Election bannerElection banner
Published:Updated:

`தேங்காய் வியாபாரத்துக்கு மாறிய மிட்டாய் தாத்தா!' - ஊரடங்கிலும் உதவும் 114 வயது உழைப்பாளி

மிட்டாய் தாத்தா
மிட்டாய் தாத்தா

கொரோனாவால எல்லோரும் வேலையில்லாம தவிக்கிறாங்க. அதைப் பாக்க எனக்கு மனசில்லை. அதனால் என்னால முடிஞ்ச உதவியை செய்யனும்னு நினைக்கிறேன்.

உழைப்பாளர் தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்தநேரத்தில் தஞ்சாவூரில் மிட்டாய் தாத்தா என அழைக்கப்படுகிற முதியவர் ஒருவர், 114 வயதான நிலையிலும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் தேங்காய் வியாபாரம் செய்து வருவது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மிட்டாய் தாத்தா
மிட்டாய் தாத்தா

தஞ்சாவூரில் தள்ளாத வயதிலும் மிட்டாய் வியாபாரம் செய்து அதில் வரும் வருமானத்தின் மூலம் உடலில் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வரும் 114 வயதுடைய முதியவரான மிட்டாய் தாத்தா என்பவரை பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறோம்.

தற்போது கொரோனா ஊரடங்கினால் இவரால் மிட்டாய் வியாபாரம் செய்ய முடியாமல் போனதையடுத்து தேங்காய் வியாபாரம் செய்ய தொடங்கியதன் மூலம் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாகவும் மற்றவர்களுக்குப் பாடமாகவும் இருக்கிறார்.

தஞ்சாவூர் ஆடக்காரத்தெருவில் வசிப்பவர் முகமது அபுசாலி. அப்பகுதியினர் இவரை மிட்டாய் தாத்தா என்றே அழைக்கிறார்கள். தன்னுடைய 50 வயதில் பர்மாவில் இருந்து தஞ்சாவூர் வந்த இவருக்கு தற்போது 114 வயதாகிறது. தொடக்கத்தில் டீக்கடையில் வேலை பார்த்தவர், அதன்பிறகு தேங்காய், இஞ்சி, குளுக்கோஸ் மிட்டாய்களைத்தானே சொந்தமாகத் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார். தட்டில் மிட்டாய்களை எடுத்து கொண்டு தஞ்சையின் பல பகுதிகளுக்கு நடந்தே சென்று விற்பனை செய்வார். அப்போது, `மிட்டாய்' `மிட்டாய்' என அடிக்குரல் எடுத்து சத்தமிடுவார்.

தேங்காய் விற்கும் மிட்டாய் தாத்தா
தேங்காய் விற்கும் மிட்டாய் தாத்தா

குழந்தைகளை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அந்தச் சத்தமே ஈர்க்க வைத்ததுடன் அவரின் டிரேட் மார்க்காகவும் மாறிப்போனது. இதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்தி வந்தார். இவரைப் பற்றி விகடன் இணையத்தளத்தில் எழுதிய பிறகு மாவட்ட நிர்வாகம், இவருக்கு முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கு வழிவகை செய்தது. இவரின் தன்னம்பிக்கையை எடுத்துக்காட்டும்விதமாக சமூக ஆர்வலர்கள் பலரும் இவருக்குப் பாராட்டு விழா நடத்தினார்கள்.

இந்த நிலையில் தற்போது கொரோனா ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் மிட்டாய் வியாபாரம் செய்ய முடியவில்லை. உழைத்துப் பழக்கப்பட்டவருக்கு சும்மா முடங்கி இருக்கவும் முடியவில்லை. அதனால் தான் வசிக்கும் இடத்திலேயே தேங்காய் வியாபாரம் செய்ய தொடங்கியுள்ளார்.

மிட்டாய் தாத்தா
மிட்டாய் தாத்தா

இதுகுறித்து முகமது அபுசாலியிடம் பேசினோம். ``எனக்கு முதியோர் உதவித்தொகை கிடைத்த பிறகும் மிட்டாய் வியாபாரத்திற்கு செல்வதை நிறுத்தவில்லை. ஏன் என்றால், என்னிடம் கஷ்டம் என யார் வந்து உதவி கேட்டாலும் உடனே கையில் இருப்பதைக் கொடுத்து உதவுவேன். எனக்கென யாரும் இல்லை, என்னை அரவணைத்து கொண்ட இந்த பகுதியில் உள்ள குடும்பங்கள்தான் என் சொந்தங்கள்.

தினமும் கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்துபவர்கள்தான் இந்தப் பகுதியில் அதிகம் வசிக்கிறார்கள். கொரோனாவால் எல்லோரும் வேலையிழந்து தவிக்கின்றனர். அதைப் பார்க்க எனக்கு மனமில்லை. என்னால் முடிந்த உதவியை செய்யனும். என்னைப் போன்ற முதியோர்கள் சிலரும் அவ்வப்போது என்னிடம் வருவார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கும் எதாவது கொடுப்பேன். அதற்கு நான் ஏதோ ஒரு வகையில் வேலை செய்து வருமானம் பார்க்க வேண்டும், என் கையில் கொஞ்சம் காசும் இருக்க வேண்டும்.

மிட்டாய் தாத்தா
மிட்டாய் தாத்தா

தற்போது மிட்டாய் வியாபாரம் செய்ய முடியவில்லை அதான் பார்த்தேன், என் இருப்பிடத்தையே சின்ன தேங்காய்க் கடையாக மாற்றிவிட்டேன். என்னால் மொத்தமாக தேங்காய்களை வாங்கித் தூக்கி கொண்டு வர முடியாது. அதற்கு சிலர் உதவி செய்கின்றனர். ஒரு நாளைக்கு 50 தேங்காய் வரை விற்கிறது. இதில் தினமும் எனக்கு 100 ரூபாய் லாபம் கிடைக்கிறது.

முடியாதவர்கள் சிலர் கடனாக தேங்காய் கேட்பார்கள், கொடுப்பேன். முன்னாடி மிட்டாய் மிட்டாய் என கத்துவேன் இப்போது தேங்காய் எனக் கத்துகிறேன். என்னை பொறுத்தவரை யாரிடமும் கை நீட்டி சும்மா காசு வாங்கக் கூடாது. பொய் பேசக் கூடாது. உழைத்து வாழ வேண்டும். கஷ்டம் என வந்து நிற்பவர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும். அதற்காகவே தொடர்ந்து ஓடி கொண்டிருக்கிறேன்" என்றார் இயல்பாக.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு