65). இவருடைய மனைவி வாசுகி (50). ராஜசேகரன் சினிமா தியேட்டர்களுக்கு போஸ்டர் ஒட்டும் வேலை செய்து வருகிறார். தற்போது திரையரங்கம் மூடப்பட்டுள்ளதால், போஸ்டர் ஒட்டுவதற்கான வாய்ப்பு இல்லாததால் வேலையிழந்த இவர், வீட்டிலேயே முடங்கி இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் குடலிறக்க நோயால் பாதிக்கப்பட அவருக்கு ஆபரேஷனும் செய்யப்பட்டுள்ளது. `என் மகன், என் உயிரை தாங்கி பிடித்திருக்கிறான்’ என நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

இதுகுறித்து போஸ்டர் காடி என்று அழைக்கப்படும் ராஜசேகரனிடம் பேசினோம். ``1974-ல் திரையரங்கம் ஒன்றின் கேன்டீனில் வேலைக்கு சேர்ந்தேன். அப்போது படம் பார்ப்பவர்கள் இருக்கைக்கே சென்று திண்பண்டங்கள் விற்பனை செய்வோம். வண்டிபோல் அங்கும் இங்கும் ஓடி வேலை செய்த என்னுடைய சுறுசுறுப்பைப் பார்த்து என் முதலாளி என்னை காடி என அழைத்ததுடன், போஸ்டர் ஒட்டும் வேலையை செய்ய வைத்தார்.

கொரோனா பாதிப்பால் வேலையிழந்த ராஜசேகரன்
கொரோனா பாதிப்பால் வேலையிழந்த ராஜசேகரன்

எம்.ஜி.ஆர்ன்னா எனக்கு உசுரு. அவர் நடித்த மீனவ நண்பன் படத்திற்க்குத்தான் நான் முதன்முதலில் போஸ்டர் ஒட்டினேன். ஒரு போஸ்டருக்கு 15 பைசா கூலி. எத்தனை போஸ்டர் ஒட்டுகிறோமோ, அதற்கு ஏற்றாற்போல் காசு கிடைக்கும். இதில், மாதம் ரூ.100 கிடைக்கும். அதைக்கொண்டே குடும்பத்தை நடத்தி வந்தேன். தஞ்சாவூர் முழுக்க `போஸ்டர் காடி’ என்றால், என்னை நன்றாகத் தெரியும்.

தற்போது தஞ்சையில் உள்ள முக்கிய தியேட்டர்களுக்கு போஸ்டர் ஒட்டி வருகிறேன். அத்துடன், அரசியல் கட்சிகள், திருமண விழா, பிறந்த நாள் விழா, கண்ணீர் அஞ்சலி என அனைத்துக்கும் போஸ்டர் ஒட்டி வந்தேன். ஒரு போஸ்டருக்கு ரூ.3 லிருந்து 5 ரூபாய் வரை பேசி கூலி வாங்கிக்கொள்வேன். இதன் மூலம் மாதம் ரூ.15,000 வரை வருமானம் கிடைக்கும்.

மனைவியுடன் ராஜசேகரன்
மனைவியுடன் ராஜசேகரன்

பரபரப்பில்லாத இரவு நேரத்தில் போஸ்டர் ஒட்டும் பணியை செய்வேன். உறவினர்கள் உள்ளிட்ட பலர் ஆரம்பத்திலிருந்தே வேற வேலைக்கு போகச் சொன்னார்கள். ஆனால், சினிமாவையும் எம்.ஜி.ஆரையும் நேசித்ததால் 45 வருடமாக இதனை செய்து வருகிறேன். இதில் வந்த வருமானத்தில் குடும்பத்தை ஓட்ட மட்டுமே முடிந்ததே தவிர, வாழ்க்கையில் முன்னேற முடியவில்லை.

மாட்டுக்காரவேலன் பட வெற்றி விழாவிற்காக எங்க தியேட்டருக்கு எம்.ஜி.ஆர் வந்திருந்தார். மேடையில் ஒரே வி.ஐ.பி-க்களாக இருந்தனர். அருகில் சென்று எம்.ஜி.ஆரை பார்க்க வேண்டும், அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என எனக்கு ஆசை. ஆனால், ஒரு கூலியான எனக்கு அது முடியாமல் போனதால், தூரத்தில் நின்றே ரசித்தேன். இப்போதும் என் சொந்த செலவில் எம்.ஜி.ஆருக்காக அவர் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறேன்.

சிவாஜி நடித்த என் ஆச ராசாவே படம் நன்றாக இருந்தும் கூட்டம் வரவில்லை. சிவாஜி அப்போது சூரக்கோட்டையில் இருந்தார். படத்திற்கு விளம்பரம் போதவில்லை. கிராமங்களிலும் போஸ்டர் ஒட்ட வேண்டும் என ஓனர்கிட்ட சிவாஜி கூறினார். இதையடுத்து எல்லா இடத்திலும் ஓடியதுடன், சூரக்கோட்டையில் உள்ள சிவாஜி பண்ணையிலும் போஸ்டர் ஒட்டினேன். இதைக் கவனித்த அவர், உள்ளே அழைத்து சென்று என்னை பாராட்டி அன்பு காட்டினார்.

தஞ்சாவூர் வந்திருந்த நடிகர் மயில்சாமி, என்னை பற்றி அறிந்து என் வீட்டிற்கே வந்து என்னை சந்தித்தார். பண உதவியுடன் பொன்னாடை போர்த்தி பாராட்டினார். அவருடைய பெரிய மனசை எண்ணி நெகிழ்ந்துவிட்டேன். 3 வருடத்திற்கு முன்பு போஸ்டர் ஒட்டும்போது விபத்து ஏற்பட்டு ஒரு வருடம் வீட்டிற்குள்ளேயே முடங்கிவிட்டேன். இப்போது கொரோனா பாதிப்பால் 4 மாதங்களுக்கு மேலாக தியேட்டர் பூட்டப்பட்டுள்ளது. இதனால், எனக்கு திரைப்படங்களுக்கு போஸ்டர் ஒட்டும் வேலையும் இல்லை.

தியேட்டரில் சினிமா போஸ்டர் ஒட்டும் வேலை செய்த ராஜசேகரன்
தியேட்டரில் சினிமா போஸ்டர் ஒட்டும் வேலை செய்த ராஜசேகரன்

இந்நிலையில், குடலிறக்க பிரச்னையில் பாதிக்கப்பட்ட என்னை என் மகன் கடன் வாங்கி ரூ.65,000 செலவு செய்து எனக்கு ஆபரேஷன் செய்துள்ளான். சினிமா கோடிகளில் புரளக்கூடிய பெரிய தொழில். அதையொட்டி வேலை செய்கிற பலருடைய வாழ்க்கை ஜொலிப்பதில்லை. என்னோட நிலையும் அப்படித்தான்.என் மகன் தலையெடுத்த பிறகே, எனக்கு கஷ்டம் குறைந்தது. என் வாழ்கையில் இரண்டு முறை தாங்கிப் பிடித்து என் உசுரைக் காப்பாற்றியிருக்கிறான்’’ என்றார்.