Published:Updated:

`எங்க மகள் மட்டுமல்ல; 23 பேரும் மீட்கப்பட வேண்டும்!' - தஞ்சைப் பெற்றோரின் 6 ஆண்டுப் போராட்டம்

இமாகுலேட்
இமாகுலேட்

முதலில் உடலை மீட்டுத் தாருங்கள் என்றோம். இப்போது அவள் உயிருடன் இருப்பதை அறிந்து உயிருடன் இருக்கிறார் மீட்டுத் தாருங்கள் என்கிறோம்.

தஞ்சாவூர் தம்பதி ஒருவரின் மகள் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்றார். ஆனால், அங்கு அவர் இறந்துவிட்டதாக தகவல் வர பல போராட்டங்களுக்குப் பிறகு அவர் உடலை மீட்டு அடக்கம் செய்தனர். 5 வருடத்திற்குப் பிறகு அவள் உயிருடன் இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்த அவர்கள் முன்பு உடலை மீட்கப் போராடினோம். இப்போது உயிருடன் இருப்பவரை மீட்கப் போராடுகிறோம். ஒரு பெற்றோராக நாங்க அடைந்த துயரத்திற்கு அளவே இல்லை. சீக்கிரமே எங்க மகள் மீட்கப்பட வேண்டும் எனக் கண்களில் நீர் கசிய தெரிவிக்கின்றனர்.

இமாகுலேட்
இமாகுலேட்

தஞ்சாவூர் பிலோமினா நகர் பகுதியைச் சேர்ந்த தம்பதியர் அந்தோணி யாகப்பா பவுலின் மார்த்தாள். சவுதி அரேபியாவிற்கு வேலைக்குச் சென்ற இவர்களது மகள், தற்கொலை செய்து கொண்டுவிட்டதாகக் கூறியதையடுத்து ஒருவருடப் போராட்டத்திற்குப் பிறகு உடலைமீட்டு அடக்கம் செய்தனர். ஆனால், தற்போது `எங்களது மகள் உயிருடன் கொத்தடிமையாக இருக்கிறாள். அவளை மீட்டுத்தர வேண்டும்' என நேரடியாக டெல்லிக்கே சென்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் மனு கொடுத்துவிட்டு, மகள் வருவார் எனக் கண்ணீர் மல்க காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து இருவரிடமும் பேசினோம். ``எங்கள் மகள் இமாகுலேட். கம்ப்யூட்டர் பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்துள்ளார். குடும்ப வறுமை காரணமாக ஒரு பெண்ணாக இருந்தும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, தைரியமாக வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல முடிவெடுத்தார். அதன்படி தஞ்சை அய்யம்பேட்டையில் டிராவல்ஸ் நடத்தி வரும் புஹாரி என்பவர் மூலமாக சவுதிஅரேபியா நாட்டிற்குக் கடந்த 2012ம் ஆண்டு கம்ப்யூட்டர் தொடர்பான பணிக்குச் சென்றார்.

இமாகுலேட்
இமாகுலேட்

போன் பயன்படுத்தக் கூடாது என்பதால் வீட்டின் உரிமையாளர் போனிலிருந்து எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் சில மாதங்கள் கழித்து 2013ம் வருடம் மே மாதம் 5ம் தேதி எங்களுக்கு போன் செய்த இமாகுலேட், `இங்கு வேலை கஷ்டமாக இருக்கிறது. எனக்கு கம்ப்யூட்டர் தொடர்பான வேலை தரவில்லை. வீட்டு வேலை செய்துகொண்டிருக்கிறேன். என்னை ரொம்ப கொடுமைப்படுத்துகிறார்கள். நம்மை அனுப்பிய ஏஜென்ட் புஹாரியிடம் கூறி உடனே, என்னை அழைத்துக்கொள்ளுங்கள்' என அழுது கொண்டே கூறினார். அங்கே எங்க மகள் என்ன பாடுபட்டுக்கொண்டிருக்கிறாளோ எனப் பதறிப்போன நாங்கள் உடனே ஏஜென்ட் புஹாரியிடம் போய் அழுதுகொண்டே, `மகளை திரும்ப அழைப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள்' என்றோம். ஆனால், அவர் எங்களிடம் முறையான பதில் எதுவும் கூறவில்லை.

135 வருடங்களுக்குப் பிறகு தன் வேர்களைத் தேடி கரூர் வந்த தென்னாப்பிரிக்க தமிழச்சி!

அதற்குப் பிறகு இமாகுலேட் எங்களிடம் போன் பேசவே இல்லை. இந்தநிலையில் அதே வருடம் மே மாதம் 21ம் தேதி என் மகள் வேலைசெய்த வீட்டின் உரிமையாளர் போன் செய்து இமாகுலேட் தூக்குப்போட்டு இறந்து விட்டதாகவும், `தூதரகத்தைத் தொடர்பு கொண்டு உடலைப் பெற்றுக்கொள்ளவும்' எனக் கூறிவிட்டு போனை கட் செய்து விட்டார். எங்களுக்குத் தூக்கி வாரிப்போட்டது. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக சிரித்துக்கொண்டே சென்றவள். இப்போது சடலமாகத் திரும்பி வரப்போறாளே என நினைத்தபோது தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது.

இமாகுலேட்
இமாகுலேட்

சரி என உடலைக்கொண்டு வருவதற்கு இங்கிருந்தபடியே முயற்சிகள் செய்தோம். இமாகுலேட் வேலை செய்த வீட்டின் உரிமையாளர் உடலை அனுப்பி வைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அத்துடன் செல்போனையும் சுவிட்ச் ஆப் செய்து விட்டார். அழுது புலம்பியபடியே மகளின் உடலை மீட்டுத்தர வேண்டும் எனத் தஞ்சை கலெக்டர் முதல் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு வரை நாங்கள் பல மனுக்கள் அனுப்பிக் காத்திருந்தோம். ஆனால், மகள் உடல் ஊருக்கு வந்து சேரவில்லை. இறந்த மகளின் முகத்தைக்கூடப் பார்க்கமுடியவில்லையே என நாங்க கண்ணீர் வடிக்காத நாள்களே இல்லை.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மகளின் உடலை மீட்டுத் தரவேண்டும் என ரிட் மனுத் தாக்கல் செய்தோம். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எங்கள் மகள் இறப்பை சந்தேக மரணம் எனப் பதிவு செய்ததுடன், உடலைக் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. பின்னர் 2014ல் ஜனவரியில் என் மகள் உடல் வந்து சேர்ந்தது. திருச்சியில் வைத்து பெட்டியைத் திறந்து காட்டியபோது எங்களுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. ஏனென்றால் பெட்டியில் வந்தது எங்க மகள் இல்லை. அவர் சாயலில் உள்ள வேறொருவர். என் மனைவி, `இமாகுலேட் நீ எங்கம்மா இருக்க?' என அதே இடத்தில் கதறினாள். `இது எங்க மகள் இல்லை' எனக் கூறியதுடன் மீண்டும் நீதிமன்றம் போனோம். அங்கு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து எங்க மகள் தானா என உறுதிப்படுத்துங்கள் என உத்தரவிட்டனர். கிட்டத்தட்ட எட்டு மாசம் திருச்சி மருத்துவமனையிலேயே உடல் இருந்தது. அதன் பிறகு டி.என்.ஏ டெஸ்ட் எடுத்து அதன் ரிசல்ட் வந்தது. சென்னைத் தடயவியல் அதிகாரிகள் கூறியதை வைத்து இந்த உடல் உங்க மகளோடது தான் என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இமாகுலேட்
இமாகுலேட்

சரி வேறு வழியில்லை என அரை மனதுடன் அந்த உடலை வாங்கி வந்து ஒரு பெற்றோராக என்ன செய்ய வேண்டுமோ அந்தக் கடமையைச் செய்து நாஞ்சிக்கோட்டையில் உள்ள கல்லறையில் அந்த உடலை அடக்கம் செய்தோம். அப்போதும் நாங்கள் உறுதியாக இது எங்கள் மகள் இல்லை அவள் நிச்சயம் உயிருடன் இருப்பாள் என உறவினர்களிடம் கூறினோம். சிலர் நாங்கள் ஏதோ மகள் பாசத்தில் இப்படிப் பேசுவதாக நினைத்துக் கொண்டனர்.

Vikatan

ஆனால், எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. கடந்த ஜனவரி மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழகத்தைச் சேர்ந்த 23 பெண்கள் சவுதியில் கொத்தடிமைகளாக உள்ளனர் என வீடியோவுடன் செய்தி வந்தது. அப்போது நாங்கள் அந்தச் செய்தியைப் பார்த்துக்கொண்டிருந்தோம். அதில் எங்கள் மகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனோம். பின்னர் நாங்க அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை.

இமாகுலேட் பள்ளி போட்டோ
இமாகுலேட் பள்ளி போட்டோ

உடனே நேரடியாக டெல்லிக்குச் சென்று பிரதமர், உள்துறை அமைச்சர் அலுவலகங்களில் நடந்தவற்றை விளக்கமாக எழுதி மனு கொடுத்தோம். கிட்டத்தட்ட பத்து மாதம் ஆச்சு. ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. பத்து மாதம் வயிற்றில் வைத்து பெற்றெடுத்த தாயிற்குத்தானே தெரியும் அதன் வலியும் வேதனையும். முதலில் உடலை மீட்டுத் தாருங்கள் என்றோம். இப்போது அவள் உயிருடன் இருப்பதை அறிந்து உயிருடன் இருக்கிறார் மீட்டுத் தாருங்கள் என்கிறோம். ஆனால், அதிகாரிகளுக்கும் சரி, இந்த அரசுகளுக்கும் சரி எங்க வேதனையைப் புரிந்துகொள்ள முடியவில்லை. மீண்டும் நீதிமன்றத்திற்குச் சென்று எங்க மகளை மீட்டுத் தரச் சொல்லவிருக்கிறோம். அவள் என்ன நிலையில் இருக்கிறார், என்ன பாடுபடுகிறார் என நினைக்கும் போது ஒரு பெற்றோராக எங்க மனசு பதறித் தவிக்குது. அவளை மட்டுமல்ல அந்த 23 பேரும் சீக்கிரமே மீட்கப்பட வேண்டும்'' என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு