Published:Updated:

`அவர்களையும் கவனிக்கணும்!’ - 120 ஆதரவற்றோரை அரவணைத்த தஞ்சை மாநகராட்சி

ஆதரவற்றவர்கள்
ஆதரவற்றவர்கள்

தலை நிறைய முடியுடனும், அழுக்கு படிந்த தேகத்துடன் இருந்த அவர்களைச் சுத்தமாக்கிப் புதிய உடைகள் அணிவிக்க முடிவு செய்தனர்.

தஞ்சாவூரில் சாலையில் வசித்த ஆதரவற்றவர்கள் கொரோனாவால் பாதிக்கப்படாமல் இருக்க அரசு கல்லூரி ஒன்றில் தங்கவைக்கபட்டுப் பராமரிப்படுவதுடன், அவர்களுக்கு மொட்டையடித்து புது உடைகள் உடுத்த வைத்ததால் ஆளே மாறி அழகாகக் காட்சியளிக்கின்றனர். மனிதநேயமிக்க மாநகராட்சி நிர்வாகத்தின் செயலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

சிகிச்சை
சிகிச்சை

கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் இந்தியா முழுவதும் வரும் 14ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கபட்டு கடைப்பிடிக்கபட்டு வருகிறது. தமிழக அரசும் இதற்காகப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வீட்டை விட்டு யாரும் வெளியே வரவேண்டாம் எனவும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தஞ்சாவூர் நகர்ப் பகுதிகளில் ஆதரவற்றோர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலர் சுற்றித் திரிந்தனர். அவர்களுக்குத் தன்னார்வலர்கள் பலர் தினமும் உணவு கொடுத்து வந்தனர். தொடர்ந்து அவர்கள் பல இடங்களுக்குப் பொது வெளியில் சென்று கொண்டிருந்தனர்.

கொரோனா தடுப்புப் பணி
கொரோனா தடுப்புப் பணி

இவை மாவட்ட நிர்வாகத்திற்குச் சென்றது. இதையடுத்து தெருவில் சுற்றித் திரிந்த 120க்கும் மேற்பட்ட ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிந்துடன் அவர்களை வேன் மூலம் அழைத்துக் கொண்டு சென்று மன்னர் சரபோஜி கல்லூரியில் தங்க வைத்துப் பராமரித்து வருகின்றனர். இவர்களுக்குத் தேவையான உதவிகளை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் ரினிவல் பவுண்டேசன் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.

தலை நிறைய முடியுடனும், அழுக்கு படிந்த தேகத்துடன் இருந்த அவர்களை சுத்தமான மனிதனாக்க முடிவு செய்தனர். அதன்படி இன்று அவர்களுக்குத் தன்னார்வலர்கள் மொட்டையடித்து விட்ட பிறகு குளிக்கவும் வைத்தனர். அதன் பின்னர் புதிய ஆடைகள் கொடுத்து உடுத்திக்கொள்ள வைத்தனர். இதனால் அந்த 120 பேரிடமும் ஒரு வகை இனம் புரியாத மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது என மாநகராட்சி அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா தடுப்புப் பணியில் மாநகராட்சி
கொரோனா தடுப்புப் பணியில் மாநகராட்சி

இதையடுத்து பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தவர்கள் என்பதால் அவர்களுக்குக் கொரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா என மருத்துவக் குழுவினரால் சோதனை செய்யப்பட்டது. நாள்தோறும் அவர்களுக்குச் சுவையான உணவு வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்து அவர்களைப் பராமரிப்பில் வைத்துக்கொள்ளவும் முடிவு செய்யபட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு